உத்தரப் பிரதேசத்தில் தனியார் பள்ளிகளுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்ததால் சுமார் 27,000 ஆரம்பப்பள்ளிகளை மூடுவதற்கான உத்தரவை உத்தரப் பிரதேச கல்வித்துறை முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளது, சாமியார் முதலமைச்சரும் இதற்கு ஒப்புதல் அளித்து விட்டார்.
புதிய கல்விக்கொள்கையின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்க விரும்பும் ஏழை மாணவர்களின் கல்விச்செலவை அரசு ஏற்று அவர்களுக்கான கட்டணத்தை நேரடியாக தனியார் பள்ளிக்குக்கொடுக்கும் என்ற விதி உள்ளது. இதனால் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் மாநிலத்தில் 50க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கு சாமியார் முதலமைச்சரும் ஒப்புதல் அளித்துள்ளார்
இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில பள்ளிக்கல்வித்துறை செயலாளர். டி.ஜி. கஞ்சன் வர்மா அனைத்து மாவட்டங்களின் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார். அதில் மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் இருந்து எடுத்து அருகில் உள்ள அவர்கள் விருப்பப் படும் தனியார் அல்லது அதிக எண்ணிக்கையில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் இந்த விவகாரம் குறித்து நவம்பர் 13 அல்லது 14இல் அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் சிறப்புக் கூட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மாநிலங்களில், குறிப்பாக தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஏழைக் குடும்பங்களின் கோடிக்கணக்கான குழந்தைகள் நல்ல கல்வி என்பது கிடைக்காமல் கல்வித்துறை அதிகாரிகளே தடை செய்கின்றனர்.
இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
உத்தரப் பிரதேசத்தில் தனியார் பள்ளிகளில் சேரவிரும்பும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசே கட்டணம் செலுத்தும் என்று கூறியுள்ளது.
இதனால் பெரும்பாலான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேரவிருப்பம் கொண்டுள்ளனர். இந்த நிலையில் கிராமப்புற மாணவர்கள் தனியார் பள்ளிப்பேருந்துகளில் செல்லக் கட்டணம் கட்ட முடியவில்லை.
கடந்த மாதம் பாக்பக் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகளின் பள்ளிக் கட்டணத்தை அரசு செலுத்தாததால் நூற்றுக்கணக்கான மாணவிகளை பள்ளியின் வெளியே வெயிலில் நிறுத்தி வைத்தனர். ஒருபுறம் அரசு பள்ளிக்கட்டணம் செலுத்தும் என்று எண்ணி அரசுப்பள்ளிகளில் இருந்து வெளியேறுகின்றனர். அதே நேரத்தில் அரசு தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை சரிவர செலுத்தாததால், மாணவர்கள் பள்ளியில் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றனர். இந்த நிலையில் மாநிலம் முழுவதிலுமுள்ள 27,000 ஆரம்பப் பள்ளிகளை மூட எடுத்த முடிவு உத்தரப் பிரதேச மாணவர்களின் எதிர்காலத்தை நாசப்படுத்திவிடும் என்று கல்வியாளர்கள் கவலைப்படுகின்றனர்.
பிஜேபி அரசு பொதுவாகக் கல்வி வளர்ச்சியில் அக்கறை செலுத்துவதில்லை. அப்படியே அக்கறை செலுத்தினாலும் அது ஏற்கெனவே கல்வியில் வளர்ச்சி அடைந்த உயர் ஜாதியினருக்கு, குறிப்பாகப் பார்ப்பனர்களுக்குப் பால் வார்ப்பது போல் தான் அமையும்.
‘நீட்’டைக் கொண்டு வந்து அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடிக்கவில்லையா? பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு (EWS) 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்று சட்ட விரோதமாக சட்டம் பிறப்பிக்கவில்லையா?
‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற பெயரில் +2 படிப்போடு கல்வியை நிறுத்துவதற்கான பொரு ளாதார உதவி என்ற ஆசையைக் காட்டவில்லையா?
எல்லாம் மனுதர்மப் புத்திதான்!