சென்னை, நவ. 13- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆணையர் அலுவலகத்தில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் திருக் கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் ஓராண்டு அர்ச்சகர் தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடித்த 9 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித் ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் பொறுப்பேற்ற திராவிட மாடல் அரசு, கடந்த காலங்களில் முடக்கப்பட்டிருந்த அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், திவ்ய பிரபந்த பாடசாலை போன்ற பயிற்சி பள்ளிகளை எல்லாம் புனரமைத்து, மாணவர் சேர்க்கை நடத்தி பயிற்சி அளித்து வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு பயிற்சி முடித்த 115 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. 2,000 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டத்தின் வெற்றியாக இதனை கருதுகிறோம். அனைத்திலும் அனைவரும் சமம், ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமுதாயம் காண வேண்டும் என்று நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக போராடி வந்த போராட்டத்தின் வெற்றியாக திராவிட மாடல் அரசில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 11 பெண்கள் அதற்கான சான்றிதழ்களை பெற்றுள்ளனர். இது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓதுவார் பயிற்சியினை முடித்த 9 நபர்கள், தவில் மற்றும் நாதஸ் வர பயிற்சி முடித்த 9 நபர்கள் உள்பட 115 நபர்களுக்கும் துறையின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து நீங்கள் அனைவரும் தேவாரம், மங்கல இசை முழங்க அனைத்து திருக்கோயில்களிலும் உங்களுடைய பணியை நீங்கள் தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.