தொல்லியல் தளமாக சென்னானூர் – தமிழ் நாகரிகத்தின் மற்றொரு மணிமகுடம்! அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

2 Min Read

சென்னை, நவ.18- கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழாய்வில் 10 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சென்னானூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழாய்வில் 10 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

“கண்ணாடி மற்றும் சங்கு வளையல் துண்டுகள், தக்களிகள், வட்டச் சில்லுகள், ஏர் கலப்பையின் இரும்பிலான கொழுமுனை, அம்பு மற்றும் ஈட்டி முனைகள், சுடுமண்ணாலான முத்திரைகள், மணிகள், விளக்குகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை தவிர புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கோடாரி, எலும்பிலான கிழிப்பான்,கையால் வனையப்பட்ட பானைகள்” ஆகிய தொல்பொருட்கள் இந்த அகழாய்வில் கிடைத்துள்ளன.

சென்னானூர் அகழாய்வில் காலவரிசைப்படி நுண்கற்காலம், புதிய கற்கலாம், புதிய கற்காலத்திலிருந்து இரும்பு காலத்திற்கு மாற்றம் அடைந்த நிலை மற்றும் வரலாற்று தொடக்க காலத்தின் நிலை ஆகியவற்றை அறியமுடிகின்றது. இத்தொல்லியல் தளத்தின் உறுதியான காலத்தினை அறிய மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் புதிய கற்கால பண்பாட்டுச் சுவடுகளை ஏந்தி, சிறப்புமிக்க தொல்லியல் தளமாக சென்னானூர் திகழ்வது தமிழ் நாகரிகத்தின் மற்றொரு மணிமகுடம் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள
2,553 மருத்துவ பணியிடங்களுக்கு
ஜனவரி 27இல் இணைய வழி மூலம் தேர்வு

திருநெல்வேலி, நவ. 18- தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,553 மருத்துவப் பணியிடங்களுக்கு ஜனவரி 27ஆம் தேதி இணைய வழியில் மூலம் தேர்வு நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று (17.11.2024) கூறியதாவது: தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள் ,செவிலியர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் `பிங்க் சோன்’ எனப்படும் 5 தனி ஓய்வறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, நெல்லையில் ரூ. 72 கோடியில் 450 படுக்கைகள், 10 அறுவைசிகிச்சை அரங்குகள் கட்டும் பணிகள் வரும் மார்ச் மாதத்துக்குள் முடிவடையும்.

காலியாக உள்ள 1,353 மருத்துவர் பணியிடங்கள் மற்றும் 2026ஆம் ஆண்டு வரை தேவைப்படும் மருத்துவர் பணியிடங்கள் என 2,553 காலி பணியிடங்களுக்கு 24 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதற்கான தேர்வுகள் வரும் ஜனவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளன. பெரிய நிறுவனங்கள் மூலம் இணைய வழியில் இந்த தேர்வுகள் நடைபெறும். மேலும், 2,250 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *