தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை ஒன்றிய அரசு அளிக்கவில்லையானால், திராவிடர் கழகம் மீனவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தும்!

Viduthalai
5 Min Read

கண்ணீர்க் கடலில் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்க்கை!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரண்டாண்டுகள் சிறை என்பது அதிர்ச்சிக்குரியது!
பிடிபட்ட படகுகளை ‘‘கடல் ரோந்துக்குப்’’ பயன்படுத்துவார்களாம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

தமிழ்நாட்டு மீனவர்களைக் கைது செய்வதும், இரண்டாண்டு சிறைத் தண்டனை கொடுப்பதும், அவர்களின் படகுகள் உள்பட பொருள்களைப் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக உள்ளது. இதற்கு ஒன்றிய அரசு ஒரு முடிவு கட்டவில்லையென்றால், திராவிடர் கழகம் முன்னின்று போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
ஆற்றாது அழுத கண்ணீர் தமிழ்நாட்டின் மீனவர் குடும்பங்களிலெல்லாம் ஆறாய்ப் பெருகி கடலை நிறைக்கிறது.

ஜெகதாபட்டினம் மீனவர் பிரதிநிதிகள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
நேற்று (20.11.2024) புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவத் தோழர்கள் நம்மைச் சந்தித்தனர். அவர்கள் தெரிவித்த செய்திகள், துயரம் பொங்குகிறது – நமக்குப் பெரும் வேதனையைத் தருகின்றன.
கடந்த ஓராண்டில் மட்டும், ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 21 மீனவர்கள் இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் ஆறுமாதம் முதல் ஓராண்டு வரை சிறைத் தண்டனை பெற்று இலங்கைச் சிறைகளில் வாடி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 11 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த நவம்பர் 12 ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுவரை இத்தனை பேர் இப்படி ஒரு கொடுமையைச் சந்தித்தது இல்லை. கடந்த ஆண்டு நவம்பரில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு இலங்கை கடல் எல்லையில் நுழைந்ததற்காக இரண்டாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இம்முறை 11 பேருக்கு இரண்டாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை யாரும் எதிர்பாராத ஒன்றாகும். அதிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உதயக்குமார் என்பவரது மகன்கள் ரவீந்திரன் (42), உலகநாதன் (38), வைத்தியநாதன் (30), அருள்நாதன் (29) ஆகிய நால்வரும், அதேபோல் மதியழகன் என்பவரது மகன்கள் மதன் (27), மகேந்திரன் (20) ஆகிய இருவரும், 66 வயது நிரம்பிய முனிவேல் என்ற பெரியவரும், மேலும் குமரேசன் (37), விஜய் (31), சிவக்குமார் (28), கருப்பசாமி (26) ஆகிய பதினொரு பேருக்கும் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடவில்லை!
இந்தக் குடும்பங்களின் நிலையை எண்ணிப் பார்க்க அதிர்ச்சியால் குருதி உறைகிறது! இவர்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டவர்கள் அல்லவே! வாழ்வாதாரத்திற்காகக் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும் தொழிலைக் காலம்காலமாகச் செய்து வருபவர்கள். உயிரைப் பணயம் வைத்துக் கடலில் சென்று மீன்பிடிப்பவர்கள். கடலின் எல்லைகளைக் கணிக்க இன்று கருவிகள் வந்திருப்பினும், அலையின் போக்கில், காற்றின் திசையில் இழுத்துச் செல்லப்பட்டு மீண்டும் சரியான திசைக்குத் திரும்புதல் என்பதெல்லாம் இயல்பானவை.
இதுவரை கைது, வலைகள் அறுப்பு, துப்பாக்கிச் சூடு, கண்மூடித்தனமான தாக்குதல் என்று இலங்கைக் கடற்படை எத்தனையோ அத்துமீறல்களைச் செய்துள்ளது. ஏராளமான தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய அரசு அதற்கான நிரந்தரத் தீர்வுக்கு எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. படகுகள் சிறைப்பிடிப்பு, மீனவர்கள் கைது என்றெல்லாம் அண்மைக்கால நடவடிக்கைகள் இருந்துவந்தாலும், ஒட்டுமொத்தமாக இரண்டாண்டுகள் தண்டனை என்பது அவர்களது குடும்பங்களைப் பெரிதும் நிலைகுலையச் செய்வதாகும்.

160 படகுகள் சிறைப்பிடிப்பு!
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு இருக்கும் பெரும் சிக்கல், கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்திருப்பதால், இந்தியாவின் கடல் எல்லை பெரிதும் குறைந்திருப்பதே ஆகும். அது குறித்து ஒன்றிய அரசு வாய்திறக்க மறுக்கிறது.
தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட படகுகளை கடலில் ரோந்துக்காக பயன்படுத்த இருப்பதாக இன்று (21.11.2024) வெளிவந்துள்ள

செய்தி இலங்கை அரசின் அடாவடித்தனத்தின் உச்சம்!
அண்மையில், இலங்கையில் ‘ஜனதா விமுக்தி பெரமுன’ தலைவர் திசநாயகா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேர் இத்தகைய பெரும் தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர். ஒன்றிய அரசு இதில் உடனடியாகத் தீவிர கவனம் செலுத்தி, இம் மீனவர்களை விடுவிக்க, இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலாவது, படகுகள் திரும்ப அளிக்கப்படுவதுண்டு. ஆனால், பா.ஜ.க. ஆளும் கடந்த சில ஆண்டுகளில், ஜெகதாபட்டினத்தில் மட்டும் 160 படகுகள் இலங்கை அரசால் பிடிக்கப்பட்டுள்ளதுடன், அவை எதுவும் திருப்பியளிக்கப்படவில்லை என்பது அவர்களின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கக் கூடியதாகும்.
குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அனுமதி இல்லை என்பது தான் இந்திய –இலங்கை கடல் எல்லைகளுக்குள் அவர்களை அல்லாடச் செய்கிறது.

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் பிரச்சினை!
ராமேஸ்வரத்திலிருந்து தென்பகுதியில் உள்ள மீனவர்களுக்கு தெற்கில் ஆழ்கடல் மீன்பிடிப்பு வாய்ப்புண்டு. வேதாரண்யத்திற்கு வடக்கே உள்ளோருக்கு கிழக்கில் வங்கக் கடலில் தங்கி மீன்பிடிக்க வசதியுண்டு. புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கும் அதற்கான ‘தங்குகடல்’ மீன்பிடி அனுமதி வழங்கப்படுதல் இம் மீனவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.

தி.மு.க. தலைமைச் செயற்குழுவின் தீர்மானம்!
நேற்று (20.11.2024) தி.மு.க. உயர்நிலைச் செயல் திட்டக்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானமும் தமிழ்நாட்டு மீனவர்கள் சந்திக்கும் இன்னல்களைத் தீர்க்க ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
அதேபோல, பாகிஸ்தான் சிறையில் வாடும் தமிழ்நாட்டின் 7 மீனவர்கள் உள்பட 14 இந்திய மீனவர்கள் மீட்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் நேற்று (20.11.2024) வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்த நிலையில், இந்தியக் கடற்படை அவர்களை மீட்டுள்ளது. மீனவர்களில் ஏனிந்த பாரபட்சம்?
மீன்வளத்தின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்து வதை “நீலப் புரட்சி” என்று வர்ணித்துத் திட்டம் தீட்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, மீனவர்கள் சந்திக்கும் இத்தகைய சிக்கல்களுக்குத் தீர்வு காண என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

திராவிடர் கழகம் முன்னின்று போராட்டம் நடத்தும்!
தமிழ்நாட்டின் மீனவர்களின் உரிமையை, உயிரைக் காக்க நெடுங்காலமாக நாம் போராடி வருகிறோம். இத்தகைய பிரச்சினைகளில் ஓரணியில் திரள வேண்டியது அவசியமாகும்.
மீனவர்கள் தங்களுக்கிடையே உள்ள சிறு சிறு மாச்சரியங்களை மறந்து, ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும் என்பதே நமது அன்பான வேண்டுகோள். அவர்களுடன் என்றும் துணை நின்று போராடுவோம்!
தமிழ்நாட்டு அரசின் குரலுக்கும், தமிழ்நாட்டு மீனவர்களின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் மதிப்பளித்து ஒன்றிய பா.ஜ.க. அரசு உரிய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், அதற்கான போராட்டத்தைத் திராவிடர் கழகம் முன்னின்று நடத்துவது தவிர்க்க முடியாததாகும்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
21.11.2024

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *