சென்னை, நவ.13- தமிழ்நாட்டில் புவி வெப்ப மயமாதல் காரணமாக புயல், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவில் நடப்பு ஆண்டில் முதல் 9 மாதங்களில் பேரிடர்களால் 3 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் உயிரிழந்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக பூவுலகின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக பருவம் தவறும் மழை, அதீத வெப்பம், வெப்ப அலை, அதிகன மழை, புயல், வறட்சி, மின்னல் போன்ற காலநிலை மாற்ற பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆண்டுதோறும் பல்வேறு இயற்கைப் பேரிடர்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் சந்தித்து வருகின்றனர். நீர், ஒலி, காற்று மாசு பாட்டின் அளவும் அதிகரித்து வருகிறது.
தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, காடுகள் அழிப்பு, பிளாஸ்டிக் பொருள்களை பயன் படுத்துதல், மரங்களை வெட்டுதல், இயற்கைக்கு எதிரான செயல்களை மேற்கொள்ளுதல், அதிக அளவிலான வாகனங்கள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காரணமாக புவி வெப்பமடைந்து வருகிறது. இதனால், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பாதிப்பை உண்டாக்கி வருகிறது.
காலநிலை மாற்றத்தால் தீவிர வெப்ப அலைகள், கடல்மட்ட உயர்வு, பல்லுயிர் வள இழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், தமிழ் நாட்டில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் இருமடங்காக உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்ப தாவது:
தமிழ்நாட்டில் புவி வெப்பமயமாத லால் உந்தப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகளான புயல், வெள்ளம், வறட்சி, வெப்ப அலை, மின்னல் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மய்யம் வெளியிட்ட Climate India 2024: An
Assessment of Extreme Weather Events எனும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டில் 29 நாட்கள் தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவான நிலையில், நடப்பு ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 67 நாட்களில் தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில் 93 சதவீதம் நாட்களில் ஏதோவொரு தீவிர வானிலை நிகழ்வு பதிவாகியுள்ளது.
இந்த காலத்தில் மட்டும் பேரிடர் களால் 3,238 பேர் உயிரிழந் துள்ளனர். 9,457 கால்நடைகள் இறந்துள்ள. 32 லட்சம் எக்டர் பரப்பிலான வேளாண் பயிர்கள் அழிந்துள்ளன. 2,35,862 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.