மத்தியப் பிரதேசத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்புதான் பழங்குடியின நபர் மீது சிறு நீர் கழித்த அவலம் நடைபெற்றது. இந்த நிலையில், தற்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழரை மலத்தைத் தின்ன வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு சிக்கல்களை இன்றளவும் எதிர்கொண்டு வருகின்றனர். ஜாதிய ஏற்றத் தாழ்வுகள் இன்னும்கூட பல இடங்களில் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. பல இடங்களில் தாழ்த்தப் பட்ட மக்களை கோயில்களில் நுழைய அனுமதிக்க மறுக்கும் சம்பவங்களும் நடந்து கொண்டே உள்ளன. மனித குலத்தின் அவமானமாக இந்தக் கொடூரங்கள் 2023லும் நீடித்துக் கொண்டு இருப்பது பெரும் வேதனைதான் – வெட்கக்கேடு! மகா வெட்கக்கேடு!!
அந்த வகையில், அண்மையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்தியப் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பழங்குடியின இளைஞர் மீது பாஜக சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளரும், பா.ஜ.க. இளைஞரணித் தலைவருமான பிரவேஷ் சுக்லா என்பவர், சிறு நீர் கழித்த கேவலம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி காட்டுத்தீயாகப் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பழங்குடியின இளைஞருக்கு நேர்ந்த கொடூரம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தன. இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்தி யப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உறுதி அளித்தார். தொடர்ந்து குற்றவாளி மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரை போபாலில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்துப் பேசிய முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவரின் காலைக் கழுவினார். பின்னர் அவருக்கு மாலை சூட்டி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு இனிப்பு ஊட்டியதோடு, மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இதுவும் ஒரு நாடகமே!
மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின இளைஞருக்கு கொடூரம் நடைபெற்று இரு வாரங்களே ஆன நிலையில், மற்றொரு அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. கொடூரத்தின் உச்சமாக நடைபெற்று இருக்கும் இந்த சம்பவம் நாம் நாகரிக உலகில்தான் வாழ்கிறோமா என்ற வினாவை எழுப்புகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் சத்ரபூர் மாவட்டத்தில் உள்ள பைகுரா கிராமத்தில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. கட்டுமானப் பணியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தஷ்ரத் அஹிர்வார் என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது உயர்ஜாதி வகுப்பை சேர்ந்த ராம்க்ரிபால் படேல் என்பவர் அருகில் இருந்த அடிபம்ப் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். கட்டுமானப் பணியில் ஈடுபட்டு இருந்த அஹிர்வார் தவறுதலாக தனது கையில் இருந்த கிரீஸ் உடன் ராம்க்ரிபால் படேலை தொட்டு விட்டாராம்.
இதனால், கடும் கோபமான ராம்க்ரிபால் தான் கையில் வைத்து இருந்த கப்பில் மலத்தை எடுத்து வந்து அஹிர்வாரின் உடல், தலை, மற்றும் முகத்தில் கொட்டியிருக்கிறார். மேலும் ஜாதிப் பெயரைச் சொல்லியும் ஆபாசமாகத் திட்டித் தீர்த்திருக்கிறார். அதை அவரது வாயில் திணித்து சாப்பிடவும் வைத்துள்ளார் கொடூரத்தின் உச்சமாக நடைபெற்ற இந்த கொடூரத்தால் வேதனை அடைந்த தஷ்ரத் அஹிர்வார் உள்ளூர் பஞ்சாயத்தில் முறையிட்டு இருக்கிறார். ஆனால், பஞ்சாயத்துக் கூட்டத் தில் நடந்த கொடூரம் என்னவென்றால் பாதிக்கப்பட்ட நபருக்கே ரூ.600 அபராதம் விதித்து இருக்கிறார்கள். இதையடுத்து, காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து அஹிர்வார் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் அய்பிசி பிரிவு 294, 506 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவலர்கள் கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய அந்த நபரை கைது செய்தனர் – பெயரளவுக்குத்தான் இதுகூட!
பா.ஜ.க. ஒன்றியத்திலும், சில மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தாலும் வந்தது. அது முதல் மத, ஜாதிய வெறி கொண்ட கேவலமான நடவடிக்கைகள், வன்முறைகள் கோரத் தாண்டவமாடுகின்றன.
மதப் பிரச்சினை, ஜாதிப் பிரச்சினைகளைத் தவிர பிஜேபிக்கும், சங்பரிவார்க் கும்பலுக்கும் (ஆட்சி உட்பட) சொல்லிக் கொள்ளும் வகையில் எந்த உருப்படியான திட்டமும், மக்கள் நலமும் எதுவும் இல்லை.
நாட்டைப் பீடித்த ஆர்.எஸ்.எஸ். தத்துவத்தின் ஆணி வேரை வீழ்த்தாவிட்டால் நாடே சுடுகாடாகும் – காட்டு மிருகங்கள் உலவும் காடாகும் – எச்சரிக்கை! எச்சரிக்கை!!