சேலம், நவ. 16- மழைக்காலத்தையொட்டி கெங்கவல்லியில் பள்ளி மாணவா்களுக்கு தலைமை ஆசிரியை அன்பளிப்பாக குடை வழங்கினார்.
கெங்கவல்லி பேரூராட்சிக்கு உள்பட்ட காட்டுக் கொட்டாய் 10 ஆவது வார்டில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 30க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். தற்போது மழைக் காலம் என்பதால், பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவா்கள் மழையில் நனைந்துகொண்டே வீடுகளுக்கு சென்று வந்தனா். இதனையறிந்த பள்ளி தலைமையாசிரியை வெற்றிச்செல்வி, பள்ளியில் பயிலும் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் குடைகளை வாங்கி அன்பளிப்பாக வழங்கினார். அதனைப் பெற்றுக்கொண்ட மாணவ மாணவிகள், தலைமையாசிரியைக்கு நன்றி தெரிவித்தனா். இதுகுறித்து தலைமையாசிரியை வெற்றிச்செல்வி கூறியதாவது:
மழையில் வீடு திரும்பும் மாணவா்களுக்கு இடையில் ஒதுங்குவதற்கு இடமில்லை. அதனால் மாணவா்களின் நலன்கருதி குடைகளை வாங்கிக் கொடுத்தேன் என்றார்.
தலைமை ஆசிரியையின் இச்செயலுக்கு கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் ர.சிறீனிவாஸ், மேற்பார்வையாளா் ராணி, ஆசிரியா் பயிற்றுநா்கள், ஒன்றிய ஆசிரியா்கள், ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனா்.
பெண் பாலியல் வன்கொடுமை இருவருக்கு வாழ்நாள் சிறை!
காரைக்குடி, நவ. 16- காரைக்குடி பகுதியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மகளிர் நீதிமன்றம் நேற்று (15.11.2024) தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், நாச்சியார்புரம் அருகேயுள்ள கீழைவயல்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சாத்தையா (49). இரு சக்கர வாகன பழுது நீக்குபவராக இருந்தார். இவருடைய நண்பா் கொரட்டி கிராமத்தைச் சோ்ந்த அா்ஜுனன் (40). இவா்கள் இருவரும் சோ்ந்து காவலர்கள் போல உடையணிந்து, கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் 16 -ஆம் தேதி 23 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை கடத்திச் சென்றனா். காரைக்குடி ஆவுடையபொய்கை முந்திரிக் காட்டுப் பகுதியில் அவரை பாலியல் வன்கொடுமை செய்தனா்.
இதுதொடா்பாக புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு சிவகங்கை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் விஜயநிர்மலா முன்னிலையானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட சாத்தையா, அா்ஜுனன் ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 23 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தார்.
கூமாபட்டி கலவரம்
வழக்கு விவரங்களை அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கடிதம்!
விருதுநகர், நவ. 16- வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டியில் ஏற்பட்ட கலவரம் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை அளிக்குமாறு விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ஆா்.சி.தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான முத்துகுமார் (26) முன்விரோதம் காரணமாக கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடா்பாக கந்தகுமார் (26), மாரீஸ்வரன் (24), கன்னிசாமி (29) ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனா்.
இந்த வழக்கில் எதிரிகளைக் கைது செய்யக் கோரி, செப்.30-ஆம் தேதி இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 103 போ் மீது கூமாபட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனா். இதேபோல, கடந்த 1-ஆம் தேதி வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 119 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இறுதி ஊா்வலத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட காவலா் களைத் தாக்கியதாக 25 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த 3 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி, தலித் விடுதலை இயக்கத் தலைவா் கருப்பையா தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மனு அளித்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான விவரங்களை அறிக்கையாக அளிக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,236 கன அடியாக உயர்வு
தருமபுரி, நவ.16- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,236 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதேபோல, ஒகேனக்கல்லில் 6,500 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். அணைக்கு 14.11.2024 அன்று முன்தினம் விநாடிக்கு 5,024 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று (15.11.2024) 7,236 கனஅடியாக அதிகரித்தது.அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 106.11 அடியாகவும், நீர் இருப்பு 72.98 டிஎம்சியாகவும் இருந்தது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த நவ. 11ஆம் தேதி முதல் 14.11.2024 அன்று மாலை வரை விநாடிக்கு 6,000 கனஅடி நீர்வரத்து இருந்தது. இந்நிலையில், நேற்று (15.11.2024) காலை நீர்வரத்து சற்று அதிகரித்து விநாடிக்கு 6,500 கனஅடியாக பதிவானது.