தமிழ்நாட்டின் வரலாற்றைச் சொல்லும் பதிவுகள் கல்வெட்டுக்களாகவும் தாமிரப் பட்டயங்களாகவும் பழைய சிதிலமைடந்த கட்டடங்களின் சுவர்களிலும், பாறைகள் மீதும், கல்தூண்களிலும் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பதை காணலாம்.
மன்னர்கள் தம் கால நிகழ்வுகளை கல்லில் செதுக்கி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கோயில், குளக்கரை, மலைகள், குகைகள் போன்ற இடங்களில் எழுதப்பட்ட இந்த கல்வெட்டுகள், இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் (Archaeological Survey of India-ASI) மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு ‘படி எடுத்தல்‘ முறையில் காகிதத்தில் நகல் எடுக்கப்படுகிறது. இதை ஆய்வுக்கு பயனுள்ள வகையில் அவ்வப்போது பதிப்பித்து தொகுதிகளாக வெளியிடுகிறது தொல்லியல்துறை. இந்திய வரலாற்றுக்கு முக்கிய ஆதாரங்களாக விளங்கும் இந்த பழங்கால கல்வெட்டுகளை ஆய்வு செய்யவும், நம் நாடு முழுவதிலும் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கவும், 1860 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் எனும் ஆங்கிலேயரால் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த கல்வெட்டுகள், இந்திய தொல்லியல் ஆய்வகம் சார்பில் காகித நகல்களாக 1889ஆம் ஆண்டு முதல் படி எடுக்கப்படுகிறது. இதை ஆய்வுக் குப் பயனுள்ள வகையில் இந்திய தொல்லியல் ஆய்வகம் அவ்வப்போது பதிப்பித்து வெளியிடுகிறது.
இந்திய வரலாற்றுக்கு முக்கிய ஆதாரங்களாக விளங்கும் இந்த பழங்கால கல்வெட்டுகளை ஆய்வு செய்யவும், கண்டுபிடிக்கப்படும் கல்வெட்டு களை படியெடுத்து பதிப்பிப்பதற்கும் தொல்லியல் ஆய்வகத்தின் மைசூரு அலுவலகத்தில் தனியாக கல்வெட்டுத் தலைமையகம் ஒன்று இயங்குகிறது. ஆரம்பத்தில் சென்னையில் இருந்த அந்த அலுவலகம், தட்பவெட்பநிலை காரணமாக எடுத்தபடிகள் வீணாகப் போய் விடும் என ஊட்டிக்கு மாற்றப்பட்டது. அதன் இயக்குநராக பொறுப்பேற்ற மைசூரைச் சேர்ந்த ஓர் அதிகாரி அதை தம் சொந்த ஊருக்கு மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆங்கிலேயர் நமக்கு அளித்த கருவூலம் இக்கல்வெட்டுகளின் படிகள். தமிழ்நாட்டின் வரலாற்று நினைவுச் சின்னங்களையும் கல்வெட்டு களையும் பராமரிக்கவும், கல்வெட்டுப் படிகளைப் பாதுகாக்கவும், படித்துப் புரிந்து கொள்ளவும், தற்காலத்துக்கு ஏற்றவாறு அந்தந்த இந்திய மொழி களில் எழுத்துவடிவமாக்கவும், பதிப்பிக்கவும் இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் அரசு நிறுவனங்களாக ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த 1890 ஆம் ஆண்டு முதல் அரும்பாடுபட்டு படியெடுத்து சேகரித்து, படித்து, தமிழ் எழுத்துவடிவமாக்கி, ஆவணப்படுத்தப்பட்ட சுமார் 75,000 தமிழ் கல்வெட்டு பதிவுகள் உள்ளன.
இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறை அலுவலர்கள் இக்கல்வெட்டுகளை அதற்கென்றுள்ள காகிதத்தில் மையொற்றி படிகளாக மாற்றி ஆய்வுக்குப் பயனுள்ள வகையில் ஆவணப்படுத்தும் பணியில் 1890 ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு படி எடுக்கப்படும் சிறப்புக் காகிதங்கள் சுமார் 75 ஆண்டுகள் ஆயுள் கொண்டவை.
கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதியாக இருந்த கிருபாகரன் தலைமையிலான அமர்வு மைசூரில் சிதைந்து கொண்டிருந்த தமிழ் கல்வெட்டு மைப்படிகளை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து பாதுகாக்குமாறு தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து 2022 நவம்பர் மாதத்தில் மைசூரில் இருந்த தமிழ்க் கல்வெட்டு மைப்படிகளில் பாதியளவுக்கும் குறை வான படிகள் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் இந்திய தொல்லியல் துறை அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தன.
தற்பொழுது, “பராமரிக்க முடியாத தட்பவெப்ப சூழ்நிலை, கட்டடம் இன்மை” என்று காரணங்கூறி அவற்றை மீண்டும் மைசூருக்கே மாற்றுவதற்கான முயற்சி திரைமறைவில் தொடங்கிவிட்டது.
இவை எல்லாம் சிறுபிள்ளைத்தனமானவை! எந்தக் காரணத்துக்காக மைசூரிலிருந்து தமிழ் நாட்டுக்குரிய கல்வெட்டு உருப்படிகள் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டனவோ, அந்தக் காரணங்களை மறுதலித்து, மீண்டும் ஏன் மைசூருக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்?
தமிழ்நாட்டிலிருந்து எழுந்த உரிமைக் குரலின் காரணமாகத்தான் மைசூரிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தன என்பதை மறந்திட வேண்டாம். நீதித்துறையின் ஆணையும் முக்கியமானது.
தமிழ்நாட்டுக்குரிய கல்வெட்டு ஆவணங்களைச் சிதைக்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய சக்திகள் உண்டு. அத்தகைய ‘கை வண்ணமா’ என்பதைக் கவனிக்க வேண்டும் – அலட்சியப்படுத்த வேண்டாம்.
திராவிட மாடல் அரசு இதில் உறுதியாக இருக்கும் என்ற திட நம்பிக்கை நமக்குண்டு!