சென்னை, நவ.11- தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்துவரும் நிலையில் 2 நாட்களில் அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என்றும் அதன் காரணமாக தமிழகத்தில் 15ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக வங்கக் கடல் பகுதியில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்து வருவதால், மழை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கடலோர தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குறிப்பாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் வாய்ப்புள்ளது. அது அதற்கடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் தமிழ்நாடு இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.