மோடியின் கடந்த பத்தாண்டு ஆட்சிக் காலத்தில், பல உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மத்தியில் ஹிந்துத்துவா காவி மய சிந்தனைகள் பரவியிருப்பதைப் பார்க்க முடிகிறது. கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், ஓய்வு பெறும் நாளன்று, ஆர்எஸ்எஸ்-உடனான தன் வாழ்நாள் பந்தத்தைக் கூறி, அந்த அமைப்புக்குத் தான் மிகவும் கடன்பட்டிருப்பதாகவும் அறிவித்தார்.
மற்றொரு நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாயா, மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒருசில வாரங்களுக்கு முன், தன் பதவியிலிருந்து விலகி, அதன்பின் சில நாட்களிலேயே பாஜக வேட்பாள ராக நின்று வெற்றி பெற்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, டி.ஒய். சந்திரசூட் ஓய்வுபெறுவதையொட்டி, ஏராளமான விமர்சனங்கள் வந்துகொண்டி ருக்கின்றன. இது இயற்கையேயாகும்.
ஏனெனில் சமீப ஆண்டுகளில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீண்ட காலம் பணியாற்றிய ஒருவராக இவர் கருதப்படுவதால் இவ்வாறு விமர் சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் அவர் இரண்டு ஆண்டு காலம் தலைமை நீதிபதியாக இருந்திருக்கிறார்.
இது கடந்த இருபதாண்டுகளில் வேறெந்த தலைமை நீதிபதியையும் விட அதிகமானதாகும்.
மோடி அரசின் ஹிந்துத்துவா
நிகழ்ச்சி நிரல்
அரசமைப்புச்சட்டம் மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்ற முறையில் அவர் தம் பங்கைச் சரியாக செய்திருக் கிறாரா என்பதை மதிப்பிடுவது அவசியம்.
மோடி அரசாங்கம், இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டி லில் அமர்ந்தபின்னர், அரசமைப்புச் சட்டத்தையும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் சீர்குலைக்கும் ஹிந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற தன் முயற்சிகளை வெறித்தனமாக முன்னெடுத்துச் சென்றது.
அயோத்தி வழக்கும் மத உணர்வுகளும்
ஹிந்துத்துவா தொடர்பாக இரண்டு தீர்ப்புகளை நீதிபதி சந்திரசூட் வழங்கியிருக்கிறார். அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 பேர் கொண்ட உச்சநீதி மன்ற நீதிபதிகளின் அமர்வாயத்தில் இருந்த அவர், பாபர் மசூதி இடிப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மானது என்று கூறியபோதிலும், அந்த இடத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைத்தார். இந்தத் தீர்ப்பின் மூலமாக ஆர்எஸ்எஸ் – விசுவ இந்து பரிசத்தின் கோரிக்கை நியாயப்படுத்தப்பட்டது.
ஞானவாபி மசூதி வழக்கும்
சட்ட மீறல்களும்
தலைமை நீதிபதியாக இருந்தபோது, நீதிபதி சந்திரசூட் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வழக்கில், 1991-ஆம் ஆண்டின் மத வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறி வழக்குகளைத் தொடர அனுமதி அளித்தார். இது வாரணாசி மற்றும் மதுராவில் சர்ச்சைகளைத் தூண்டும் உரிமத்தை ஹிந்துத்துவா சக்திகளுக்கு வழங்கியது.
காஷ்மீர் 370 வழக்கும்
மாநில உரிமைகளும்
தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வாயம், 370ஆவது பிரிவை ரத்து செய்ததை உறுதிப்படுத்தியதோடு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாகத் தரமிறக்கியது குறித்த முடிவை தள்ளிப்போட்டது. இது ஆர்எஸ்எஸ்-பாஜக-வின் மற்றுமொரு முக்கிய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றியது.
நீதித்துறை நிர்வாகமும்
கொலிஜியம் பணியும்
‘மாஸ்டர் ஆஃப் தி ரோஸ்டர் டூட்டிஸ்’ எனப்படும் அமர்வாயங்கள் அமைப்பது மற்றும் கொலிஜியம் செயல்பாடுகளில், குடிமை உரிமைகள் வழக்குகள் பழைமைவாத பார்வை கொண்ட நீதிபதிகளிடம் அனுப்பப்பட்டன. உயர்நீதிமன்ற நீதிபதி களின் தேர்வு ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிற்கு விடப்பட்டது.
மத நம்பிக்கையும்
நீதித்துறை முடிவுகளும்
நீதிபதி சந்திரசூட் தனது பதவிக்காலத்தின் இறுதி யில், அயோத்தி வழக்கின் தீர்வுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்ததாக ஒப்புக்கொண்டார். துவாரகா கோவிலில் காவிக் கொடியை நீதியின் கொடி யாகப் போற்றினார். இவை நீதித்துறையில் காவிமய சிந்தனைகளின் வளர்ச்சியைக் காட்டுகின்றன.
உயர்நீதிமன்றங்களில்
ஆர்.எஸ்.எஸ். செல்வாக்கு
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்எஸ்எஸ் -உடனான தொடர்பை வெளிப்படை யாக ஒப்புக்கொண்டனர். மத்தியப் பிரதேச உயர்நீதி மன்ற நீதிபதிகள் ஆர்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பேசினர். கேரவன் இதழின் அறிக்கையின்படி, தற்போ தைய 33 நீதிபதிகளில் 9 பேர் (ஆர்எஸ்எஸ்-சின்) அகில பாரதிய அதிவக்த பரிசத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.
முடிவுரை
உச்சநீதிமன்ற அளவில் வழங்கப்படும் தீர்ப்பு களிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஹிந்துத்துவா உணர்வுகள் பிரதிபலிப்பதன் ஓர் எச்சரிக்கையாகவே தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்த பதிவுகள் புலப்படுத்துகின்றன. ஒட்டுமொத்தத்தில், இது உச்சநீதிமன்றம் மற்றும் பல உயர்நீதிமன்றங்களில் ஆர்எஸ்எஸ் சிந்தனைகள் முன்னேறுவதற்கு மோடி அரசாங்கம் எப்படியெல்லாம் உதவியிருக்கிறது என்பதற்கான சமிக்ஞை ஆகும்.
-பீப்பிள்ஸ் டெமாக்கரசி, தலையங்கம் (நவம்பர் 13, 2024) தமிழ் சுருக்கம் : ச.வீரமணி
-நன்றி: ‘தீக்கதிர்’, 18.11.2024