நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவை பதவியேற்பு – 19.11.1923
நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச் சரவை 1923ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் பதவியேற்றது. முதல் அமைச்சராகப் பனகல் அரசர் (ராமராய நிங்கர்) பொறுப் பேற்றார். சர்.ஏ.பி.பாத்ரோ இரண்டாவது அமைச் சராகவும், மூன்றாவது அமைச்சராக
டி.என்.சிவஞானம் பிள்ளையும் பொறுப் பேற்றார்கள்.
சமஸ்கிருதம் அறிந்த பண்டிதர்கள் முயற்சியில் மதுரையில் சமஸ்கிருத மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சிகள் அனைத்தும் சமஸ்கிருதத்திலேயே நடைபெற்றன. முதலமைச்சருக்கு சமஸ்கிருதம் தெரியாது என்று கருதி சொற்பொழிவாளர்களில் சிலர் பனகல் அரசரையும் அவரது ஆட்சியையும் விமர்சித்துப் பேசினர்.
நிறைவாக முதலமைச்சர் பனகல் அரசர் பேசத் தொடங்கினார். தெளிவான சமஸ்கிருததில். அதுவரை பேசியவர்களை விடச் சிறப்பாக இலக்கியச் செறிவோடு பேசினார். அவரை அவமானப்படுத்த எண்ணி யவர்கள் அவமானப்பட்டு நின்றனர்.
மருத்துவம் பயில சமஸ்கிருதம் தேவையா?
அந்த மாநாடு முடிந்த சில நாள்களில் ஓராணையைப் பிறப்பித்தார் முதலமைச்சர்-பனகல் அரசர். அதுவரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயில சமஸ்கிருதமொழி தெரிந்திருத்தல் அவசியம் என்றிருந்த விதியை நீக்கி ஆணை பிறப்பித்தார். ஆங்கிலத்தில் படிக்கும் மருத்துவக் கல்விக்கு சமஸ்கிருதம் எவ்வகையில் துணைபுரியும்? என்று முதல மைச்சர் சிந்திக்கலானார்.
அதனால் மருத்துவக் கல்லூரியில் பயில மாணவர்க்கு சமஸ்கிருதம் மொழி அறிந்திருக்க வேண்டியதில்லை என்ற முடிவினை எடுத்தார். முதல்வரின் இந்த முடிவிற்கு அவாள் சார்பில் எதிர்ப்புகள் எழுந்தன. மருத்துவத் துறையில் தகுதி திறமை குறைந்து மருத்துவத்துறை பாழ்பட்டுப் போய்விடும் என்று கூப்பாடு போட்டனர். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாது ஆணையைப் பிறப்பித்தார். அதன் விளைவாக, பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் என அனைவரும் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பினைப் பெற்றனர்.
இந்திய மருத்துவப் பள்ளி
1-7-1924இல் கான்பகதூர் முகமது உஸ்மான் சாயபு அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்தார் பனகல் அரசர். அக் குழு உஸ்மான் கமிட்டி என்றே அறியப்பட்டது. இந்தக் குழு இந்தியா முழுதும் சுற்றி இந்தியமருத்துவ முறைகளைக் குறித்து ஆய்ந்தனர்.
1924இல் இந்திய மருத்துவப் பள்ளி பனகல் அரசர் முயற்சியால் எழும்பூர் பாந்தியன் சாலையில் தொடங்கப்பெற்றது. பின் 1926இல் பனகல் அரசர்இந்திய மருத்துவப் பள்ளியை எழும்பூரிலிருந்து சென்னை, கீழ்பாக்கம், பூந்தமல்லிச் சாலையி லிருந்த அவரது சொந்த இடத்திற்கு மாற்றினார். இந்தப் பள்ளி, 1947 இல் கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டு இந்திய மருத்துவக் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது, 1949இல் இணைப்பு மருத்துவக் கல்லூரி என்று பெயர் மாற்றப்பட்டது.
முதன்முதலாக சென்னையில் இந்திய மருத்துவக் கல்லூரியை ஏற்படுத்தி, அதற்காகக் கீழ்ப்பாக்கத்தில் இருந்த தனது சொந்த நிலமான ஹைட்பார்க் தோட்டத் தை இலவசமாகத் தந்தார் பனகல் அரசர். இன்று நாம் காணும் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி அமைந்துள்ள வளாகம் முழுவதும், பனகல் அரசர் இலவசமாக தந்ததுதான்.
மருத்துவத் துறையில் மறுமலர்ச்சி
சென்னை மாகாண மருத்துவத் துறை ஆங்கிலேயர் ஆளுமையின் கீழ் இருந்தது. இந்தியர்கள் எவரும் நுழைந்திட வாய்ப்பில்லை என்ற நிலையில் பனகல் அரசர் ஒரு சட்டத்தை இயற்றி ஆங்கிலேயர் ஆதிக்கத்தை அகற்றி, இந்தியர்களை மருத்துவத்துறையில் பங்குபெறச் செய்தார். இதற்கான மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த பனகல் அரசர் மசோதாவின் மீது பேசினார். மருத்துவத் துறைக்கான மறுமலர்ச்சி மசோதா சட்டமாகியது.
சென்னை பல்கலைக் கழகச் சட்டம்
சென்னைப் பல்கலைக் கழகம் 1857ஆம் ஆண்டில் உருவாக்கப்படது. அப்பல்கலைக் கழகம் 1904 முதல் 1920 வரை பார்ப்பனிய ஆதிக்கத்தில் இருந்துள்ளது சமஸ்கிருதமொழி செம்மொழி அந்தஸ்தோடு மாணவர்க்குக் கற்பிக்க வழி செய்யப்பட்டிருந்தது. ஆனால், தமிழ் மொழி கற்பிக்க வழியில்லை. தமிழ் மொழி, பல்கலைக்கழகத்தால் புறக்கணிக்கப் பட்டிருந்தது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயப் பாடமாக வைக்க மறுத்தது.
இதனைத் தொடர்ந்து, செனட் உறுப்பினர்களை அதிகப் படுத்தியும், எல்லா வகுப்பினருக்கும்,பொது நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும்படியும், சென்னைப் பல்கலைக்கழகச் சட்டம் 1923 ஆம் ஆண்டு பனகல் அரசரால் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பார்ப்பனர் ஆதிக்கத்திற்கு கடிவாளம் போடப்பட்டது.
அற நிலையப் பாதுகாப்புச் சட்டம்
பனகல் அரசர் மிகத் துணிவுடன் செய்த செயல் அற நிலையப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது ஆகும். இந்து மதத்திற்குச் சொந்தமான கோயில்களுக்கு நிலையான சொத்துக்களும் தினசரி பல கோடி ரூபாய் வருமானமும் இருந்து கொண்டிருந்தன. கோயில் சொத்துக்கள் விரயமாவதைத் தடுத்திட பனகல் அரசரால், அறநிலையப் பாதுகாப்பு சட்ட வரைவு 1922 டிசம்பரில் வெளியிடப்பட்டு, 1923 ஏப்ரலில் சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது எனினும் சட்டமன்றத் தில் கடும் எதிர்ப்பு இருந்ததால் வைசிராயின் ஒப்புதல் கிட்டவில்லை.
1925 சனவரி 27 இல் வைஸ்ராய் ஒப்புதல் பெற்று, சட்டம் செயலுருப் பெற்றது. அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், இந்து மதவாதிகளின் கடும் எதிர்ப்புகளுக்குப் பின் நிறைவேற்றப்பட்டது.