தமிழ்நாடு பெருமையோடு தலை நிமிர்ந்து நிற்கும் சாதனைச் செய்திகள் பல அடுக்கடுக்காக வந்து அனைத்து மக்களையும், கட்சி, ஜாதி, மதம் – என்ற எல்லா வேறுபாடுகளுக்கும் அப்பால் நின்று, பூரிப்படையச் செய்கின்றது. விளையாட்டுப் போட்டியில் வித்தக ஒளியில் வந்து – பரிசுகளை மொத்தமாகத் தட்டிப் பறித்து, தகத்தகாய ஒளிப் பெருமையுடன் வாகை சூடியுள்ள அந்த இளம் வீராங்கனை – உலக கேரம் சாம்பியன் செல்வி காசிமா தான் – என்ற செய்தி நமக்கெல்லாம் தேனினும் இனியதாக நம் செவிகளில் இன்னிசையாகப் பாய்கிறது!
அமெரிக்காவில் நடந்த உலகக்கோப்பை கேரம் போட்டியில், மூன்று தங்கப் பதக்கங்கள் வென்று சாதனையின் சிகரம் ஏறியுள்ளார்!
இந்த விளையாட்டுச் சாதனை வித்தகம் கண்டு உலகத்தை வியக்க வைத்திருக்கும் காசிமா அவர்கள், ஓர் எளிய குடும்பத்திலிருந்து வருபவர்.
கடும் உழைப்பும், முறையான பயிற்சியும், கற்றுக் கொள்ள மேற்கொண்ட விடா முயற்சியுமே இவரை உலக சாம்பியனாக உச்சிக்கு அழைத்துச் சென்று பலரும் மெச்சிப் பாராட்டும் வாய்ப்பினை அளித்துள்ளது!
இவரது தந்தை – சென்னை புதுவண்ணை நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர். அந்த பெருமைக்குரிய தந்தையின் பெயர் மெகபூப் பாஷா (வயது 54).
அவர் சொல்கிறார்:
‘‘காசிமாவின் தந்தையான நான் ஒரு கேரம் பயிற்சியாளன்; பலருக்குப் பயிற்சி கொடுப்பவன். எனது 17 வயதிலிருந்தே பலருக்கும் நான் கேரம் பயிற்சி கற்றுத் தருகிறேன்.
மூன்று பதக்கங்களையும் ஒரே வீச்சில் தட்டிப் பறித்த என் மகள் காசிமாவுக்கு 8 வயதிலிருந்தே கேரம் விளையாட்டு பயிற்சியைத் தந்து – அவர் அதனை நன்றாகப் பயன்படுத்தி வெற்றியின் சிகரத்தில் ஏறி நிற்கிறார்.
அதோடு ‘‘இந்த போட்டியில் பங்கேற்க 1.5 லட்ச ரூபாய் கொடுத்து உதவிய துணை முதலமைச்சர் உதயநிதி அவர்களுக்கும் எங்களது நன்றி’’ – என்று கூறி உணர்ச்சி வயப்பட்டுள்ளார்!
‘‘என் மகள் காசிமா எங்கள் குடும்பத்திற்கும், என் பகுதி மக்களுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்!
தண்டையார்பேட்டை செரியன் நகர், 2ஆவது தெருவில் உள்ள தனியார் மய்யத்தில் கூலித் தொழிலாளர்கள், மீனவர்களின் குழந்தைகள் 45 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கும் கேரம் பயிற்சி தந்து கற்றுக் கொடுத்து வருகிறேன்.
இங்கு தேசியளவில் வெற்றி பெற்ற 14 பேர் உள்ளனர்.
நான் பயிற்சி தரும் கேரம் மய்யத்திற்கு அதற்குரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் மேலும் பல வீரர்கள் நாட்டுக்கு கிடைப்பார்கள்’’ என்று கூறினார்.
‘திராவிட மாடல்’ அரசின் சாதனை மகுடத்தில் காசிமாவும் ‘ஒரு முத்து’. இவர்களுக்கு ஊக்கம் தந்து இந்த ஆற்றலை உலகறியச் செய்ய உதவிய தமிழ்நாடு திராவிட மாடல் அரசுக்கும் – முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கும் நமது பாராட்டுகள்.
மெகபூப் பாஷா போன்ற ஆற்றலாளர்களை நல்ல வண்ணம் பயன்படுத்திக் கொண்டு நமது இளைஞர்களின் திறன் மேம்பாட்டினை வெளியே கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
அவர் மேட்டுக்குடியோ, பெரும் வசதி வாய்ப்போ பெற்று இப்படி உயரவில்லை என்பதன் மூலம் தகுதி, திறமை, ஆற்றல் என்பது எந்த தனிப்பட்ட ஜாதி, வகுப்பினர்களுக்கும் உரியதல்ல என்ற பேருண்மையை அனைவருக்கும் உணர்த்த வேண்டும்!
இந்த கேரம் விளையாட்டுப் போட்டி என்று வரும்போது, நமக்கு ஒரு பழைய நிகழ்வு நினைவில் நிழலாடுகிறது!
நான் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு,
‘விடுதலை’ அச்சகத்தின் அச்சுக்கோப்பு மேலாளர் பொறுப்பில் – 1965 ஜனவரி வாக்கில் – நாகேஷ் என்றவர் போர்மேன் (Fore Man) பணியில் இருந்தார். அவருடைய மைத்துனரை அச்சுக்கோர்ப்புத் தொழிலில் சேர்க்க என்னிடம் பரிந்துரைத்தார். கம்பாசிட்டராகச் சேர்ந்த அந்த இளம் பிள்ளைக்கு டெல்லி பாபு என்று பெயர்.
அவர் கேரம் விளையாட்டில் அகில இந்திய சாம்பியன் ஆக பின்னாளில் வளர்ந்தோங்கினார்!
‘விடுதலை’ குழுமம் பெருமையுற்றது.
எனவே விடா முயற்சியும், கடும் உழைப்பும், தணியாத ஆர்வமும் தான் இத்தகைய வெற்றிகளுக்கான அடித்தளம் ஆகும்!
ஒருபெண்ணால் முடியும் – எளிய குடும்பத்தவராக இருப்பினும் அது வெற்றிக்கு தடையாக ஒரு போதும் இருக்காது என்பதையே இந்த வெற்றிச் சாதனை உலகுக்கு உணர்த்துகிறது அல்லவா?
நமது நிறைவான வாழ்த்துகள்!