சென்னை, பெரியார் திடலில் நவம்பர் 16, 17 ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற, கழகச் சொற்பொழிவாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை மிகவும் பயனுள்ளதாகயிருந்தது. நான் 1967 ஆண்டு முதல் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசிக் கொண்டு இருக்கிறேன். நான் மாணவனாகயிருந்தபொழுது தந்தை பெரியார் நடத்திய பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டுள்ளேன். அதனால்தான், இன்று வரை சொற்பொழிவாளனாக உள்ளேன். அன்று முதல் இன்று வரை மாணவர்களுக்குதான், இளைஞர்களுக்குதான் பயிற்சி முகாம் நடத்தப்பட்டன. ஆனால், இப்பொழுது தான் சொற்பொழிவாளர்களுக்கே பயிற்சி வகுப்பு நடைபெறுவதைக் காண்கிறேன்.
இதன் பொருள் என்னவென்றால், தந்தை பெரியார் தன் கொள்கைகளைப் பரப்புவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகளில், கொஞ்சமும் குறையாமல் தமிழர் தலைவர் நம் ஆசிரியர் அப்பணியைத் தொடர்கிறார் என்பது நமக்கெல்லாம் பெருமையளிக்கிறது.
நவ.16,17 ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சியில் நிறைய பயன் பெற்றோம். நேரு பிரதமராக இருந்தபொழுது – இந்திய வெளியுறவுக் கொள்கையில் – பஞ்சசீலக் கொள்கை என்ற ஒரு புதிய வரலாறு படைத்தார். அதுபோல, நம் தலைவர் எடுத்த வகுப்பில் – நம் இயக்கம் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதற்கு நான்கு நெறிமுறைகளை விளக்கி உரையாற்றினார். அவையாவன,
1. உத்தமமான தலைவர்
2. உண்மையான தொண்டர்கள்
3. உறுதியான கொள்கைகள்
4. யோக்கியமான பிரச்சாரர்கள்
ஆகியனவாகும். இந்த நான்கு கொள்கைகளுக்கும் அவர் எடுத்துரைத்த எடுத்துக்காட்டுகள் மிகவும் ஏற்புடையதாகவும், சொற்பொழிவாளர்களுக்கு ஆணித் தரமான பதிவாகவும் இருந்தன. தந்தை பெரியாரின் கொள்கைகள், ‘சத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட தல்ல; நேர்மையை உண்மையை அடிப்படையாகக் கொண்டவை’’ என்பது போன்ற விளக்கங்கள் அருமையாக இருந்தன.
சுயமரியாதை இயக்கம், பார்ப்பன வைதீக எதிர்ப்பு ஆகிய இரு கொள்கைகளை,
1. தந்தை பெரியாருக்குமுன்
2. தந்தை பெரியார் காலத்தில்
3. தந்தை பெரியார் காலத்திற்குப்பின்’’ என்று பிரித்து வகுப்பெடுத்தது விளக்கத்தை அளித்தது.
இறுதியாக, தந்தை பெரியார் என்று கூற வேண்டும் – பெரியார் என்று கூறக் கூடாது என்று, நம் தலைவர் பேசியது முக்கியமானது.
மற்றும் வகுப்பு எடுத்த துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள், தந்தை பெரியார் அதிக நேரம் பேசியது 1956ஆம் ஆண்டில் நடைபெற்ற மயிலாடுதுறை பொதுக் கூட்டம் என்ற வரலாற்று சான்றை எடுத்துரைத்தார்.
மற்றும் திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீ., பேராசிரியர் வீ. அரசு, அ. கருணாந்தம், ‘தலித் முரசு’ புனித பாண்டியன், இன்றைய ‘சைபர் கிரைம்’ – குறித்து பேசிய தோழர், நம் இயக்கத் தோழர்கள் கோ. ஒளிவண்ணன், வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோரும் சிறப்பான கருத்துகளை தேவையான நேரத்தில் எடுத்துரைத்தனர்.
இரு நாட்களிலும் நம் தலைமை சரியான உணவு, இருப்பிட ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய் திருந்தமைக்கு சொற்பொழிவாளர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
பேராசிரியர் பூ.சி. இளங்கோவன்
கழகச் சொற்பொழிவாளர்