ஆளும் பிஜேபி கும்பலுக்கு முதலமைச்சர் அதிரடி பதிலடி
திருச்சி, ஜூலை 27- ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள்! கோட்சேவின் வாரிசுகள்தான் நீங்கள்!! என்று ஆளும் பிஜேபி கும்பலுக்கு முதலமைச்சர் அதிரடி பதிலளித்துள்ளார்.
நேற்று (26.07.2023) மாலை, திருச்சியில் நடைபெற்ற, தி.மு.க. டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடிப் பொறுப் பாளர்கள் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் – திருச்சிக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில்தான் நாம் 1957 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடலாம் என முடிவெடுத்தோம்.
திருச்சியை ‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாடி வீடு’ என்று பேரறிஞர் அண்ணாவும், ‘கழகத்தின் கோட்டை’ என்று நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களும் சொல்வார்கள். கழகத்தின் கோட்டை மட்டுமல்ல, கழகத்தின் தீரர்கள் கோட்டம்தான் இந்த திருச்சி.
அய்ம்பெரும் முழக்கங்கள்
1971 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில்தான் தலைவர் கலைஞர் அவர்கள் நம்முடைய கொள்கை முழக்கங்களான,
* அண்ணா வழியில் அயராது உழைப்போம்,
* ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்,
* வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்,
* ஹிந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்,
* மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’- என்ற ‘அய்ம்பெரும் முழக்கங்களை’ நமக்கு உருவாக்கித் தந்தார்கள்.
முக்கியமான மாநாடுகளை திருச்சியில்தான் தலைவர் கலைஞர் அவர்கள் தேர்ந்தெடுத்து நடத்துவார்கள். அவ்வாறு நடத்தப்படும் மாநாடுகள் எல்லாம் திருப்புமுனை மாநாடு களாக அமையும். ஏன், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திருச்சியில் மாநாடுபோல் நடைபெற்ற பொதுக்கூட்டம்தான் தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம் அமைத்த சிறப்பான பொதுக்கூட்டமாக அமைந்திருந்தது.
கழகத்தின் வரலாறு – அடிப்படைக் கொள்கைகள் – திராவிட இயக்கத்தின் கோட்பாடுகள் – நவீன தமிழ்நாட்டை உருவாக்க நாம் எடுத்த முயற்சிகள் – ‘திராவிட மாடல்’ ஆட்சி ஆகியவை குறித்த அடிப்படைத் தகவல்களை நீங்கள் எல்லாம் அறிந்திருப்பீர்கள். அதேபோல், தேர்தல் பணிகள் குறித்த விதிமுறைகளையும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இவை அனைத்தையும் மனதில் வைத்து நீங்கள் செயல்பட வேண்டும்.
75-ஆவது ஆண்டில் தி.மு.க
வருகிற செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி, தி.மு.கழகம் தொடங்கப்பட்டு 75 ஆவது ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை இப்போது நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். புதியதாக ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் உத்தரவிட்டு அந்தப் பணிகள் வெற்றி கரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில்தான் நாடாளு மன்றத் தேர்தலை எதிர்நோக்கி நாம் காத்திருக்கிறோம். இத்தகைய பெருமை வாய்ந்த இந்த ஆண்டில்தான் நீங்கள் வாக்குச் சாவடியின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக் கிறீர்கள்.
தி.மு.கழகத்தின் வாக்குச்சாவடிப் பொறுப்பாளர் என்ற நிலையை அடைந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்!
தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்கள் பணி என்பதையே அடிப்படையாக மனதில் ஏற்று நாம் நம்முடைய கடமையை ஆற்றி வருகிறோம்.
கரோனாவின் முதல் அலையின் போது நாம் ஆட்சியில் இல்லை. அந்த நேரத்தில் நம் கழக உடன்பிறப்புகள் சிலரை கரோனாவுக்கு இழந்தபோதும்கூட, ஒவ்வொரு பகுதியிலும் நம் தி.மு.கழகமே முழுவீச்சில் இறங்கி நிவாரணப் பணிகளைச் செய்தது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். வாக்குச்சாவடியின் பொறுப்பாளர்களாகிய நீங்கள்தான் அந்தக் கடமையைச் செய்திருக்கிறீர்கள்.
‘நாற்பதும் நமதே! நாடும் நமதே!’
வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்களாகிய நீங்கள்தான் உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்களுக்கு முழு பொறுப்பாளர். வாக்குச் சாவடிப் பொறுப்பாளர் என்றால் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கும் நீங்கள்தான் பொறுப்பாளர்! இதனை யாரும் மறந்து விட வேண்டாம்!
‘நாற்பதும் நமதே! நாடும் நமதே!’ என்று நான் முழங்கி இருக்கிறேன் என்றால் உங்கள் மீது நம்பிக்கை வைத்துத்தான் முழங்கி இருக்கிறேனே தவிர, வேறு அல்ல.
இன்று முதல், கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்கள் என்ற கம்பீரத்தோடு நீங்கள் கடமையாற்ற வேண்டும். தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து சொல்லி வந்ததுபோல், வெற்றி ஒன்றே உங்களுடைய இலக்காக அமைய வேண்டும். வெற்றியை அடைவதற்கான வழிமுறைகளில் மிகச் சரியாக நீங்கள் நடைபோட வேண்டும்.
மூன்று முக்கிய பணிகள்!
பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் உங்களுக்கு நிறைய கடமைகளும் இருக்கிறது. அதில் குறிப்பாக, வாக்காளர் பட்டியலைச் சரிபார்ப்பதுதான் உங்களது முதல் பணி! வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்குச்சாவடிக்குரிய வாக்காளர்களின் விவரங்கள் சரியாக இருக்கின்றனவா, ஏதேனும் போலி வாக்காளர்கள் இடம் பெற்றிருக்கின்றனரா, இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறதா ஆகிய வற்றை முழுமையாகச் சரிபார்க்கும் கடமை உங்களுடையது.
வாக்காளரை நம்மை நோக்கி ஈர்ப்பது அடுத்த பணி! உங்களது வாக்குச் சாவடிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடி உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, தினமும் வாக்காளர்களைச் சந்தித்து பரப்புரை மேற்கொள்வதும், நம்முடைய சாதனைகளை அவர்களிடம் தொடர்ந்து எடுத்துச் சொல்வதும் உங்களுடைய இரண்டாவது பணி.
வாக்குப்பதிவு நாள்களில் வாக்காளர்களை வாக்குப்பதிவு மய்யங்களுக்கு வரவைப்பது மூன்றாவது பணி! இந்த மூன்று பணிகளையும் சிறப்பாகச் செயல்படுத்த வாக்காளர் குடும்பத் துடன் நீங்கள் நெருக்கமான நட்பைக் கொண்டிருக்க வேண்டும்.
உங்கள் வாக்குச்சாவடியில் 250 குடும்பங்கள் இருக்கின்றன என்று சொன்னால், அந்தக் குடும்பங்களில் ஒருவராக நீங்கள் மாற வேண்டும். அது எப்படி மாற முடியும்? சொல்கிறேன்.
முதலில் உங்கள் வாக்குச் சாவடியில் உள்ள ஒவ்வொரு வாக்காளரைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். வாக்காளரின் பெயர், அவரின் வயது, அவருடைய குடும்பத்தினர் யார், என்ன படித்திருக்கிறார், என்ன தொழில் செய்கிறார், எந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்பது உள்ளிட்ட முழுவிவரமும் உங்களிடம் இருக்க வேண்டும்.
“திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள்”
அடுத்ததாக, அரசின் திட்டங்களையும் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்களிடம் இன்று வழங்கப்பட்டிருக்கும், “திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள்” என்ற புத்தகத்தை நீங்கள் படித்துப் பார்த்தாலே, அரசின் திட்டங்கள் பற்றி உங்களுக்குத் மிகத் தெளிவாக தெரிந்துவிடும்.
“மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து”
கோடிக்கணக்கான பெண்களுக்குப் பயனளிக்கும் திட்டம்தான், “மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து” வசதி. ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் கலைஞர் பெயரிலான உரிமைத் தொகையைப் பெற இருக்கிறார்கள். தற்போது 31 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பெற்று வரும் 1000 ரூபாய் முதியோர் உதவித் தொகையை 1200 ரூபாயாக நாம் உயர்த்தி இருக்கிறோம். 18 லட்சம் பள்ளி மாணவ – மாணவியர் காலை உணவுத் திட்டத்தால் பயன்பெறப் போகிறார்கள். 13 லட்சம் பெண்களின் நகைக்கடனை ரத்து செய்த அரசு நம்முடைய அரசு. டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை, மக்களும் மண்ணும் செழிக்கின்ற மாதிரியான ஏராளமான திட்டங்களை உழவர்களுக்கு நாம் செயல்படுத்தி வருகிறோம்.
இப்படி கோடிக்கணக்கானோர் – இலட்சக்கணக்கானோர் பயன்பெறும் திட்டங்களை நிறைவேற்றி, இன்றைக்கு வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் அரசுதான் நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு. இந்தத் திட்டங்களை எல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்லும் பரப்புரையாளர்களாக நீங்கள் செயல்பட வேண்டும்.
நமக்கு எதிராக அவதூறுகளையும், பொய்ச்செய்திகளை யும் பரப்பிட ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. பொய்களுக்கு ஆயுள் மிகக் குறைவு. அவர்கள் பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கட்டும். நாம் திரும்பத் திரும்ப நம் அரசின் திட்டங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கலாம். நம்முடைய அரசு கொண்டு வந்திருக்கும் நலத்திட்டங்கள் குறித்து வாக்காளர்களிடம் விளக்கிச் சொல்லுங்கள். இதன் மூலமாக எதிரிகள் பரப்பும் அவதூறுகள் எல்லாம் சுக்குநூறாக நொறுங்கிப் போகும்.
சமூக ஊடகங்கள்
இன்றைக்கு பரப்புரை பாணியே மாறிவிட்டது. இன்றைக்கு சமூக ஊடகங்கள்தான் சிறப்பான பரப்புரைக் களங்களாக மாறி இருக்கின்றன. வீட்டில் இருந்துகொண்டே, பக்கத்து அறையில் இருந்துகொண்டே வாட்ஸ்அப்-இல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். காலம் அவ்வாறு மாறி இருக்கிறது. அந்தக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் நாம் அனுப்பும் செய்தி வீட்டின் பக்கத்தில் மட்டுமல்ல, ஒரே நிமிடத்தில் உலகம் முழுக்க பரவும் வசதியும் வந்துவிட்டது. இதனை நீங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே நீங்கள் ஒவ்வொருவரும் சமூக ஊடகங்களில் கணக்குத் தொடங்குவதையும் கட்டாயம் செய்ய வேண்டும். அந்தக் கணக்குகளில் இருந்து அவதூறு களுக்குப் நீங்கள் பதில் சொல்லுங்கள்.
திசை திருப்பலுக்கு பலியாகி விடக் கூடாது!
நம் கொள்கைளைப் பேசுங்கள். நலத்திட்டங்களைப் பதிவிடுங்கள். தேவையில்லாத வம்பு வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். எதையாவது சொல்லி நம்மைத் திசை திருப்பி விடுவார்கள். இந்தத் திசை திருப்பலுக்கு எல்லாம் பலியாகி விடக் கூடாது.
ஒரு பக்கத்தில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஆளுநர் நமக்கு ஒரு பெரிய பிரச்சாரத்தைச் செய்து கொண் டிருக்கிறார். எனவே, அவரை மாற்ற வேண்டும் என்றுகூட நான் சொல்ல விரும்பவில்லை. அவரே இருக்கட்டும். தேர்தல் வரைக்கும் அவர் இருக்கட்டும். இன்னமும் நமக்கு வாக்குகள் அதிகரிக்கும். அதேபோல், தேவையற்ற பிரச்சினைகளைக் கிளப்பி கட்சிக்கு கெட்ட பெயரை வாங்கிக் கொடுக்கவும் கூடாது.
சமூக ஊடகங்களை நல்ல நோக்கத்தோடு – நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாம் இன்னமும் சொல்கிறேன், நம்முடைய தொண்டர் பலத்திற்கும் கட்டமைப்புக்கும் நிகராக தமிழ்நாட்டில் மட்டு மல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, இந்த உலகத்தில் வேறு ஒரு கட்சி இருக்கிறதா? எனவே அந்த பலத்தை நாம் சமூக ஊட கங்களிலும், களத்திலும் முழுமையாகக் காட்ட வேண்டும்.
இந்தியா முழுமைக்கும் நமது அணி வெற்றி பெற வேண்டும்
ஏனென்றால் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது மிக மிக மிக முக்கியமான தேர்தல். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியம். புதுவை உள்ளிட்ட தமிழ் நாட்டின் 40 தொகுதிகளையும் நமது அணி கைப்பற்ற வேண் டும் என்பது மட்டுமல்ல – இந்தியா முழுமைக்கும் நமது அணி வெற்றி பெற வேண்டும்.
ஏனென்றால், இந்தியாவின் கட்டமைப்பை பா.ஜ.க. சிதைத்துவிட்டது. இதற்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது.
பா.ஜ.க. ஆட்சி தொடருமானால் இந்தியாவில் மக்களாட் சியை – சமூகநீதியை – இந்திய அரசமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.
மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்குமானால் – இந்தியாவில், ஜனநாயகமே இருக்காது. ஏன், தமிழ்நாடு என்ற மாநிலமோ – அதற்கான சட்டமன்றமோ – முதலமைச்சரோ – அமைச் சர்களோ – சட்டமன்ற உறுப்பினர்களோ இருக்க மாட்டார்கள். அத்தனையையும் காலி செய்து விடுவார்கள். உள்ளாட்சி அமைப்புகள் இருக்காது. இதுதான் அனைத்து மாநிலங் களுக்கும் நடக்கும்.
புதிய நாடாளுமன்றம் கட்டியிருக்கிறார்களே எதற்கு? 888 இருக்கைகளைப் போட்டிருக்கிறார்கள். அது எதற்காக? நாடாளுமன்றத்தில் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப இருக்கைகளைப் போட நினைக்கிறார்கள்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்ற பேரால் மாநிலங் களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கப் பார்க்கிறார்கள். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாகப் பின்பற்றிய தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படும். வடமாநிலங்களில் இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.
நாம் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுப் போனாலும் – வட மாநில எம்.பி.க்களை வைத்து ஆட்சியைப் பிடித்துக் கொள் ளலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். தமிழ்நாட்டின் குரலை இதன் மூலமாகத் தடுக்கப் பார்க்கிறார்கள். எனவேதான் இந்தத் தேர்தலை மிக மிக முக்கியமான தேர்தலாக நான் சொல்கிறேன்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில்
பா.ஜ.க. வீழ்த்தப்பட வேண்டும்!
மாநிலங்களுக்கு – பல்வேறு தேசிய இனத்தைச் சேர்ந்தவர் களுக்கு – பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களுக்கு – பல் வேறு பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான சிந்தனை கொண்ட ஒரு கட்சிதான், பாரதீய ஜனதா கட்சி! ஒற்றைக் கட்சியே இருக்க வேண்டும் என்று நினைக்கும் கட்சி அது.
ஒற்றைக் கட்சி ஆட்சி அமைந்தால் – ஒரே ஒரு ஆள் கையில் அதிகாரம் போய்விடும். இன்னும் சொல்கிறேன், அவ்வாறு அமைந்தால் அது பா.ஜ.க.வினருக்கே ஆபத்தான கொள்கை! அதனால்தான் பா.ஜ.க. இந்தத் தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டும் என்று சொல்கிறோம்.
இந்தியாவைக் காப்பாற்றப் போவது
INDIA கூட்டணிதான்!
இந்த முக்கியமான இலக்கை முன்னெடுக்கும் கட்சிகள் அனைவரும் இன்றைக்கு ஒன்று சேர்ந்திருக்கிறோம். 26 கட்சிகள் அடங்கிய இந்தக் கூட்டணிக்கு – Indian National Developmental Inclusive Alliance – என்று பெயர் சூட்டி இருக்கிறோம். INDIA- என்பது இந்தக் கூட்டணிக்குப் பெயர். எனவே இந்தியாவைக் காப்பாற்றப் போவது இந்த INDIA கூட்டணிதான். இதனை பிரதமராக இருக்கும் மோடி அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
பா.ஜ.க.வை எதிர்க்க ஒரு வலுவான அணியை அமைத்துவிட்டார்களே என்று நினைத்து இப்போது ஏதேதோ பேசிக் கொண்டு இருக்கிறார். இந்த நோக்கத்தைப் பற்றி இப்போது அல்ல, நான் ஓராண்டு காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதனால் என் மீதும் அவர்களுக்குக் கோபம். அதனால்தான் மத்தியப் பிரதேசத்துக்குப் போனாலும் தி.மு.க.வைத் திட்டுகிறார். அந்தமான் விமான நிலையத்தைத் திறந்து வைக்கப் போனாலும் தி.மு.க.வைத் திட்டுகிறார்.
என்ன சொல்கிறார், வாரிசுகளுக்கான கட்சியாம். இதைக் கேட்டுக் கேட்டு புளிச்சுப் போச்சு. வேறு ஏதாவது யோசித்து கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.
ஆரியத்தை வீழ்த்த வந்த
திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள்!
நான் இன்னும் சொல்கிறேன், இது வாரிசுகளுக்கான கட்சிதான். ஆமாம், வாரிசுகளுக்கான கட்சிதான். ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள்! தந்தை பெரியாரின் வாரிசுகள்! பேரறிஞர் அண்ணாவின் வாரிசுகள்! தமிழினத் தலைவர் கலைஞரின் வாரிசுகள் நாங்கள்! இதனைத் தைரியமாக – பெருமையோடு என்னால் சொல்ல முடியும்.
பா.ஜ.க. யாருடைய வாரிசு? நான் கேட்கிறேன். கோட் சேவின் வாரிசுகள்தான் நீங்கள் என்று உங்களால் தைரியமாகச் சொல்ல முடியுமா? சொல்வதற்கான தைரியம் உங்களுக்கு உண்டா?
குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதை இந்த நாடு மறக்கவில்லை. அன்று குஜராத்தில் நடந்ததை இன்று மணிப்பூர் நினைவூட்டிக் கொண்டு இருக்கிறது.
மே மாதம் தொடங்கிய வன்முறையை இன்றுவரை அந்த மாநிலத்தை ஆளும் மணிப்பூர் பா.ஜ.க. அரசாலும் தடுக்க முடியவில்லை. ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசாலும் தடுக்க முடியவில்லை. வன்முறையாளர்களும், மாநிலத்தை ஆளும் மணிப்பூர் காவல்துறையும் கைகோத்துக் கொண்டு மக்களைத் தாக்குகிறார்கள் என்று நான் சொல்லவில்லை, பா.ஜ.க.வைச் சேர்ந்த மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பாவோலியன்லால் ஹொக்கிப் சொல்லி இருக்கிறார். மீண்டும் சொல்கிறேன்… இப்படிச் சொல்லி இருப்பது ஸ்டாலின் அல்ல, பா.ஜ.க.வுக்கு எதிரணியில் இருப்பவர்கள் அல்ல. பா.ஜ.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சொல்லி இருக்கிறார்.
ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மனதில் வேற்றுமையை விதைத்து – மனக்கசப்பை உருவாக்கி – வெறுப்பு அரசியல் மூலமாக அரசியல் ஆதாயம் தேட நினைத்ததன் விளைவு தான் இன்று மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
கொத்தடிமைக் கூட்டம்
இங்கே ஒரு கொத்தடிமைக் கூட்டம், யார் என்று தெரியும் – அ.தி.மு.க. என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் யாராவது மணிப்பூரைப் பற்றிப் பேசினார்களா? வாய்க்கு வந்ததைப் பேசுவாரே பழனிசாமி. அவர் பேசினாரா? பேசவில்லையே. ‘பா.ஜ.க.வுக்கு நான் அடிமையில்லை’ என்று சொல்லும் பழனிசாமி, மணிப்பூர் கொடூரத்துக்குக் காரணமான அந்த மாநில முதலமைச்சரையோ ஒன்றிய பா.ஜ.க. அமைச்சரையோ கண்டித்தாரா?
பழனிசாமியை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழல் ஒழிப்பு பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். நான் அப்போதே கேட்டேன், “பக்கத்தில் யாரை வைத்துக் கொண்டு நீங்கள் பேசுகிறீர்கள்?” என்று கேட்டேன். சி.பி.அய். விசாரணைக்கு உயர்நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு – அதற்குத் தடை கேட்டு உச்சநீதிமன்றம் போனவர் பழனிசாமி. அவருடன் அமைச்சராக இருந்தவர்கள் மீதும் ஊழல் கறை படிந் திருக்கிறது. இந்த ஊழல் பேர்வழிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழலைப் பற்றி பிரதமர் பேசுகிறார். பேசலாமா?
நான் இன்னும் கேட்கிறேன். கர்நாடக மாநிலத்தில் ஊழல் பா.ஜ.க. அரசை, ஊழலுக்காகத்தானே அந்த மாநில மக்கள் விரட்டி அடித்தார்கள், தோற்கடித்தார்கள். அது மறந்து போய்விட்டதா?
அ.தி.மு.க.வினர் மீதான ஊழல் வழக்குகளைக் காட்டி அவர்களை அடிபணிய வைத்துள்ளது பா.ஜ.க. கடந்த காலத்தில் தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் பா.ஜ.க.வுக்கு பயந்து அடமானம் வைத்தது அ.தி.மு.க.
எனவே உரிமைகளைக் கைவிட்டவர்களும் – காவு வாங்கியவர்களும் இன்றைக்குக் கைகோத்து வருகிறார்கள். இவர்களை இந்தத் தேர்தலில் முழுமையாக நாம் வீழ்த்தியாக வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களும் மணிப்பூர் ஆகி விடாமல் தடுத்தாக வேண்டும்.
ஜனநாயகக் கட்டமைப்பைக்
காப்பாற்றியாக வேண்டும்
தமிழை – தமிழினத்தை – தமிழ்நாட்டு மக்களைக் காக்க வேண்டுமானால், இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பைக் காப்பாற்றியாக வேண்டும். நமக்கு முன்னால் உள்ள கடமை என்பது மிக மிக மிகப் பெரியது. ஜனநாயகப் போர்க்களத்தில் முன்னணிப் படை வீரர்கள் நீங்கள். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் போர்ப்படைத் தளபதிகள் நீங்கள். உங்களை நம்பி நாடாளுமன்றத் தேர்தல் களத்தை நான் ஒப்படைத்திருக்கிறேன். எனது கடமையின் தூதுவர்களாக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இருக்கப் போகிறவர்கள் நீங்கள், பணியாற்றப் போகிறவர்கள் நீங்கள். உங்களில் ஒருவனான நான் உங்களை நம்பி இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறேன்.
களம் காணுங்கள்! கழகத்தின் வெற்றிக்காகக் கள மாடுங்கள்!
நாற்பதும் நமதே! நாடும் நமதே!
இந்தியா வெல்லும்! அதை 2024 சொல்லும்!
நன்றி! வணக்கம்!
-இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை யாற்றினார்.