மத மோதலை உருவாக்க சதியா?
மயிலாடுதுறை, நவ.17 – கிளியனூர் கிராமத்தில் மத மோதலை உருவாக்க திட்டமிட்டு பள்ளிவாசல் கறிக்கடையினுள் குறிப்பிட்ட சில சமூக விரோதிகள் மதவெறி அமைப்புகளுடன் இணைந்து இரவோடு, இரவாக விநாயகர் சிலையை வைத்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை அருகேயுள்ள கிளியனூரில் அதிகளவில் இஸ்லா மியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமய மக்களும் வசித்து வருகின்றனர். எந்தவித மத பாகுபாடின்றி ஒற்றுமையாக வசித்து வரும் அக்கிராம மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் சில மதவெறி இந்து அமைப்புகளின் தூண்டுதலின் பேரில், அப்பகுதியிலுள்ள சின்னப் பள்ளி வாசல் கறிக்கடையினுள் கடந்த 15.11.2024 அன்று அதிகாலை 4 மணியளிவில் அதே பகுதியில் வசிக்கும் குறிப்பிட்ட சில நபர்கள் விநாயகர் சிலையை வைத்துள்ளனர். அதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் விநாயகர் சிலையை அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பதற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே 15.11.2024 அன்று காலை பெரம்பூரில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சுரேஷ் தலை மையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. வட்டாட்சியர் மகேஷ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருப்பதி, வருவாய் ஆய்வாளர் அருண், கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன், கிளியனூர் ஊராட்சி தலைவர் ஹாலிது மற்றும் ஜமாத்தார்கள் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி காக்குமாறு வலியுறுத்தினர். மீண்டும் ஓரிரு நாள்களில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒற்றுமையுடன் வசிக்கும் மக்களிடையே மோதலை உருவாக்க முயற்சிக்கும் சமூக விரோத கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, கிளியனூர் கிராமத்தில் அமைதியை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.