மழையை எதிர்கொள்ளும் சென்னை மாநகராட்சி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!

viduthalai
2 Min Read

சென்னை, நவ. 13- சென்னையில் நேற்றிரவு தொடங்கி பரவலாக மழை தொடரும் நிலையில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த அவசர கால கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மய்யத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (12.11.2024) காலை ஆய்வு செய்தார்.

பின்னர் பேசிய அவர், “சென்னையில் 11.11.2024 அன்று தொடங்கி மழை பெய்தாலும், எந்தப் பகுதியிலும் பெரிதாக மழைநீர் தேங்கவில்லை. இனிமேல் கனமழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

ஆய்வுக்குப் பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மய்யம் கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் காலை 7.30 மணி நிலவரப்படி பல மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை.

சராசரியாக சென்னையில் 3.60 செ.மீ., தென் சென்னையில் சராசரி 5.5 செ.மீ, பெருங்குடியில் 7.35 செ.மீ., மழை பெய்திருக்கிறது. அதேபோல, செங்கல்பட்டில் 1.06 செ,மீ., திருவள்ளூரில் 0.6 செ,மீ., காஞ்சிபுரத்தில் 0.5 செ.மீ., உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்திருக்கின்றது.

முதலமைச்சரின் உத்தரவின்படி இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மய்யத்தை நாங்கள் ஆய்வு செய்திருக்கின்றோம். முன்னெச்சரிகை நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தோம்.

1,194 மோட்டார் பம்புகள், 158 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், 524 ஜெட் ரோடிங் (Jet Rodding) இயந்திரங்களும் தயாராக உள்ளன. இது அக்டோபர் மாதம் பெய்த மழைக்கு பயன்படுத்தி இருந்ததை விட 21 சதவிகிதம் அதிகமாக்கி இருக்கின்றோம். அதேபோல, முந்தைய அக்டோபர் மழை அனுபவத்தின் அடிப்படையில், கண்காணிப்பு அதிகாரிகளின் அறிக்கையின் அடிப்படையில், கூடுதல் மோட்டார்களை ஏற்பாடு செய்துள்ளோம்.

சென்னை மாநகராட்சி சார்பில், 329 நிவாரண மய்யங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. 120 உணவு தயாரிப்பு மய்யங்களும் தயார் நிலையில் உள்ளன. கடந்த அக்டோபர் மாதம் 98 ஆக இருந்தது, அதையும் உயர்த்தியிருக்கின்றோம். சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில், கணேசபுரம் சுரங்கப்பாதை தவிர, மற்ற 21 சுரங்கப்பாதைகளில் வழக்கமான போக்குவரத்து போய்க் கொண்டிருக்கிறது. அதுவும், ரயில்வே மேம்பாலம் பணியை மேற்கொள்வதற்காக கணேசபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. காலை 9:30 மணி வரை எந்த பகுதியிலும் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை.

இருப்பினும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சென்னை மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி குழுவினர், அமைச்சர்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் இப்படி அனைவரும் களத்தில் இருக்கின்றோம். மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த அனைத்து விரைவான நடவடிக்கைகளையும் கண்டிப்பாக எடுப்போம். மக்களும், பத்திரிகை நண்பர்களும், ஊடகங்களும் எங்களுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கால்வாய்களில் தூர்வாரும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை முடித்துவிடுவோம்.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 22,000 நபர்கள் பணியில் இருக்கின்றனர். மழைநீர் சேகரிப்பிற்காகதான், மழைநீர் கட்டடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து கட்டடங்களுக்கும் மழைநீர் சேகரிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *