சென்னை, நவ.14- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என தி.மு.க. அரசு சட்டம் இயற்றி அர்ச்சகர் பயிற்சியினை முடித்து பலர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளதை யடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள சமூக வலைதளப் பதிவில், அத்தனை தடைகளையும் உடைப்போம்! சமத்துவத்தை நிலைநாட்டுவோம்!’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வளைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:–
‘‘கோயில் இருக்கும் தெருவுக்குள் நுழையாதே என்றார்கள். நுழைந்தோம்! கோயிலுக்குள் நுழையாதே எனத் தடுத்தார்கள். நுழைந்தோம்! கருவறைக்குள் நுழையத் தகுதி உண்டா – என ஒதுக்கினார்கள். நுழைவோம் என்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகச் சட்டமியற்றினோம்; பயிற்சிப் பள்ளிகள் துவங்கினோம்! பயிற்சி முடித்துப் பலரும் வந்துகொண்டிருக்கிறார்கள். திராவிடம் மகிழ்கிறது! இவர்களைத் தடுக்க ஏற்படுத்தப்படும் அத்தனை தடைகளையும் உடைப்போம்; சமத்துவத்தை நிலைநாட்டுவோம்!’’ இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.