கோவர்தன் பூஜை எனப்படும் நிகழ்வு தீபாவளிக்கு அடுத்த நாளில் வட இந்தியாவில் நடைபெறுவது வழக்கம். இந்தப் பாரம்பரிய வழிபாட்டில் பசு மாடுகள் பக்தர்கள் மீது ஏறி மிதித்தபடி ஓடுகின்றன.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினி நகரில் ஒரு பாரம்பரிய வழிபாடு நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. தீபாவளியை ஒட்டி நடைபெறும் இந்தப் பாரம்பரிய வழிபாட்டில் பசு மாடுகள் பக்தர்கள் மீது ஏறி மிதித்து ஓடுகின்றன. இவ்வாறு பசுமாடுகளிடம் மிதி வாங்கினால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனராம்.
இந்த ஆண்டு நடைபெற்ற இந்தக் கேவலமான வழிபாட்டின் காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைர லாகியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பிதாத்வாட் கிராமத்தில், ஆண்டுதோறும் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்வுக்காக ஏராளமான பசுக்கள் வருகின்றன. ஏராளமான பக்தர்கள் பாடிக் கொண்டே குறுக்கே படுத்துக் கொள்கிறார்கள். பசு மாடுகள் விடுவிக்கப்பட்டதும் படுத்துக் கிடக்கும் பக்தர்கள் மீது ஏறி ஓடுகின்றன. ‘தாய்ப் பசு யாருக்கும் தீங்கு செய்யாது’ என்பது இந்த நிகழ்வின் பின்னால் உள்ள நம்பிக்கையாம்!
இந்தப் பாரம்பரிய நிகழ்ச்சி பல ஆண்டுகளாக தொடர்கிறது என்று அந்த ஊர் மக்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பிதாத்வாட்டில் நடக்கும் கோவர்தன் பூஜையில் கலந்துகொள்ள ஏராளமான மக்கள் வருகிறார்கள். அவர்கள் இதற்காக அய்ந்து நாட்கள் விரதம் இருந்து, கோவிலில் தங்கி, கீர்த்தனைகளைப் பாடி பஜனை செய்கிறார்கள். கடைசி நாளில், மாடுகளிடம் மிதி வாங்கும் நிகழ்வு நடக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி இதே போன்று நடந்த விழாவில் 3 பேருக்கு இடுப்பு மற்றும் தொடை தோல் சிதைந்து அறுவைச் சிகிச்சை செய்யும் நிலை உருவானது. இம்முறையும் 5 பேருக்கு காயம் ஏற்பட்டதாக உள்ளூர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது
பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் சொன்னதை அச்சிட்டு, சட்டம் போட்டு வீட்டு வாசலில் மாட்டி வைக்க வேண்டும். எச்சில் இலையில் உருளுவது, கோயில் விழாவில் துடைப்பத்தால் அடி வாங்குவது, பூசாரி தின்று உமிழ்ந்த வாழைப் பழத்தை, குழந்தை இல்லாத பெண் தன் வாயால் கவ்வுவது. நினைத்தாலே குமட்டிக் கொண்டு வரும் இத்தகைய காட்டு விலங்காண்டித்தனங்களை விரும்பி ஏற்பது எல்லாம் எதைக் காட்டுகின்றன?
மனிதனின் தனி அடையாளமான பகுத்தறிவைப் பக்தியில் பறி கொடுத்ததால் அநாகரிகம், அசூயை என்பதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல.
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்று தந்தை பெரியார் சொல்வது பக்தர்களை வசைபாடுவதற்காக அல்ல; அவர்களை ‘அறுவைச் சிகிச்சை’ செய்து காப்பாற்றுவதற்கே!
மனிதனை மதிப்பதிலும் மனிதநேயத்தைப் பேணுவதிலும் தந்தை பெரியாருக்கு நிகர் தந்தை பெரியாரே!