தஞ்சை, நவ. 13- துறவறத்தை துறந்து இல்லறம் பூண்டதால் சூரியனார் கோவில் ஆதீனத்தை வெளியேற்றி மடத்துக்கு கிராம மக்கள் பூட்டுபோட்டனர். இந்த நிகழ்வால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சூரியனார்கோவில்
ஆதினத்துக்கு எதிர்ப்பு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சூரியனார் கோவில் ஆதீன மடம் உள்ளது. இங்கு ஆதீனமாக உள்ள மகாலிங்க சுவாமிகள் கருநாட காவை சேர்ந்த ஹேமாஸ்ரீ என்ற பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகவும், இதனால் அவர் ஆதீனமாக நீடிக்கக்கூடாது என்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
மடத்தை முற்றுகையிட்ட மக்கள்
இந்த நிலையில் நேற்று (12.11.2024) மாலை 5 மணி அளவில் கிராம மக்கள் ஆதீனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மடத்தின் வாசலை முற்றுகையிட்டனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத மகாலிங்க சுவாமி கள், ‘இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் பேசிவிட்டு முடிவு எடுக்கலாம். ஒரு நாள் அவகாசம் கொடுங்கள்’ என்றார்.
ஆனால் அவரை உடனடியாக மடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து அவர் உடனடியாக மடத்திலிருந்து வெளியேறினார். மேலும் கிராம மக்கள் மடத்தின் வாசல் கதவையும் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆதீனம் அருகில் உள்ள சூரியனார் கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் வாசல் பகுதிக்கு சென்று நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அவருடன் மடத்தில் இருந்த பரமானந் தம், சச்சிதானந்தம் சுவாமிகள் ஆகியோர் இருந்தனர்.
இரு தரப்பினர் கடும் வாக்குவாதம் இதனிடையே காவல்துறையினர் மடத்துக்கு சென்று கிராம மக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது கிராம மக்களில் மற்றொரு தரப்பினர் ஆதீனம் மகாலிங்க சுவாமிகள் மீண்டும் மடத் திற்குசெல்லவேண்டும். அவ ரிடம் மடத்தின் சாவியை கொடுங்கள் என கூறியதால் இருதரப்பினரிடையே கடும்
வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவரை ஆதீனமாக நியமித்த திருவாவடுதுறை ஆதீனத்தை சேர்ந்தவர்கள் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறினர். இதையடுத்து திருவாவடுதுறை ஆதீன கண்காணிப்பாளர்கள் சண் முகம், குருமூர்த்தி, சிறீராம், ஆதீன பொதுமேலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் சூரியனார் கோவில் ஆதீனத்திற்கு வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் முடிவு
அப்போது சூரியனார். கோவில் ஆதீனம் நிர்வாகத்தை அற நிலையத் துறையிடம் ஒப்படைப்பதாக ஆதீனம் மகாலிங்க சுவாமி கூறியதை தொடர்ந்து அறநிலையத்துறை ஆய்வாளர் அருணா, ஆதீனத்திடம் எழுத்துப்பூர்வமாக எழுதி தருமாறு கூறினார். அவருடைய வாக்குமூலத்தை காட்சிப்பதிவாக பதிவுசெய்வதோடு மடத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் காட்சிப்பதிவு எடுத்து ஒப்படைப்பது என்றும் பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
பரபரப்பு
அறநிலையத்துறை உயர் அதிகாரிகளின் வழிகாட்டலுடன் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ஆறுமுகம் ஆதீன நிர்வாக பொறுப்பை ஏற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதீனத்தை கிராம மக்கள் மடத்தில் இருந்துவெளியேற்றி மடத்துக்கு பூட்டு போட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.