‘சட்டக்கதிர்’ தலையங்கம்
கல்வி மாநில அரசுப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு அவசரநிலை பிரகடனம் அமலில் இருந்த 1977 ஆம் ஆண்டு 42ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டம் மூலம் மாற்றப்பட்டது. மாநிலங்களின் அங்கீகாரம் பெற்று கொண்டுவரப்பட வேண்டிய இத்தகைய திருத்தச் சட்டம் அவசர நிலை அமலில் இருந்த காரணத்தால் மாநிலங்களின் நலனைப் புறந்தள்ளி அவைகளின் அனுமதி பெறாமல் கொண்டு வரப்பட்டது. எனவே இந்த மாற்றம் சட்டப்படி செல்லுமா? என்கின்ற அய்யப்பாடு சட்ட வல்லுநர்கள் மத்தியில் இன்றும் இருந்து வருகிறது.
மேலும் அவசரநிலை அமலில் இருந்தபொழுது கொண்டு வரப்பட்ட 42ஆவது அரசியல் சாசனச் சட்ட திருத்தத்தின் பெரும்பகுதி பின்னர் வந்த ஜனதாதள அரசால் ரத்து செய்யப்பட்டு 44ஆவது அரசியல் சாசன சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட ‘கல்வி’ மட்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படவில்லை. கல்வி பொதுப்பட்டியலில் தொடர்ந்து நீடித்தது. இன்றும் நீடிக்கிறது. இந்த நிலை இனியும் நீடித்தால் பல்வேறு பிரச்சினைகள் உருவாகி மாநிலப் பாடத்திட்டத்தின்படி படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக ஆகும் வாய்ப்பே அதிகம்.
மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு மொழி சார்ந்த கல்வியில் தேசியக் கொள்கை என்பது முரண்பாடான ஒரு கருத்தாகும். நாளடைவில் இது ஹிந்தி மொழி பேசும் மக்களின் ஆதிக்கத்தின் கீழ் மற்ற மாநில மொழி பேசும் மக்களையும், மாணவர்களையும் கொண்டு வரும் செயல் என்ற கருத்து ஆதாரமற்றது என்று கூற முடியாது. இவ்வாறு தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சீரழிக்கும் செயல் என்பதே உண்மை.
ஒன்றிய அரசு கல்வி குறித்து பல்வேறு சட்டங்களையும், செயல்முறை உத்தரவு களையும் பிறப்பித்து வருகிறது. இப்படி பிறப்பிக்கின்ற எந்த ஒரு உத்தரவையும், சட்டத்தையும் பெரும்பான்மையான மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அமல்படுத்த வேண்டும். ஏனெனில் பொதுப்பட்டியல் என்பது மாநில அரசும், ஒன்றிய அரசும் ஒரு பொருள் குறித்து சட்டம் இயற்றலாம் என்று இந்திய அரசியல் சட்டத்தில் பொது விதியாகக் கூறப்பட்டுள்ளது. அப்படி இயற்றப்படுகின்ற சட்டங்களில் ஒன்றிய அரசாங்கம் இயற்றும் சட்டமே செல்லும் என்று கூறப்படுகிறது. அந்தந்த மாநில அரசு கொண்டு வருகின்ற எந்த ஒரு சட்டத்தையும் ஒன்றிய அரசு புறந்தள்ளிவிட்டுப் புதிய சட்டத்தைக் கொண்டு வர முடியும். அப்படிக் கொண்டு வர வேண்டுமென்றால், மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற வேண்டும். ஆனால் நடைமுறையில் மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் ஒன்றிய அரசு தொடர்ந்து சட்டங்களை இயற்றி உள்ளது.
குறிப்பாக இந்தியா முழுமைக்கான ஒரே நுழைவுத் தேர்வு நடத்தி (நீட்) அதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிடுகிறது. இதனை நீட் என அழைக்கின்றனர் இந்தத் தீர்ப்பு குறித்து மாநில அரசுகள் விளக்கம் கேட்டு மீண்டும் வழக்கு தொடுக்கலாம். மாநில அரசுகளே மாநில அளவில் நுழைவுத் தேர்வினை நடத்துவதற்கு, தனிச்சட்டம் கொண்டு வந்தால் அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஏனெனில் அந்தந்த மாநிலங்களில் அனுமதி பெற்ற பள்ளிக்கூடங்கள்தான் அந்தந்த மாநில பள்ளிக்கூட மாணவர்களின் தரத்தை நிர்ணயிக்கின்றன. எனவே மாநில அரசாங்கமே, மாநில அளவில் நுழைவுத் தேர்வை நடத்தி தேர்ந்தெடுக்கலாம். அதற்கான சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிக் குடியரசுத் தலைவரின் அனுமதியையும் பெறத் தடையிருக்கக்கூடாது. இதன் மூலம் மாநில அரசின் அதிகார எல்லைக்குள் கல்வியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியும். அதேபோல அந்தந்த மாநில மாணவர்களுக்கு, அந்தந்த மாநிலத்திலேயே தகுதி, திறமை மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் இடம் கிடைக்கும். இந்த மாறுதல் செய்வதற்கான பணிகளைச் சட்டமாகக் கொண்டு வர மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மாநில அரசு நடத்தும் பள்ளிக் கூடங்களில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்கச் சட்டம் கொண்டு வரலாம். நுழைவுத் தேர்வு அவசியமா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசிடமே இருக்க வேண்டும்
ஒன்றிய அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு அனுமதி வழங்குகின்றபோது. மாநில அரசு இது குறித்து தனது அனுமதியையும் வழங்குதல் வேண்டும். ஒரு மாநிலத்தில் அளவுக்கு மீறி மத்தியப் பள்ளிகள் திறந்து விட முடியாது – அப்படி திறக்கின்றபோது மாநில அரசாங்கம் ஏன் மாநில அரசின் பாடத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கேள்வி எழுப்பலாம் ஒன்றிய அரசின் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் அப்படி காரணம் தெரிவிக்கப்படுகின்றபோது. ஒவ்வொரு பள்ளியிலும் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர் படிக்கிறார்கள், ஒன்றிய அரசாங்க ஊழியர்கள் பிள்ளைகள் எவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்கிற விகிதத்தினைத் தெரிவிக்க வேண்டும் அந்த விகிதம் குறைவாக இருக்குமேயானால் மத்திய அரசாங்கப் பள்ளிகள் திறப்பதற்கான காரணங்களை அவர்கள் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரணம் நியாயமானதாக இல்லாவிட்டால், மாநில அரசு அங்கீகாரத்தைப் பெற்று அந்த பள்ளிகள் நடத்த வேண்டும் என மாநில அரசு சட்டம் கொண்டு வரலாம்.
மாநில அரசாங்கத்தின் பொறுப்பில் பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகிறபோது, மத்தியப் பல்கலைக்கழகங்கள், மத்தியத் தன்னாட்சி நிறுவனங்கள் இவைபோன்ற நிறுவனங்கள் நிறுவிக்கப்பட்டால், அவை அனைத்திலும் நியமிக்கப்படுகின்ற நிர்வாக உறுப்பினர்கள் அய்ம்பது சதவிகிதம் பேர் மாநில அரசால் நிர்ணயிக்கப் படவேண்டும் என்று மாநில அரசு சட்டம் கொண்டு வரலாம்.
ஒன்றிய அரசுப் பள்ளிகள் அனைத்திலும் பயிற்று மொழியாக அல்லது ஒரு மொழிப் பாடமாக தமிழ் கட்டாயம் இருந்தாக வேண்டுமென்று மாநில அரசு சட்டம் கொண்டு வரலாம். இதன் மூலம் மாநில மொழி பாதுகாக்கப்படும். மாநில மொழி அறிவு வளரும். மாநிலத்தில் தொடர்ந்து குடியிருக்க முடியும், வாழ முடியும்.
மாநில அரசு சட்டம் கொண்டு வருகின்றபோது, மாநில அரசாங்கத்தினுடைய கல்வி குறித்துச் சட்டம் இயற்றும் உரிமையையும், மாநில மக்களின் உரிமையையும், மாநில மொழி, பண்பாடு குறித்தவற்றை பாதுகாக்கின்ற பொறுப்பினையும் மாநில அரசிடம் வழங்கிட வேண்டும்.
நன்றி: ‘சட்டக்கதிர்’ நவம்பர் 2024