ஆரோக்கியமான வாழ்விற்கு மிக அவசியமானது தூக்கம். நம் உடலில் தூக்கத்தை ஏற்படுத்துவது மெலடோனின் எனும் ஒரு ஹார்மோன். இது பீனியல் சுரப்பியில் இருந்து உற்பத்தி ஆகிறது.
இதுவே இரவில் துாக்கத்தையும் பகலிலே விழிப்பையும் தருகிறது. இந்த ஹார்மோன் மூளைக்குள்ளே சென்று மூளையை ஓய்வுகொள்ளச் செய்கிறது. நம் உடலுக்குள் இருக்கும் உயிரியல் கடிகாரம் சரியாக இயங்குவதற்கு, இது ஒரு முக்கிய காரணி.
பலர் துாக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். இதைச் சரி செய்வதற்காக மெலடோனின் ஹார்மோனை மாத்திரையாக எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், இது எந்த அளவு எடுத்துக் கொள்ள வேண்டும், எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் துாங்கச் செல்வதற்கு, 30 நிமிடம் முன்பாக 2 மில்லி கிராம் எடுத்துக் கொண்டால் போதும் என்று சொல்லப்பட்டு வந்தது.
1,689 பேர் பங்கேற்ற ஆய்வில் இவர்களுக்குப் பல்வேறு அளவுகளில், பல்வேறு நேரங்களில் மருந்து கொடுக்கப்பட்டது.
இறுதியாகத் துாங்கச் செல்வதற்கு மூன்று மணி நேரம் முன்பாக 4 மில்லிகிராம் அளவு இந்த ஹார்மோனை எடுத்துக்கொள்வது நல்ல துாக்கத்தை வரவழைக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.