27-6-2023 அன்று சென்னையில் நடைபெற்ற “90இல் 80 அவர்தான் வீரமணி” சிறப்புக் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரும், கொள்கைபரப்புச் செயலாளருமான திருச்சி என்.சிவா ஆற்றிய உரையிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அரிய சாதனைகள் பற்றி இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டியவை!
10 வயதில் சிறுவனாக மேடை ஏறிப் பேசுகிறார்.
11 வயதில் திருமண விழாவிற்குச் சென்று வாழ்த்தினை வழங்குகிறார். 12 வயதில் பொதுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார்.
13 வயதில் ஒரு மாநாட்டில் கொடியேற்றி வைக்கிறார்.
27 வயதில் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராகிறார்.
29 வயதில் ‘விடுதலை’ நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார்.
45 வயதில் திராவிடர் கழகத்தின் தலைமை யேற்கிறார்
சமுதாய சீர்திருத்த இயக்கத்திற்கு 45 ஆண்டுகள் தொடர்ந்து தலைவராக இருக்கும் பெருமை ஆசிரியர் அவர்களுக்கு மட்டுமே.
திராவிட இயக்க கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டு, முரட்டு வாதம் செய்கிற ‘துக்ளக்’ பத்திரிக்கையின் ஆசிரியர் சோ அவர்களின் அலுவலகம் சென்று நேருக்கு நேர் சிந்தாமல், சிதறாமல், உணர்ச்சி வசப்படாமல் பேட்டி அளித்த பெருமை இவருக்கு உண்டு. ஆசிரியரின் பேட்டிக் கண்டு ஆசிரியர் தான் கொண்ட கொள்கையின் தெளிவுகாரணமாகவே பதட்டப் படாமல், உணர்ச்சி வசப்படாமல், தனது கருத்தினை வலியுறுத்தினார் என சோ அவர்களால் பாராட்டுப் பெற்றவர்.
90 வயதிலும் உங்களின் நடை ரொம்ப பிடிக்கும். நீங்கள் நடக்கிறீர்களா அல்லது ஓடுகிறீர்களா எனத் தெரியவில்லை.
1943-ஆம் ஆண்டு கூட்டம் எப்போது நடந்தது, அமைப்புகள் தொடங்கப்பட்ட நாள், எந்த ஊர், எந்த கூட்டம், எந்த கழகம், எந்த மாநாடு, என்பதை அப்படியே நினைவில் வைத்திருக்கும் திறமைப்பெற்றவர்.
பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கெல்லாம் நீங்கள் தான் ஆசிரியர் !
1934இல் கணவரை இழந்த ரங்கம்மாள் என்பவருக்கும், சிதம்பரம் என்பவருக்கும் தந்தை பெரியார் அவர்கள் புரட்சிகரமான திருமணத்தை நடத்தி வைத்தார். இவர்களது திருமண வழக்கில் 1953ஆம் ஆண்டு நீதி மன்றம் இந்த சுயமரியாதை திருமணம் செல்லுபடியாகாது எனத் தீர்ப்பு வழங்கியது. இவர்களது அன்பு மகள்தான் நமது ஆசிரியரின் இணையர் மோகனா அவர்கள். ஆசிரியர் 90 வயதிலும் இளமையோடு செயல்படு வதற்கு முழுக் காரணம் அம்மையார் தான். அம்மையார் அவர்கள் “தமிழ்நாட்டின் பொக் கிஷமாக”த் திகழும் ஆசிரியருக்குப் பாது காவலராக உள்ளார்.
94 வயது வரை தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்தார் ! 95 வயது வரை கலைஞர் அவர்கள் வாழ்ந்தார் !. ஆசிரியரே நீங்கள் நூறாண்டுகளுக்கு மேலாக வாழ்வீர்!
வாழ்க தமிழர் தலைவர் நூறாண்டுகளுக்குமேல்! வளரட்டும் அவரது பகுத்தறிவுப் பிரச்சாரம்!!
– த.சண்முகசுந்தரம்
கடலூர் – 3
(பாரம்பரிய, நீதிக்கட்சிக் கால உறுப்பினர் – குடும்ப வாரிசு
– ஓய்வு பெற்ற அரசு பணியாளர்)