ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு அரியலூரில் காலணிகள் உற்பத்தித் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Viduthalai
3 Min Read

அரியலூர், நவ.15 ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அரியலூர் மாவட்டம், சிப்காட் ஜெயங்கொண்டம் தொழிற்பூங்காவில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன்ஷூஸ் (DeanShoes) நிறுவனம் அமைக்கவுள்ள காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.11.2024) அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.11.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் ஜெயங்கொண்டம் தொழிற்பூங்காவில், தைவான் நாட்டைச் சேர்ந்த டீன்ஷுஸ் நிறுவனம் 1,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கவுள்ள காலணிகள் உற்பத்தித் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மாற்றம் பெறுவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் தோல் அல்லாத காலணிகள் துறையில் தமிழ்நாட்டில் 75,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், சுமார் 6,300 கோடி ரூபாய் முதலீடு இத்துறையில் ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, தமிழ்நாட்டில் டீன்ஷுஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் அனைவரையும் உள்ளடக்கிய சீரான, மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அம்முயற்சிகளுக்கு சான்றாக தொழில் ரீதியாக பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் இத்திட்டம் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சிப்காட் ஜெயங்கொண்டம் தொழில் பூங்காவில் காலணி உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுதல்
அரியலூர் மாவட்டம், சிப்காட் ஜெயங்கொண்டம் தொழில் பூங்காவானது, உடையார்பாளையம் தாலுகாவில் ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் அமைந்துள்ளது.
டீன்ஷூஸ் நிறுவனத்திற்கு சிப்காட் ஜெயங்கொண்டம் தொழில் பூங்காவில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்நிறுவனம் தற்போது 1000 கோடி ரூபாய் முதலீட்டில், 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கவுள்ள காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல். திருமாவளவன், ஆ.இராசா, சட்டமன்ற உறுப்பினர் க.சோ.கா. கண்ணன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைச் செயலாளர் வி. அருண்ராய், தோல் ஏற்றுமதி கவுன்சில் செயல் இயக்குநர் ஆர் செல்வம், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே. விஷ்ணு, தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (சிப்காட்) மேலாண்மை இயக்குநர் மருத்துவர் கே. செந்தில்ராஜ், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மரு.பி.அலர்மேல்மங்கை, அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பொ. இரத்தினசாமி, டீன்ஷுஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர்கள் ரிச்சாங் மற்றும் ஓட்டோயாங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *