இம்பால், நவ.20- மணிப்பூரில் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைத்தும், அரசு அலுவலகங்களுக்கு பூட்டுப்போட்டும் வன்முறையாளர்கள் வெறியாட்டத்தில் இறங்கினர். வன்முறையை கட்டுப்படுத்த 5 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் விரைகிறார்கள்.
மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து பிரச்சினையால் மெய்தி, குக்கி இன மக்களுக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் வெடித்த கலவரம் ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கிறது. கடந்த சில மாதங்களாக சற்றே ஓய்ந்திருந்த இந்த மோதல்கள், இந்த மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் வேகமெடுத்தது. இதில் உச்சபட்சமாக ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 11ஆம் தேதி குகி இனத்தை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக மெய்தி இனத்தை சேர்ந்த 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை குகி பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர். அதில் 5 பேரின் உடல்கள் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டன. இது மெய்தி இனத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
துப்பாக்கிச் சூடு
இதைத்தொடர்ந்து மாநி லம் முழுவதும் மீண்டும் கலவ ரம் மூண்டுள்ளது. பல மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என 10-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளை சூறையாடி தீ வைத்தனர். முதலமைச்சர் பைரேன் சிங்கின் பூர்வீக வீடு மீதும் தாக்குதல் முயற்சி நடந்தது. ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வன்முறையில் இறங்கிய கும்பல் மீது துப்பாக்கிச்சூடு நடந் தது. இதில் இளைஞர் ஒருவர் கொல்லப் பட்டார். அவரை பாதுகாப்புப் படையினர் கொன்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கட்சி அலுவலகங்கள் எரிப்பு
அங்குள்ள பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் அலுவலகங்களுக்கு நேற்று வன்முறையாளர்கள் தீ வைத்தனர். அத்துடன் சட்டமன்ற சுயேச்சை உறுப் பினர் ஒருவரின் வீட்டையும் சூறையாடி கொளுத்தினர். இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் மெய்தி மக்களிடம் செல்வாக்கு பெற்ற அமைப்பான ‘மணிப்பூர் இறையாண்மைக்கான ஒருங்கிணைப்புக் குழு’வைச் (கோகாமி)சேர்ந்தவர்கள் களத்தில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அரசு அலுவலகங்களுக்கு பூட்டு
மாநிலத்தில் 12 ஆண்டாக நீடிக்கும் கலவரத்தை அடக்க ஒன்றிய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டிய அவர்கள், 18.11.2024 அன்று ஒன்றிய-மாநில அரசுகளின் அலுவலகங்களுக்கு பூட்டுப் போட்டனர். அந்தவகையில் தலைநகரில் உள்ள தலைமை தேர்தல் அதி காரி அலுவலகத்தின் பிரதான கேட்டுக்கு சங்கிலி மற்றும் பூட்டுபோட்டு பூட்டினர்.
காலவரையற்ற ஊரடங்கு
மாநிலத்தின் பல பகுதிகளில் மீண்டும் வன்முறை மூண்டதை தொடர்ந்து இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு, பிஷ்ணுபூர், தவுபல் உள்பட இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மாவட்டங்களில் கடந்த 16ஆம் தேதி முதல் காலவரையற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் 2 நாட்களுக்கு இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டது. இது நேற்று காங்போபி, சூரச்சந்த் பூர் மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டதுடன், 20ஆம் தேதி வரை இந்த நடவடிக்கை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொதி நிலையில் மக்கள்
மறுபுறம் மாநிலம் முழுவதும் காவல்துறையினருடன் இணைந்து ராணுவமும் வன்முறையை கட்டுப் படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்து வருகின்றனர். ஆனாலும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. மாநிலம் முழுவதும் பெரும் கொதி நிலையில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக் கின்றன.
மாநில அரசில் சலசலப்பு
மணிப்பூரில் மீண்டும் கட்டுக் கடங்காத வன்முறை மூண்டிருப்பது, மாநில அரசிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வன்முறையை தடுக்கத் தவறியதாக கூறி தேசிய மக்களின் கட்சி ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகியது. இதைத்தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை 18.11.2024 அன்று முதலமைச்சர் பைரேன்சிங் கூட்டினார். இதில் மாநில சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. 60 உறுப்பினர் கொண்டுள்ள சட்ட மன்றத்தில் 32 உறுப்பினர்கள்கள் பா.ஜனதாவுக்கு இருப்பதால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றாலும், சட்டமன்ற பா.ஜ.க. உறுப்பினர்களே ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதிராக திரும்பியுள்ளனர் என்பதும் குறிப் பிடத்தக்கது.
பதவி விலகல்
அதேநேரம் பா.ஜனதாவுக்குள்ளும் அதிருப்திகள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் மாநில பா.ஜனதாவின் எஸ்.சி. பிரிவு துணைத்தலைவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். இதைப்போல வன்முறைக்கு முற்றுப் புள்ளி வைக்காவிட்டால், தாங்கள் பதவி விலகப் போவதாக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர் மிரட்டல் விடுத்துள்ளனர். இதைப்போல பா.ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பி னர்கள் சிலரும் பதவி விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அமித்ஷா பதவி விலக வேண்டும்
இதற்கிடையே மணிப்பூரில் பா.ஜன தாவின் இரட்டை என்ஜின் அரசு முற்றிலும் தோல்வி அடைந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகவேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய் ராம்ரமேஷ் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் உள் துறை அமைச்சர் அமித்ஷா நேற்று 2-ஆவது நாளாக ஆலோசனை நடத்தினார். மணிப்பூரில் கூடிய விரைவில் நிலைமையை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். மணிப்பூரில் நிலவரம் மோசமடைந் துள்ளதை தொடர்ந்து அங்கு பாது காப்பு பணிகளுக்காக 5 ஆயிரம் துணை ராணுவப்படை களை அனுப்ப உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.