தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் விறுவிறுப்பு 77 கிராம குழுக்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்!

viduthalai
3 Min Read

சென்னை, நவ.19- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை கிராம வார்டுகள் முதல் அனைத்து நிலைகளிலும் மறுசீரமைத்து பலப்படுத்தி பொதுமக்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைத்து கட்சியின் சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளின் தேவைகளை இன்றைய இளைய தலைமுறையினருக்கு உணர்த்துவது என்பது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையின் மிகப்பெரிய கனவு ஆகும். அதை நிறைவேற்ற, காங்கிரஸ் கட்சி மீது நன்மதிப்பு கொண்டுள்ள வெகுஜன மக்களை குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினரை புதிதாக உருவாக்கும் கிராம கமிட்டிகளில் இடம்பெற செய்ய வேண்டும்.

மேலும், கிராம கமிட்டி பொறுப்பாளர்களாக வடசென்னை கிழக்கிற்கு மாநில செயலாளர் எஸ்.ஏ.வாசு, மேனாள் மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், மாநில செயலாளர் இந்திரா காந்தி, மாநில செயற்குழு உறுப்பினர் கிஷோர் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வடசென்னை மேற்கிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.கே.தாஸ், எஸ்.டி.நெடுஞ் செழியன், மாநில செயலாளர் அடையாறு பாஸ்கர், மேனாள் மாவட்ட தலைவர் ரமேஷ் ஆகியோரும், மத்திய சென்னை கிழக்கிற்கு மாநில துணைத் தலைவர் இமயா கக்கன், பொதுச்செயலாளர் டி.கே.முரளி, மாநில செயலாளர்கள் பி.சுரேஷ்பாபு, வழக்குரைஞர் கே.அருண்குமார் ஆகியோரும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதே போன்று, சென்னை முதல் கன்னியகுமரி வரை 77 கிராம கமிட்டிக் குழுக்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேற்கண்ட தகவல்கள் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு செயலாளர் ராம்மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பயிர் காப்பீடு செய்ய 30ஆம் தேதி வரை அவகாசம்
தமிழக வேளாண் துறை கோரிக்கை ஏற்பு

சென்னை,நவ.19- தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, பயிர் காப்பீட்டிற்கான தேதியை, 30ஆம் தேதி வரை நீட்டித்து, ஒன்றிய அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் சம்பா பருவ நெல் சாகுபடி மட்டுமின்றி, பல வகை பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது. இதற்கு பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், காப்பீடு செய்வதற்கு, இம்மாதம், 15ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. நடப்பாண்டு வழக்கமான அளவை விட, 25 லட்சம் ஏக்கரில் மட்டுமே, சம்பா பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மற்ற பயிர்கள் சாகுபடியும் குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தாமதம், அணைகள், ஏரிகளில் போதிய நீர் இருப்பு இல்லை என்பதால், சாகுபடி பரப்பு அதிகரிக்கவில்லை.

தற்போது, வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சாகுபடி பணிகளில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பயிர் காப்பீட்டிற்கான அவகாசம் 15ஆம் தேதியுடன் முடிந்தது. அதனால், பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டனர். பயிர் பாதிப்பு ஏற்பட்டால், இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. எனவே, பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கும்படி, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்கும்படி, தமிழ்நாடு அரசு சார்பில், வேளாண் துறை செயலர் அபூர்வா, ஒன்றிய வேளாண் துறைக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று, பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை, 30ஆம் தேதி வரை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது.இதற்கான உத்தரவை, மத்திய வேளாண் துறை பயிர் காப்பீட்டு பிரிவு கூடுதல் ஆணையர் காம்னா ஆர்.சர்மா பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை பின்பற்றும்படி, தமிழ்நாட்டில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *