உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
மதுரை, நவ. 12- ‘தமிழ்நாட்டில் அனைத்து தேர்வுகளிலும் திருக்குறள் தொடர்பான வினாக்கள் கேட்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ராம்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். திருக்குறளில் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அதிகாரங்களில் உள்ள அனைத்து திருக்குறள்களையும் 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டத்தில் சேர்க்க 2016இல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 2017இல் அரசாணை வெளியிட்டது. இருப்பினும், அந்த அரசாணை பெயரளவில் மட்டுமே உள்ளது. மொத்தம் 30 திருக்குறள் முதல் 60 திருக்குறள்கள் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பாடத் திட்டத்தில் திருக்குறள் மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பொருள் கொடுக்கப்படவில்லை.
மாணவர்கள் தேர்வுகளில் திருக்குறள் பெயரளவில் தான் இடம் பெறுகின்றன. எனவே, தமிழ்நாட்டில் 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டத்தில் திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலின் அதிகாரங்களில் உள்ள திருக்குறள்களை பொருளுடன் இடம் பெறச் செய்யவும் தேர்வுகளில் திருக்குறள் சம்பந்தமான கேள்விகள் இடம் பெறச்செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “அனைத்து வகுப்புகளுக்கும் திருக்குறள் பாடமாக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் திருக்குறள் மட்டுமே பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருக்கும், அதற்கான விளக்கத்தை உரைகளில் தேடி படிக்கும் வகையில் இருந்தது. தற்போது திருக்குறள், அதன் பொருள் விளக்கம், சொல் விளக்கம் போன்ற அனைத்தும் சேர்த்து பாடப் புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ளன. தேர்வுகளிலும் திருக்குறள் தொடர்பான வினாக்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கொள்ளளவை அதிகப்படுத்த மேட்டூர் உள்ளிட்ட நான்கு அணைகள் தூர்வார திட்டம்!
நீர்வளத்துறை தகவல்!
சென்னை, நவ.12- மேட்டூர் உள்ளிட்ட 4 அணைகளின் நீர்த்தேக்கக் கொள்ளவை மேம்படுத்துவதற்காக ரூ.15.55 கோடியில் தூர்வாரப்பட உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.
தமிழ்நாட்டில் குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக 15 பெரிய அணைகள் உள்பட 90 நீர்த் தேக்கங்கள் உள்ளன. இவை அனைத்தும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 மண்டலங்களாக பிரித்து நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224.297 டி.எம்.சி.யாகும். (ஒரு டி.எம். சி. என்பது 100 கோடிகன அடி தண்ணீர்) இதில் நேற்றைய நிலவரப்படி 165.637 டி.எம்.சி. இருப்பு, அதாவது 73.85 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.
நீர்த்தேக்கங்களுக்கு பருவமழையால் ஆண்டு தோறும் வரும் நீரால் மண் அடித்து வரப்படுவதால் ஏரியின் கொள்ளளவு ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் நீர்த்தேக்கங்கள் பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகளுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
தூர்வாரும் பணி
அந்தவகையில் 2020-2021ஆம் ஆண்டு நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கையின் போது சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர், தேனி மாவட்டத்திலுள்ள வைகை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை ஆகிய 4 அணைகளின் கொள்ளளவை மேம்படுத்தப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தூர்வாரும் பணிகளுக்கு சட்ட ரீதியான அனுமதி மற்றும் ஆலோசனைகளை பெற, தனியார் நிறுவனங்களை நியமிக்க நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது. ரூ.15.55 கோடியில் 4 அணைகள் தூர்வார முடிவு செய்துள்ள நிலையில், அதற்காக சட்டரீதியான அனுமதி, ஆலோசனைக் கட்டணம், தகுந்த முகமைகளை நியமிப் பது உள்ளிட்ட பணிகளை தொடங்குவதற்காக அரசு முதல் கட்டமாக நீர்வளத்துறைக்கு ரூ 3.63கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
ஒப்பந்தப்புள்ளி திறப்பு
அந்தவகையில், வைகை அணைக்கான ஒப்பந்தப் புள்ளி நாளை (13.11.2024), அமராவதி அணைக்கான ஒப்பந்தப்புள்ளி வருகிற 20ஆம் தேதியும் திறக்கப்படுகிறது. அதேபோல், மேட்டூர் மற்றும் பேச்சிப்பாறை அணைகளுக்கான ஒப்பந்தப்புள்ளி திறக் கப்பட்டு நீர்வளத்துறையின் பரிசீலனையில் உள்ளது. ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு 4 அணைகளுக்கான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர், திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு 4 அணைகளும் தூர்வாரப்படுகிறது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வைகை அணையில் தேங் கியுள்ள மணலை 3 ஆண்டு கள் எடுத்து விற்பதன் மூலம் ரூ.315 கோடியும், பேச்சிப் பாறை அணை மூலம் ரூ.140 கோடியும், அமராவதி அணை மூலம் ரூ.250 கோடியும், மேட்டூர் அணை மூலம் ஓராண்டுக்கு ரூ.112கோடியும் தோராயமாக வருவாய் கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்