சென்னை, நவ.13 சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கல்லூரிக்கு அருகில் காளிகாம்பாள் கோயில் இருக்கிறதாம். இக்கோயிலில் நிகழ்ச்சி நடத்த சிருங்கேரி சங்கர மடத்தைச்சேர்ந்த விதுஷேக்ரா பாரதி சங்கராச்சாரி வரவழைக்கப்பட்டிருக்கின்றார்.
ஆனால், கோயில் நிகழ்ச்சி முடிந்ததும், அவரை வைத்து கல்லூரியிலும் நிகழ்ச்சிகளை நடத்த நிர்வாகம் திட்டமிட்டிருந்ததால். அதில் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
அப்படி பங்கேற்காவிடில் தேர்வு முடிவுகள் வெளி யிடப்படாது என்றும் பேராசிரியர்கள் மாணவிகளை மிரட்டும் தொனியில் பேசிய ஒலிப்பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இந்த ஒலிப்பதிவில், ‘‘மாணவிகள் அனைவரும் 12 ஆம் தேதி ஆடிட்டோரியத்தில் ஒன்றுகூட வேண்டும். அங்கு வருகைப்பதிவு எடுக்கப்படும். அனைவரும் கட்டாயமாக வர வேண்டும் என செயலாளர் உத்தரவிட்டுள்ளார். நிகழ்ச்சி முடியத்தாமதமாகும் என்பதால் பெற்றோரை அழைத்துச் செல்ல சொல்லி விடுங்கள். வரவில்லையெனில் தேர்வு முடிவுகளை வெளியிடமாட்டோம். என்றோ ஒருநாள் தானே உங்களை அழைக்கிறார்கள், அன்று கூட உங்க ளால் வரமுடியவில்லையெனில் அப்புறம் என்ன? கிறிஸ்தவ, முஸ்லீம் மாணவிகள் காரணம் சொன்னால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்து மதத்தைச் சேர்ந்த மாணவிகள் வரவில்லையெனில் நாளை அதன் பின் விளைவுகளை சந்தித்துதான் ஆக வேண்டும்’’ என பேராசிரியை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
கல்லூரி நடத்தும் கல்வித்தொடர்பற்ற நிகழ்ச்சிக்கு வரக்கட்டாயப்படுத்துவது மட்டுமல்ல; வராதவர்களுக்கு தேர்வு முடிவை நிறுத்திவைப்போம்(withheld) என்று மிரட்டுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது. தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை உடனடியாக தலையிட்டு உரிய தீர்வை காணவேண்டும்.