விழுப்புரம்,நவ.12- பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவர்களை தமிழ்நாடு அரசு கைவிட்டு விடாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரி வித்தார்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இலவச கல்வி, ஆசிரியர்கள் பாதுகாப்பு மாநில மாநாடு விழுப்புரம் மாவட் டம், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 10.11.2024 அன்று நடைபெற்றது.
மாநாட்டுக்கு ஆசிரியர் கூட்டணி யின் மாநிலத்தலைவர் ஆ.லட்சுமிபதி தலைமை வகித்தார். தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநாட்டு மலரை வெளியிட்டுப் பேசினார்.
முன்னதாக, விழுப்புரத்தில் ஆசிரியர் கூட்டணியின் அலுவலகக் கட்டடத்தை அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 2009ஆம் ஆண்டுக்கு முன்பு, அதற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்கள் என இடைநிலை ஆசிரியர்களை வேறுபடுத்திப் பார்க்காமல் அவர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.
தமிழ்நாடு அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு,ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் கூட்டணியின் மாநில பொதுச்செயலர் இரா. தாஸ் திட்ட செயலறிக்கையை வாசித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் அன்னியூர் அ.சிவா (விக்கிரவாண்டி), இரா.லட்சுமணன் (விழுப்புரம்), நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் பொன்.கவுதமசிகாமணி, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ரெ.அறிவழகன் (விழுப்புரம்), கா.கார்த்திகா (கள்ளக்குறிச்சி), ஆசிரியர் கூட்டணியின் சட்டப் பணிகள் குழு மாவட்டச் செயலர் சு.ரமேஷ், விழுப்புரம் மாவட்டச் செயலர் த.அறிவழகன், கட்டடப் பிரிவுச் செயலர் தே.ஜெயநந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் மாநிலப் பொருளாளர் பி.தியாகராஜன் நன்றி கூறினார்.
முன்னதாக, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் 2,500 பள்ளிக ளில் தலைமையாசிரியர்கள் பணி யிடங்கள் காலியாக உள்ளதாக முதலமைச்சர் தலைமையில் நடை பெற்ற பள்ளிக் கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு வருகிற 13 ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கடும் நிதி நெருக்கடி யிலும் அவர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. பகுதிநேர ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு கைவிட்டுவிடாது என்றார் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.