சென்னை, நவ. 18- “ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று புதிய சட்டங்கள் வாயிலாக, ஆவணங்களை எளிதாக உருவாக்கி, தனி மனிதனை குற்றவாளியாக்க முடியும்,” என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், ஒன்றிய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தென்னிந்திய வழக்குரைஞர்கள் மாநாடு, சென்னை காமராஜர் அரங்கில் நேற்று (17.11.2024) நடந்தது.
மாநாட்டில், தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதியிடம், ‘வழக்குரைஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும்’ என, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பின், அமைச்சர் ரகுபதி பேசியதாவது: புதிய குற்றவியல் சட்ட பெயர்கள், ‘இண்டியா’ கூட்டணியை நினைவுப்படுத்துகின்றன. அந்த கூட்டணி கட்சிப்பெயரின் முதல் வார்த்தையான, ‘பாரதிய’ என்ற வார்த்தையை, மக்கள் இடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில், சட்டத்தின் பெயரை மாற்றியுள்ளனர். ஹிந்தியை மறைமுகமாக திணிக்கும் நோக்கமும் தெரிகிறது.
இச்சட்டங்களில் சேர்க்கப்பட்ட பிரிவுகள் வாயிலாக, சாமானியர்கள் பாதிக்கப்படுவதால் நாடே எதிர்க்கிறது. பிரிவுகள் ஒன்றுக்கு ஒன்று முரணாகவும், குழப்பமாகவும் உள்ளன. இச்சட்டங்களின் வாயிலாக, ஆவணங்களை எளிதாக உருவாக்கி, தனி மனிதனை குற்றவாளியாக்க முடியும். இவற்றில் உள்ள, சாதக, பாதகங்களை கண்டறிய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அறிக்கையை பெற வேண்டும் என, ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.
வி.சி.க., தலைவர் திருமாவளவன் பேசியதாவது: வழக்குரைஞர்கள் முன்னெடுக்கும் முயற்சிக்கு வி.சி.க., துணை நிற்கும். கட்சிகளோடு அல்ல, மக்களோடு இருப்போம், மக்களுக்காக போராடுவோர் யாராக இருந்தாலும், அவர்களோடு நிற்க பக்குவப்பட வேண்டும். எந்த கட்சியில் இருந்தாலும், எதிர்கொள்ளும் போது கைகுலுக்கிக் கொள்வதில் தவறில்லை.இதையெல்லாம் தாண்டி, மனித உறவுகள் மேம்பட வேண்டும். தேர்தல் நிலைப்பாடு முற்றிலும் வேறானது. அது வெற்றி, நாடு, கட்சி நலன், காலச்சூழல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது. இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு கூட்டுறவு வார விழாவில்
ரூ. 10 கோடி மதிப்பிலான கடன் உதவிகள்
தூத்துக்குடி, நவ. 18- 1ஆம் ரயில்வே கேட் அருகே உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் 71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 15.11.2024 நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்து, கூட்டுறவுக் கொடியை ஏற்றி வைத்தார். அவா் பேசியது:
நிகழாண்டு ‘தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார மேம்பாட்டில் கூட்டுறவின் பங்கு’ எனும் கருப்பொருளை மய்யமாகக் கொண்டு கூட்டுறவு வார விழா கொண்டப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கியில் உறுப்பினா்களாக விவசாயிகள் பலா் உள்ளனா். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாக குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படக்கூடிய கடன்களை, உரிய காலத்தில் திரும்பச் செலுத்த வேண்டும். மேலும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் சரியான நேரத்தில் அவா்களுக்கு கடன் கொடுப்பதை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்றார்
தொடா்ந்து, சிறப்பாக செயல்பட்ட 16 கூட்டுறவு சங்கங்கள், 3 சிறந்த கூட்டுறவு சங்கப் பணியாளா்கள், 3 நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கு கேடயங்களையும், கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற 24 மாணவா்- மாணவிகளுக்கும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்- மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.
பின்னா், 1,832 பயனாளிகளுக்கு பயிர்க் கடன், கால்நடை பராமரிப்புக் கடன், சிறு வணிகக் கடன், டாம்கோ கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், வீட்டு அடமானக் கடன் என மொத்தம் ரூ.10.13 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் இரா.ராஜேஷ், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் அ.சுப்புராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.