திருச்சி, நவ. 16- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின், நாகம்மையார் கலையரங்கத்தில், 14.11.2024 அன்று காலை 10.00 மணி யளவில் குழந்தைகள் நாள் விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது.
நிகழ்விற்குப் பள்ளியின் முதல்வர் முனைவர் க.வனிதா தலைமையேற்றார்.
மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் பள்ளியின் அறிவியல் ஆசிரியரும், குழந்தைகள் நாள் விழா கொண்டாட்ட நிகழ்வின் பொறுப்பாசிரியருமான கே.சர்மிளா பானு வரவேற்புரையாற்றி நிகழ்விற்கு வந்தோரை வரவேற்றார். தொடர்ந்து, பள்ளியின் ஆசிரியர்கள் நடனம்,கதை, கவிதை, சிறப்புப் பேச்சு போன்ற பல்வேறு கலை நிகழ்வுகள் மூலம் மாணவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா அவர்கள் மாணவர்கள் அலைபேசி பயன்பாட்டைக் குறைத்து விளையாட்டு மற்றும் படிப்பில் கவனம் செலுத்தி வருங்காலத்தில் வளமாக வாழ்வதற்கும், பெற்றோர்கள் மற்றும் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் மாணவர்களாக உருவாக வேண்டும் என்றும் மாண வர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், குழந்தைகள் நாளை முன்னிட்டு, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மாண வர்களுக்கு அனுப்பிய வாழ்த்து மடலையும் வாசித்து, குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், போதைப் பொருள் பழக்கம் போன்ற செயல்களைத் தடுக்கும் வகையில் அவர் வழங்கிய ஆலோசனைகள் மற்றும் உடலை உறுதியாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு இணைய வழி விளையாட்டு ஆணையம், குழந்தைகள் நாள் விழாவை முன்னிட்டு, அலைபேசி பயன்பாடு மற்றும் போதைப் பொருள் பயன்பாடுகளால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வகையில் வழங்கிய “அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து” என்ற குறும்படமும் திரையிடப்பட்டது. நிகழ்வின் நிறைவாகப் பள்ளியின் நடன ஆசிரியர், ஃபிரான்ஸிட்டா நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
நிறைவாகப் பள்ளியின் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளைப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.