பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் தீவிரம்!

Viduthalai
2 Min Read

திருவண்ணாமலை, நவ.12: திருவண்ணாமலை மாவட்டத்தில், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்திருப்பதாவது:

பள்ளிக்கல்வித்துறை இணையதள தகவல் தொகுப்பின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 5,156 குழந்தைகள் பள்ளி இடைநின்ற, பள்ளிக்கு வராத குழந்தைகள் என கண்டறியப்பட்டனர். அதில், 1,001 குழந்தைகள் பள்ளி நேரடி சேர்க்கை மூலம் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். மேலும், மீதமுள்ள 4,155 குழந்தைகளின் விவரங்கள் களஆய்வின் மூலம் சரிபார்க்கப்பட்டு, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணியை கடந்த 5ஆம் தேதி தொடங்கி வைத்ததன் அடிப்படையில், தற்போது பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

அதோடு, பள்ளி செல்லா இடைநின்ற மாணவர்களை கண்காணிக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்வது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.பள்ளி கல்வி இடைநின்ற குழந்தைகள், குழந்தை தொழிலாளர்களாகவும், குழந்தை திருமணத்திற்கு உள்ளானவர்களாகவும் மாறுகின்றனர். எனவே, அவர்களை விரைந்து கண்டறிந்து பள்ளிகளில் சேர்ப்பது அவசியம். இந்த பணியை விரைவுப்படுத்துவதற்காக, அனைத்துத்துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து குழு அமைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து, மாணவர் களை பள்ளியில் சேர்க்கும் களப்பணியில் ஈடுபடும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அலுவலர்களை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆய்வு செய்யப்படுகின்றனர்.

பள்ளியில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் விவரத் தினை பெற்று பதிவு செய்யப்படுகிறது. மேலும், மாணவர் களை தொடர்பு கொண்டு பள்ளியில் சேர்ந்த விவரம் மற்றும் தகவல்களை பெற்று தினசரி அறிக்கையாக அளிக்கப்படுகிறது. இந்த தீவிர முயற்சியின் காரணமாக, இதுவரை 2,773 குழந்தைகள் வீடு வீடாக சென்று சரிபார்த்து பள்ளிக்கல்வித்துறை செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதில், இதுவரை 295 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 12 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பள்ளிக்கு வராத 1,616 குழந்தைகளில், 596 குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதன்படி, மொத்தம் 891 பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள குழந்தைகளை ஆய்வு செய்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *