திருப்பதி, நவ.20 திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்றுமத ஊழி யர்களை நீக்க அல்லது கட்டாய ஓய்வு அளிக்க அரசிடம் பரிந்துரை செய்வது என தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ் தானத்தின் அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமையில் 18.11.2024 அன்று திருமலையில் நடைபெற்றது. புதிய அறங்காவலர் குழு பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் குறித்து அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு, தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஏழுமலையானை வழிபட பக்தர்கள் அதிக நேரம் காத் திருக்கும் நிலை உள்ளது. இதை தவிர்த்து 2 அல்லது 3 மணி நேரத் திற்குள் பக்தர்கள் வழிபட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப் படும். திருமலை திருப்பதி தேவஸ் தானத்தில் பணியாற்றும் வேற்றுமத ஊழியர்களை நீக்க அல்லது கட்டாய ஓய்வு அளிக்க அரசிடம் பரிந்துரை செய்வது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் தேவஸ்தான நிதியில் கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு ’கருட பாலம்’ என பெயர் சூட் டப்படும். அலிபிரியில் சுற்றுலா கழகம் மூலம் 20 ஏக்கர் நிலம் கடந்த ஆட்சியில் மும்தாஜ் ஓட்டல் நிறுவனத்தாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை அறங்காவலர் குழு ரத்து செய் கிறது. ஆன்மிக திருத்தலமான திருமலையில் அரசியல் பேச தடை விதிக்கப்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் பிற மாநில சுற்றுலா துறைகளுக்கும், ஆந்திர அரசு போக்குவரத்து கழகத்திற்கும் ரூ.300 சிறப்பு வழிபாட்டு சீட்டுகள் ஒதுக்கப்படுகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது தெரியவந்ததால் இவை அனைத்தும் ரத்து செய்யப் படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.