கடந்த அக்டோபா் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை அடிப் படையிலான பண வீக்கம் முந்தைய 14 மாதங்கள் காணாத அளவுக்கு 6.21 சதவீதமாக உயா்ந்துள்ளது.
நேற்று (12.11.2024) வெளியிடப்பட்ட தேசிய புள்ளியியல் அலுவலகத் தரவுகள் இது குறித்து தெரிவிப்பதாவது:
கடந்த அக்டோபா் மாதத்தில் நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஅய்) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் 6.21 சதவீதமாக அதிகரித்தது. இது, முந்தைய 4 மாதங்களில் இல்லாத அதிகபட்ச சில்லறை பணவீக்கமாகும்.
சில்லறை பணவீக்கம் முந்தைய செப்டம்பா் மாதத்தில் 5.49 சதவீதமாகவும் 2023 அக்டோபா் மாதத்தில் 4.87 சதவீதமாகவும் இருந்தது.
சில்லறை பணவீக்கம் இதற்கு முன்னா் கடந்த 2023 ஆகஸ்ட்டில் 6.83 சதவீதமாக இருந்ததே அதிகபட்சமாகும். அதற்குப் பின்னா் 2023 செப்டம்பா் மாதத்தில் இருந்து சில்லறை பணவீக்கம் ரிசா்வ் வங்கி நிா்ணயித்த உயா்ந்தபட்ச வரம்பான 6 சதவீதத்திற்கு கீழே இருந்தது. ஆனால், கடந்த அக்டோபரில் அந்த வரம்பு மீண்டும் மீறப்பட்டுள்ளது.
உணவுப் பொருள்களின் விலை அடிப்படையிலான பணவீக்கம் கடந்த அக்டோபா் மாதத்தில் 10.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய செப்டம்பா் மாதத்தில் 9.24 சதவீதமாகவும் 2023 அக்டோபரில் 6.61 சதவீதமாகவும் இருந்தது.
மதிப்பீட்டு மாதததில் பருப்பு வகைகள், முட்டை, சா்க்கரை, மசாலாப் பொருள்களின் விலைகள் அடிப்படையிலான பண வீக்கம் கணிசமாகக் குறைந்தது.
ஆனால், காய்கறிகள், பழங்கள், எண்ணெய் வகைகளின் சில்லறை விலைகள் அதிகரித்தது ஒட்டுமொத்த சில்லறை பணவீக்கத்தின் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று தேசிய புள்ளியியல் அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.