மாறிவரும் வாழ்க்கை முறையின் விளைவாகவும், சுகாதாரத்தில் உலக மயமாக்கலின் தாக்கத்தாலும் ஒரு புதிய உடல்நல பிரச்சினை தற்போது தோன்றி அச்சுறுத்தி வருகிறது. மருத்துவ உலகில் இதை Cardiovascular Kidney Metabolic (CKM Syndrome) என்று அழைத்தார்கள்.இதனால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை சிறிது, சிறிதாக மோசமாக தொடர்ந்து உடல் பாகங்கள் செயலிழந்து இளம் வயதில் மரணங்களுக்கு காரண மாகிறது. உடலுக்குள் மறைந்திருந்து தாக்கக்கூடியது இது. முதலில் உடலின் எடையை அதிகரிக்கச் செய்கிறது. இடையின் சுற்றளவை அதிகமாக்குகிறது. பின்னர் ஊளைச் சதையில் கொண்டு போய் முடிகிறது எனலாம். இதனால் உடலில் பக்கவிளைவுகள் ஏற்படத் துவங்குகின்றன. அதிகமாகப் பாதிக்கப்படுபவை முக்கிய உடல் உறுப்புகளான இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் ரத்த நாளங்கள். அகால மரணம் ஏற்பட இவை எளிதில் வழிவகுத்து விடுகின்றன.
தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. சராசரி ஆயுட்காலம், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் உடல்நலம் – இவை எல்லாமே மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது திருப்திகரமாகவே உள்ளன.
அதிகளவில் Global Burden of Disease (GBD) என்ற தரவுகளின்படி, தொற்றும் நோய்களை விட, தொற்றா நோய்களே (Non Communication Disease) மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மிகவும் அபாயகரமானவையாக உள்ளன. அகால மரணங்களுள் 69 சதவிகிதம் இத்தகைய நோய்களால் ஏற்படுகின்றன. உடல் குறைபாடுகளால் நோயுற்றவர்களின் ஆயுள் இப்படிப்பட்ட நோய்களால் 68 சதவிகிதம் குறைந்து விடுவதாகவும் இந்த GBD ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது. தொற்று நோய்களால் ஏற்படும் மரணங்களும், தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது ஆறுதலாக இருக்கும் நிலையில் GBD யின் இந்த ஆய்வு அறிக்கை அச்சமடையச் செய்கிறது.
STEPS என்ற அமைப்பு தமிழ்நாட்டில் 2020 ஆம் ஆண்டு ஓர் ஆய்வை நடத்தியது. ஆய்வில் பலருடைய உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் (WHO) படிப்படியாக நடக்க வேண்டிய பரிசோதனை விதிமுறைகளை வழங்கியது. அதன்படி எளிதில் பிறருக்குத் தொற்றிவிட முடியாத நோய்களைச் சார்ந்த ஆய்வாக இது நடைபெற்றது. ஆய்வில் பங்கேற்றவர்களுள் 28.5 சதவிகிதத்தினர் உடல் பருமன் அதிகம் உள்ளவர்களாக இருந்தனர். 11.4 சதவிகிதம் ஊளைச் சதை கொண்டவர்கள். 33.9 சதவிகிதம் மன இறுக்கமும், படபடப்பும் நிறைந்தவர்களாக இருந்தனர். 17.6 சதவிகிதத்தினர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர்.
அறியாமை காரணமாக ஏழை எளிய மக்கள் தங்கள் உடல்நலம் பற்றி கவலைப்படாமல் இருப்பது பெரிய குறை என்று நம்பப்படுகிறது. மக்களின் அலட்சியப்போக்கால் உடல்நல பாதிப்பு அதிகரிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தேசிய குடும்பநல ஆய்வு (National Family Health Survey) என்ற அமைப்பும் 2019 முதல் 2021 வரை தீவிர ஆராய்ச்சிகளில் ஈடுபட்டன.
புதிய அணுகுமுறையின் மூலம் தான் இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண முடியும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். குறிப்பாக CKM எனப்படும் நோய்க்குறி (Syndrome) நடுத்தர வயதில் உள்ளவர்களை அதிகமாக பாதிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. அலட்சியமாக இருந்துவிட்டால் வேறு பல புதிய பிரச்சினைகள் தலைதூக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் அறிமுகப்படுத்தி யுள்ள CMCHIS எனும் உடல்நல காப்பீடு திட்டத்திற் கென ஆண்டுக்கு ஏறத்தாழ 1,200 கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது. 1.4 கோடி குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. CKM நோய்க் குறியால் ஏற்படும் பல நோய்கள் இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் வந்துள்ளன. தனியார் மருத்துவ நிறுவனங்கள் இத்தகைய காப்பீடுகளுக்காக ஆண்டுக் கட்டணங்களை பெருமளவு உயர்த்தி வருகின்றன. தொற்றாத நோய்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளை 2030 ஆம் ஆண்டிற்குள் மூன்றில் ஒரு பங்காவது குறைக்க உலக அளவில் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் நாளுக்கு நாள் மக்களிடையே ஊளைச் சதைப் பிரச்சினை, நீரிழிவு, மன இறுக்கம் போன்றவை நவீன வாழ்க்கை முறையால் அதிகரித்து வருவதைப் பார்க்கும் போது உயிரிழப்புகள் அந்த அளவுக்காவது தடுக்கப்படுமா என்ற சந்தேகம் எழுகிறது. மக்களின் உடல்நலத்திற்காக ஒதுக்கப்படும் நிதியில் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புள்ளது. பொருளாதாரப் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடிய அபாயமும் உள்ளது.
நீரிழிவு, சிறுநீரகப் பிரச்சினை, இதயக் கோளா றுகள் என்று ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனியாக சிகிச்சை பிரிவுகள் இருப்பதைத் தவிர்த்து ஒன்றி ணைந்த சிகிச்சை முறையை அறிமுகம் செய்வது அவசியம் என்று American Heart Association என்ற அமைப்பு வலியுறுத்துகிறது. ஒரே மருத்துவ மனையில் எல்லா நோய்களுக்கும் சிகிச்சை பெறக்கூடிய வகையில் மாற்றம் வந்தால் நல்லது என்கிறார்கள் அவர்கள். பல்வேறு நோய்களுக்கும் மூலகாரணம் என்ன என்பதை கண்டறிய உடல்நல வல்லுநர்கள் ஒருங்கிணைந்து முயன்றால் நற்பயன் விளையும் என்று நம்புகிறது இந்த அமைப்பு.
ஒவ்வொரு பிரச்சினைக்கும் நோயாளிகள் வெவ்வேறு நிபுணர்களை நாடிச் செல்ல வேண் டியுள்ளது. ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட உடல் உபாதைகளுடன் இருக்கும்போது ஒரே இடத்தில் அனைத்திற்கும் சிகிச்சை பெற முடிந்தால் நல்லது என்கின்றனர் பல நிபுணர்கள். இப்படிப் பல்வேறு மருத்துவமனைகளைத் தேடிச் செல்வதால் சிகிச்சை முறையிலும் குளறுபடிகள் நேருகின்றன. நோயுள்ள ஒருவர் பலமுறை அலைந்து திரிய நேருகிறது. பொருட் செலவும் அதிகம், நேரமும் வீணாகிறது. ஆக்கப்பூர்வமாக எந்தப் பயனும் ஏற்படாமல் போகிறது என்கிறார்கள் அவர்கள். இதய சிகிச்சை நிபுணர்கள், நீரிழிவு நோய் நிபுணர்கள், சிறுநீரக நோய் நிபுணர்கள் – இப்படி எல்லோருமே ஒரே இடத்தில் சேவை புரியும் நிலை ஏற்பட்டால் நல்லது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தப் புதிய அணுகுமுறை ஒரு புதிய பரிசோதனையாகக் கூட அறிமுகப்படுத்தப்பட்டால் நல்லது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
இத்தகைய மாற்றங்களைச் செயல்படுத்த மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியளித்து இப்போதே தயார்படுத்தலாம். மருத்துவர்கள் ஒன்றுபட்டு இப்படிப்பட்ட பயிற்சிகளை அளிக்கலாம். மெல்ல மெல்ல இந்த புதிய திட்டம் விரிவுபடுத் தப்பட்டால் நாளடைவில் இது நிறைவேற வாய்ப்புள்ளது.
எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் வளர்ந்த பின் நீரிழிவு நோய், சிறுநீரக நோய், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது கண்டறி யப்பட்டுள்ளது. போதுமான எடையுள்ள குழந்தைகள் கருவில் வளர கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச் சத்துள்ள உணவு தேவை. பொருளாதார வசதிகளற்ற பெண்களுக்கு ஊட்டச் சத்துள்ள உணவை வழங்கவும், நிதி உதவி செய்யவும் தமிழ்நாட்டில் பல பொதுநல அமைப்புகள் இயங்கி வருகின்றன. முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் பெயரில் நம் மாநில அரசு ஒரு திட்டத்தை இதற்கெனவே உருவாக்கியுள்ளது. புரதச் சத்து நிறைந்த உணவுடன் நாள் ஒன்றுக்கு இரண்டு முட்டைகளும், கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவுற்று நான்கு மாதங்கள் கடந்த நிலையில் வழங்கப்பட்டால் நல்லது. இந்த முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் பொதுநல அமைப்பு இதைச் செயல்படுத்தினால் பெண்கள் பயனடைவார்கள் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். குறைந்த எடையுள்ள குழந்தைகள் பிறப்பது தடுக்கப்பட்டால் பிற்காலத்தில் பல நோய்களிலிருந்து அவர்கள் தப்பிக்க அது ஒருவகையில் வழிவகுக்கும் என்கிறார்கள் அவர்கள். அடுத்த தலைமுறைக் குழந்தைகளின் உடல் நலம் பாதுகாக்கப்பட நாம் இப்பொழுதே புதிய முறையில் அணுகுமுறைகளை திட்டமிட வேண்டும் என்று எல்லோரும் வலியுறுத்தி வருகின்றனர். மழலை வகுப்பினர் முதல் நடுநிலை வகுப்பு வரை பள்ளி மாணவர்களின் உடல் எடை அவ்வப்போது பரிசோதிக்கப்பட வேண்டும். மாணவர்களின் உடல் நலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். ஊளைச் சதையும், உடல் பருமனும் இளம் வயதி லேயே தடுக்கப்பட்டால் அதுவே அவர்களை பிற்காலத்தில் பல நோய்களின் பிடியிலிருந்து காப்பாற்றும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
1960 ஆண்டு காலக்கட்டத்திலிருந்தே உணவுப் பண்டகத்துறை (PDS) மூலம் அரிசி விநியோகம் சிறப்பாக நடந்து வருகிறது. அரிசி மக்களுக்கு அத்தியாவசியமான உணவுப் பண்டம். ஆனால் அரிசி உணவே உடல் பருமனுக்கும், ஊளைச் சதைக்கும் வழிவகுத்து விடுகிறது. எனவே அரிசியோடு இதர தானிய வகைகளும் பொதுமக்களுக்கு தாராளமாக கிடைக்க அதிகாரிகள் வழிசெய்ய வேண்டும். அரிசி உணவை மக்கள் குறைத்துக் கொள்வதே பல நோய்களையும் தடுக்கும் என்கிறார்கள் பல மருத்துவ வல்லுநர்கள். உணவுப் பொருள் வழங்கும் துறை இதற்காக தக்க நடவடிக்கைகள் எடுப்பதே சிறந்த தற்காப்பு முயற்சியாக இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.
சாதாரண உப்புக்கு மாற்றாக சோடியம் குறைவாக உள்ள உப்பைப் பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும். சோடியம் குறைந்த உப்பால் மனஅழுத்த நோயிலிருந்து பலர் விடுபட்டுள்ளதை சில ஆராய்ச்சி முடிவுகள் மூலம் அறியமுடிகிறது. எனவே உணவுப்பண்டக விநியோகம் மூலம் சோடியம் குறைந்த உப்பு வழங்கப்பட்டால் நல்லது என்கிறார்கள் நிபுணர்கள். ஆனால் இதிலும் ஒரு சிக்கல் உள்ளது என்றும் கூறுகிறார்கள் இவர்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் தற்போது அதிக அளவில் பயன்படும் சாதாரண உப்பே போதும் என்கிறார்கள். இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சோடியம் குறைந்த உப்பை தவிர்ப்பது பாதுகாப்பானது என்கிறார்கள்.
இன்றைய நவீன வாழ்க்கை முறை வினோத மாகவே உள்ளது. இயந்திர கதியில் இயங்கும் அவசர வாழ்க்கை. நீண்ட பணி நேரங்கள், இரவு நேரப் பணி, தூக்கமின்மை, தொலைபேசியுடனும், கணினியுடனும் விடுபட முடியாத பந்தம் – இவற்றால் ஏற்படும் மன அழுத்தம்! எல்லோரும் இரவும் பகலும் ஓய்வின்றி எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கும் அவலநிலை இன்றைய தலைமுறை வாழ்க்கை முறை. “உலகமயமாக்கல் அளித்துள்ள பரிசு” தான் இந்த அவல நிலை என்கிறார்கள் பல அறிஞர்கள்.
அலெக்ஸ் கிம் எனும் கொரிய நாட்டு எழுத்தாளர் (Alex Soojung – Kim Pang) தனது “REST” (“ஒய்வு”) என்ற நூலில் ஓய்வின் அவசியத்தை வலியுறுத்தி
இவ்வாறு கூறுகிறார் –
“நாம் ஓய்வை அறவே ஒழிக்க வேண்டும் என்றே உலகப் பொருளாதாரம் எதிர்பார்க்கிறது. ஓய்வின்றி உழைப்பதே ஒருவகையான மனநோய். அப்படி உழைப்பதை நாம் பெருமையாகக் கருதுகிறோம். ஓய்வெடுப்பது நம் பலவீனத்தைக் காட்டுகிறது என்று நாமே தவறாக நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் ஓய்வு மனிதர்களுக்கு இன்றியமையாத தேவை. ஆக்கப்பூர்வமான செயல்களுக்கும், புதிய சிந்தனைகளுக்கும் அணுகுமுறைகளுக்கும் நமக்கு ஓய்வு அவசியம் தேவை” என்கிறார் அவர்.
அவர் மேலும் கூறுகிறார் –
“இப்பொழுதெல்லாம் எல்லோரும் நீண்ட நேரம் பணியாற்றுகிறார்கள். இரவுகளில் தூக்கமின்றி கண்விழித்தபடி உழைக்கிறார்கள். இதனால் மூளை பெருமளவு பாதிக்கப்படுகிறது. அது களைப்படைவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. நினைவாற்றல் குறைகிறது. இது போதாதென்று, சாப்பிடுவதற்காகவே வாழ்வது போல் பலர் உப்பு, சர்க்கரை, வெண்ணை, பாலாடைக்கட்டி போன்றவை அதிகமுள்ள உணவு வகைகளையும் கிடைக்கும் நேரங்களில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நம் அலட்சியப் போக்கால் ஹார்மோன் அளவுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. வேறு பல ரசாயன மாற்றங்கள் உடலில் ஏற்பட்டு, உடல் பருத்து, மாமிச மலைகள் போல் ஆகிவிடுகிறார்கள் பலர். ஊளைச்சதை குறைய மறுத்து அடம்பிடிக்கும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
பணி நேரங்கள் சீரமைக்கப்பட வேண்டும். தொடர்ந்து இரவு நேரப் பணிகள் திணிக்கப்படுவது நிற்க வேண்டும். நோய் முற்றிய நிலையில் சிகிச்சை தேடி ஓடுவதைத் தவிர்க்க மக்கள் இப்பொழுதே தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த ஆரம்பிக்க வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்து. நம் இலக்கு கடினமானதே அல்ல, மேற்கண்ட தற்காப்புச் செயல்களால் பல நன்மைகள் இனிவரும் உலகில் ஏற்படும். ஆரோக்கியமான சமூகம் உருவாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற புரிதல் நாளடைவில் எல்லோருக்கும் ஏற்படும். நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் மனிதச் சமூகம் நிலைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் தானே?
நவம்பர் – 14 ‘உலக நீரிழிவு விழிப்புணர்வு தினம்’. நீரிழிவுத் தடுப்பு சார்ந்த ஏராளமான கட்டுரைகளும், தகவல்களும், அறிவுரைகளும் ஊடகங்களில் நிறைந்துள்ளன. இது நாம் அனைவரும் சற்று நின்று நிதானமாக இது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம். நீரிழிவு நோயைத் தடுப்போம். அது மட்டு மின்றி, இன்னபிற நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள உலக நீரிழிவு நாளில் உறுதி செய்து கொள்வோம்.
நன்றி : ‘தி இந்து நாளிதழ்’ – 14.11.2024
தமிழாக்கம்: எம்.ஆர். மனோகர்