கேள்வி 1: மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கலவரம் நீடிக்கிறதே – பிரதமர் மோடி இதுவரை அங்கு சென்று அமைதியை நிலைநாட்ட முனையாதது குறித்து?
– க.பாவேந்தன், திண்டிவனம்
பதில் 1: பிரதமரிடமே கேட்டு விடைபெற வேண்டிய கேள்வி. மணிப்பூர் முதலமைச்சர் தங்களைச் சந்தித்ததாக பொய்யான தகவலை உச்சநீதிமன்றத்தில் அங்குள்ள குழுவினர் தெரிவித்ததாக செய்திகள் வந்துள்ளன. பரிதாபத்திற்குரிய மணிப்பூர் மக்கள்!
– – – – –
கேள்வி 2: மனிதர்களைப் பிளவுபடுத்தியே அரசியலில் அறுவடை செய்யும் பி.ஜே.பி. தலைவர்கள் சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்த சதி நடக்கிறது என்று இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்றனரே?
– ம.அமுதன், சிவகங்கை
பதில் 2: அடித்தவர்களே அதிகமாக அழும் காட்சி நம் நாட்டு அரசியலில் கொஞ்சமா? நஞ்சமா‘?
– – – – –
கேள்வி 3: காலத்திற்கு ஒவ்வாத ‘பிராமண’ எதிர்ப்புக் கொள்கைகளை திராவிடக் கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஒரு நாளிதழ் தொடர்ந்து எழுதி வருகிறதே?
– தே.வேல், திருத்தணி
பதில் 3: இடம் மாறிக் கூறியுள்ளது அவ்வேடு. அதன் ஆசிரியருக்கே எழுதுங்கள்.
– – – – –
கேள்வி 4: சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி மக்களால் தேர்வு செய்யப்படும் மாநில அரசுகளை கவிழ்ப்பதில் கடந்த பத்து ஆண்டுகளாக ஈடுபடும் பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத செயல்பாடு குறித்து?
– ஆ.காவிரிநாடன், தஞ்சை
பதில் 4: உலகமே கைகொட்டி சிரிப்பதைத் தவிர கொஞ்சக் காலத்திற்கு வேறு என்ன பரிகாரமோ? புரியவில்லை!
– – – – –
கேள்வி 5: ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றிருக்கும் “விருப்பமிருந்தால் தொடர்ந்து படிக்கலாம்” என்பது நல்லதா?
– வ.விக்ரம், மதுரை
பதில் 5: மனுவாதிகளின் கருணை உள்ளத்தின் ஒரு பகுதியோ அது?
– – – – –
கேள்வி 6: “ஒட்டுண்ணி கட்சியாக மாறிவிட்ட காங்கிரஸ் பிற கட்சிகளை நம்பியே உள்ளது” என மகாராட்டிராவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, தான் ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பது சந்திரபாபு நாயுடு , நிதிஷ் குமார் ஆகியோரின் கட்சிகளின் தயவால் தான் என்பதை வசதியாக மறந்து விட்டாரே?
– மன்னை சித்து, மன்னார்குடி-1
பதில் 6: மறதி என்பது எவ்வளவு அவருக்கு, எத்தகைய வசதியைத் தருகிறது பார்த்தீர்களா?
– – – – –
கேள்வி 7: “ஜாதிவாரியாக இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கக் கூடாது” என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் ரவிக்குமார் கூறியுள்ள கருத்து – ஆபத்தானதும், கண்டிக்கத்தக்கதும் அல்லவா?
– கா.வெற்றி, வியாசர்பாடி
பதில் 7: தவறான கொள்கை நிலைப்பாடு. திராவிடர் கழகத்திற்கும் சமூகநீதி, இடஒதுக்கீட்டின் அடிப்படைக்கும் மாறான – உயர்ஜாதியினர் வாதம் புகுந்த முரண் ஆகும்! நமக்கு உடன்பாடு இல்லை. ஏற்க இயலாது.
– – – – –
கேள்வி 8: நாட்டில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் குறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்கும் உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றம் இதுநாள்வரை உ.பி. மாநிலத்தில் போலே பாபா நடத்திய ஆன்மிக நிகழ்ச்சியில் 82 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்ததைப் பற்றி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது பற்றி?
– த.கார்வேந்தன், வந்தவாசி
பதில் 8: காரணம் வெளிப்படை. மதத்தின் – மதவாதிகளின் அபரிமித அரசியல் செல்வாக்கு.
– – – – –
கேள்வி 9: கருநாடகாவில் அரசு அலுவலகங்கள், அலுவலக வளாகங்களில் புகைப்பிடித்தல், புகையிலைப் பொருட்களை உபயோகித்தல் மற்றும் போதை தரக்கூடிய எந்தப் பொருளையும் உட்கொள்வதற்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதைப் போன்று தமிழ்நாட்டிலும் ‘திராவிட மாடல்’ ஆட்சி மேற்கண்டவற்றை தடை செய்யுமா?
– எஸ். பூபாலன், திண்டிவனம்.
பதில் 9: வரவேற்கத்தகுந்த யோசனை! நிச்சயம் தமிழ்நாடு பரிசீலிக்க வேண்டிய ஒன்றாகும்.
– – – – –
கேள்வி 10: பார்ப்பனர் – ‘பிராமணர்’ வேறுபாடு என்ன? பார்ப்பனரை ‘பிராமணர்’ என்று ஏன் அழைக்கக் கூடாது?
– இரா.சு.மணி, காட்பாடி
பதில் 10: பார்ப்பனர் – என்றால் ஒரு பிரிவு. பிராமணர் – என்றால் மற்றவர்களுக்கு மேலான வர்ணதர்ம எஜமானப் பிரிவு. பார்ப்பனர்களைப் ‘பிராமணன்’ என்றால் மற்றவர்கள் ‘கீழ்ஜாதி’ – சூத்திரர், பஞ்சமர் என்று பொருள். அதன் மூலம் அப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலை என்பதுதான் கூடாது.