15.11.2024 நாளிட்ட ‘தினமலரில்’ கீழ்க்கண்ட கடிதம் வெளியாகியுள்ளது.
‘‘பிராமணர்கள் செய்த தவறு!
ஆர்.பிச்சுமணி,
சென்னையிலிருந்து அனுப்பிய, ‘இ -மெயில்’கடிதம்: கொஞ்ச நாட்களுக்கு முன், பிராமணர்களுக்கு தனி பாது காப்பு சட்டம் தேவை குறித்து, ஒரு கூட்டம் நடைபெற்றது.
கடந்த 70 ஆண்டுகளாக, பிராமண ஜாதியை இழிவு படுத்துவது என்பது,திராவிடக் கட்சிகளின் பிழைப்பு. இதை முளையிலேயே கிள்ளி எறிய மறந்த பிராமணர்கள், தங்கள் மக்கள் தொகையை ஏன் உயர்த்திக் கொள்ளவில்லை? உயர்த்தி இருந்தால், அந்த ஓட்டு சதவீதத்துக்கு பயந்து, திராவிடக் கட்சிகள் கூழைக் கும்பிடு போடுவரே?’’
இதுதான் அந்தக் கடிதம்
(1) முதல் குற்றச்சாட்டு: பிராமண ஜாதியை இழிவு படுத்துவது தான் திராவிடக் கட்சிகளின் பிழைப்பு என்பதாகும்.
எதையும் தலைகீழாக மாற்றிப் புரட்டுவது, உண்மை யைக் குழி தோண்டிப் புதைப்பது என்பது எல்லாம் பார்ப்பனர்களுக்குக் கைவந்த கலையும் – பிழைப்புமாகும்.
பிறப்பின் அடிப்படையிலேயே பேதத்தைக் கற்பித்தது யார்? திராவிடக் கட்சிகளா? பார்ப்பனர்களா?
இந்த 2024 கால கட்டத்திலும் மனுதர்மத்துக்கும், கீதைக்கும் வக்காலத்து வாங்குவது யார்?
பார்ப்பனரல்லாதாரை ‘சூத்திரர்கள் என்று எழுதி வைத்திருப்பது மனுதர்மமா? திராவிட இயக்கமா? சூத்திரர்கள் ஏழு வகைப்படுவர் என்றும், அதில் ஒன்று விபச்சாரி மகன் என்றும் கூறப்படவில்லையா?
விபச்சாரி மகன் என்ற இழிவைச் சுமந்து கொண்டு, வன்முறையில் ஈடுபடாமல் மக்களிடத்தில் சுயமரியாதை உணர்வை ஏற்படுத்துவது – பிராமணர்களை இழிவுபடுத்துவதாம்.
‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி!’ என்று அறிஞர் அண்ணா அவர்கள் ‘ஆரிய மாயை’ நூலில் படம் பிடித்தாரே – அது நூற்றுக்கு நூறு உண்மையல்லவா?
வைசியர்களும், சூத்திரர்களும், பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று ‘பகவான் கிருஷ்ணன்’ கீதையில் கூறி இருக்கிறான் என்று ஆத்மார்த்தமாக இன்றைக்கும் உபந்நியாயசம் செய்து கொண்டு அலைபவர்கள் யார்? இப்படி இழிவுபடுத்தப்பட்டவர்கள், (பார்ப்பனப் பெண்கள் உட்பட) பொறுமையாக இருப்பதைப் பலகீனமாகக் கருதுகிறார்கள் போலும்!
(2) மக்கள் தொகையைப் பிராமணர்கள் பெருக்கி இருந்தால் அந்த ஓட்டுக்குப் பயந்து திராவிடக் கட்சிகள் கூழைக் கும்பிடு போடுவார்களாம் – எழுதுகிறது தினமலர்.
அப்பொழுதுகூட அவர்களின் உயர்ஜாதி ஆணவப் புத்தி கீழே இறங்கி வரவில்லை. மக்கள் தொகையைப் பெருக்காததுதான் குற்றமாம்.
இப்பொழுது பார்ப்பனர்களுக்கு என்ன கெட்டு விட்டது. மூன்று சதவீதம் உள்ள இந்தக் கூட்டம் தானே, கல்வியிலும் அதிகாரத் துறையிலும் உச்சியில் இருக்கிறது. மறுக்க முடியுமா?
தமிழ்நாட்டில் இருந்து கொண்டே, தமிழன் கட்டிய கோயிலுக்குள் தமிழன் அர்ச்சகனாகக் கூடாது, தமிழ் வழிபாட்டு மொழியாகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வரை சென்று சாதிக்கக் கூடியவர்களாக யார் இருக்கிறார்கள்?
பார்ப்பனரல்லாதார், தந்தை பெரியாராலும், திராவிட இயக்க உழைப்பாலும் கொஞ்சம் தலையெடுக்க ஆரம்பிக்கும் நிலையில், ‘நீட்’ என்றும் இ.டபிள்யூ.எஸ். (EWS) என்றும் புதிய கல்வி என்றும் விஸ்வகர்மா யோஜனா என்றும் கொல்லைப்புற வழியில் முட்டுக்கட்டை போடுவது யார்?
காஞ்சி சங்கர மடத்துக்குச் சென்றால் ஏ.பி.ஜே. அப்துல்கலாமும், ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ் ணனும், எல். முருகனும் தரையில் உட்கார வேண்டும். சுப்பிரமணிய சாமி சென்றால் சங்கராச்சாரியாருக்குச் சரி சமமாக ஆசனத்தில் அமர முடிகிறது.
‘இதற்குப் பெயரென்ன தினமலரே?’ என்று கேட்டால் ஒழுக்கமான, நேர்மையான மரியாதையான பதில் வருமா?
தந்தை பெரியார் நினைத்திருந்தால், காந்தியாரை ஒரு பார்ப்பனன் சுட்டுக் கொன்றபோது கொஞ்சம் கண் ஜாடை காட்டியிருந்தால், எத்தனை அக்கிரகாரங்கள் சாம்பலாகி இருக்கும்? எத்தனை உயிர்கள் பறி போயிருக்கும்? அதே நேரத்தில் பம்பாயில் நடந்தது என்ன?
வானொலி மூலம் அமைதியை நிலை நாட்டியவர் தந்தை பெரியார் அல்லவா! இதற்காகக் காலா காலத்திற்கும் நன்றி பாராட்டப் பார்ப்பனர்கள் கடமைப்பட்டவர்கள் அல்லவா?
சென்னை இராயப்பேட்டை – பார்ப்பனர்களுக்காகவே பார்ப்பனர்களால் நடத்தப்பட்ட இலட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் தந்தை பெரியார் என்ன பேசினார்?
‘நமக்குள் இருக்கும் பேதா பேதங்களை நமது தலைமுறையில் நம்மில் சிலர் அமர்ந்துப் பேசி சமாதானத்துக்கு வராவிட்டால் நமக்குப் பின்னால் வரும் தலைமுறையினர் அகிம்சாவாதிகளாக இருக்க மாட்டார்கள் என்று எச்சரித்தாரே தந்தை பெரியார், பார்ப்பனர்கள் வழிக்கு வந்தார்களா? பாடம் பயின்றார்களா?
சென்னை அண்ணாநகரில் சாந்தி காலனியில் மாநாடு கூட்டி அரிவாளைத் தூக்கிக் காட்டியவர்கள் தானே பார்ப்பனர்கள்.
இன்னும் ஆண்டுக்கு ஆண்டு ஆவணி அவிட்டம் என்ற பேரில் பூணூலைப் புதுப்பித்தும், சிறுவர்களுக்குப் பூணூல் கல்யாணம் நடத்திக் கொண்டும் தங்களை இரு பிறப்பாளர்கள் (துவி ஜாதி) என்ற இறுமாப்பு நீடிக்கும் வரை ‘தினமலர்கள்’ தாண்டிக் குதித்தாலும், ஆக்ரோசமாக எழுதினாலும் சேற்றில் புதைந்த யானை திமிரத் திமிர சேற்றுக்குள் மூழ்கும் நிலைதான் ஏற்படும்.
தந்தை பெரியாரின் இலட்சுமிபுரம் யுவர் சங்கத்தின் பேச்சை மறுமுறையும் படித்துப் பாருங்கள்.
திருந்துங்கள் – இல்லையெனில் திருத்தப்படும் காலம் என்பது கட்டாயமாக வந்தே தீரும் – இது இயற்கையின் நியதி!
பாடம் படிக்கவில்லை பார்ப்பனர்கள்!
Leave a Comment