9.10.2002 அன்று சென்னை நாரத கான சபையில் ‘தாம்ப்ராஸ்’ எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்’ எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நூலை வெளியிட்டு ஜெயேந்திர சரஸ்வதி பேசியதாவது:
“எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும் அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரையை நாயக்கர்கள் ஆண்டபோதும் அந்தணர்தான் குருவாக இருந்தார். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டபோது, கோவிந்த தீட்சதர் என்பவர் தான் குருவாக இருந்தார். அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த காஞ்சிப் பெரியவாள். ஆண்டவன் கூட அப்புறம்தான். அந்தணன்தான் முதலில் (‘நக்கீரன்’, 15.11.2002).
* * * * *
“மின்சார சுடுகாடு இந்து தர்மத்துக்கு எதிரானது. எல்லா வகுப்பினருக்கும் ஒரே வகையான எரிப்பு முறையைக் கடைப்பிடிக்காததால் ஒரே சுடுகாடு கூடாது” என்று சொன்னவர் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி (‘விடுதலை’, 8.3.1982, பக்கம் 1).
* * * * *
பாபர் மஸ்ஜிதை இடித்துவிட்டு அத்வானி வந்திருந்தார். அப்போது நான் தொலைக்காட்சியில் இருந்தேன். அவர் We Believe in One country and one culture (நாங்கள் ஒரே நாடு; ஒரே கலாச்சாரம்) என்பதையே நம்புகிறோம் என்றார். உடனே நான் “உங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன். இங்கும் சைவ வெள்ளாளர் இருக்கின்றனர். அவர்களுக்கும் சமஸ்கிருதம் தெரியும். அவர்களும் ஆகம விதிப்படி பூஜை செய்கிறார்கள்” என்றேன். அவர் பூரிப்புடன் ‘அதனால்தான் ஒரு நாடு ஒரே கலாச்சாரம் என்கிறோம்’ என்றார்.
உடனே அவரிடம் வைத்தேன் ஒரு கோரிக்கை.
அய்யா இந்த அளவுக்கு தகுதி பெற்றிருக்கும் ஒரு வெள்ளாளர் “காஞ்சி மடத்தின் சங்கராச்சாரி ஆக முடியுமா?” என்று நான் கேட்டவுடன், திணற ஆரம்பித்து விட்டார். இதைக் கண்ட ஒரு ஆங்கிலப் பத்திரிகை அம்பி by the way… என்று கேள்வியைத் திசை மாற்றி விட்டார். ‘முஸ்லிம் முரசு’ பொன்விழாவில் சு.சமுத்திரம் (ஆதாரம் ‘முஸ்லிம் முரசு’, ஆகஸ்டு 2000).