பல் சொத்தை ஏற்படுவது எப்படி?
வாய்க்கு ருசியாக இருக்கிறதே என்று மனம் விரும்பியதைச் சாப்பிடுகிறோம். இதன் விளைவாக பல் சொத்தை வந்துவிடும் ஆபத்து உள்ளது. பல் சொத்தை என்பது ஒரு விநோதமான நோய். உலகம் உருண்டை, பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் எப்படி நாம் உணருவதில்லையோ, அப்படித்தான் பல் சொத்தையையும் நாம் உணருவதில்லை. எனாமல் (Enamel) என்ற லேயரில் இருந்து தொடங்கும் பல் சொத்தை, பற்களின் ஆழத்திற்குப் பரவ, சுமார் 6 மாதங்களில் இருந்து 5 ஆண்டுகள்கூட ஆகலாம், அது நம் உணவுப் பழக்கத்தைப் பொறுத்தது.
எனாமல் என்பது நரம்பு முடிச்சுகளற்ற, உயிரற்ற திசு. பல்லின் ஓரிடத்தில் சொத்தை இருக்குமானால் அதற்கான எந்த அறிகுறியும் பெரும்பாலும் இருக்காது. சில நேரங்களில் உணவுத்துகள் மாட்டிக் கொள்ளும், அவ்வளவே. அடுத்த லேயரான ‘டென்ட்டின்’-க்கு (Dentin) போகும்போது பல் கூச்சம், சிறு வலி தொடங்கும். கூச்சம் ஏற்படும். பிறகு அந்த உணர்வு நின்றுவிடும். இப்போதாவது நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும். சொல்லப் போனால் இதுவே தாமதம்தான்.
பல் வலி உண்டாவது இப்படித்தான்
இதற்கடுத்த லேயரான pulp-க்கு சொத்தை பரவும்போது தான் வலி என்ற ஒன்றை நாம் முதலில் அனுபவிக்கிறோம். இந்த வலியானது பல் இடுக்கில் உணவு மாட்டும்போது ஏற்பட்டு பின்னர் மறைந்துவிடும். சில நேரங்களில் இனிப்பாகவோ, ஜில்லென்றோ, சூடாகவோ உணவுண்டு முடித்த பிறகு சில நிமிடங்களுக்கு வலி நீடிக்கலாம்.
இந்த நிலையையும் தாண்டி பற்களின் வேரினைச் சுற்றி சொத்தை பரவத் தொடங்கும்போது தான் வலி ஏற்படுகிறது. வேரைச்சுற்றி சீழ் சேர்ந்துவிடும். இரவில் படுத்துறங்கும் போது வலி அதிகமாகும். பெரும்பாலானவர்கள் வலியைத்தான் தொடக்கநிலை என்றே கருதுகின்றனர்.
பல் சொத்தை என்பது பல்லின் மேல் பகுதியில் இருந்தும் தொடங்கும். சிலநேரங்களில் இரண்டு பற்களின் இடுக்கில் இருந்தும் தொடங்கும்.
பல் வலி ஏற்பட மற்ற காரணிகள்
பல் சொத்தையைத் தவிர பற்களின் அழற்சியினாலும், அதாவது பற்களின் தேய்மானத்தினாலும் பல் வலி ஏற்படலாம். பற்களை நறநறவென்று தூக்கத்தில் கடித்தல், தவறான பல் தேய்க்கும் முறை ( horizontal brushing), சுண்ணாம்பு, செங்கல், ஆலங்குச்சி, வேலங்குச்சி, கரி, ஏன் சிலவகை பற்பொடிகூட பற்களின் எனாமல் போக காரணமாக இருக்கலாம். பல் சொத்தையினால் ஏற்படும் அனைத்துவிதமான கூச்சமும் வலியும், பல் தேய்மானத்திலும் ஏற்படலாம்.
சிகிச்சை முறைகள்:
பல் சொத்தையை, அது எனாமலில் இருக்கும்போதே கவனித்து விட்டால், மிக எளிதாக Resins மற்றும் Pit and fissure sealants மூலம் சொத்தையை எடுத்துவிட்டு அடைத்து விடலாம். இதுவே டென்ட்டினில் சொத்தை பரவி விட்டால், அது மேலோட்டமாக இருந்தால், வெள்ளி மற்றும் பற்கள் நிறத்திலேயே உள்ள சில பொருள்களை வைத்து பல்லை அடைத்து விடலாம்.
மாத்திரைகள் தீர்வல்ல…
பல் சொத்தையைப் பொறுத்தவரை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது, இது மாத்திரைகளால் சரிசெய்யக்கூடிய நோய் அல்ல. பாதிப்புக்கு ஏற்ப முழுக்க பற்களில்தான் சிகிச்சை செய்ய வேண்டும். மாத்திரை என்பது தற்காலிகமான வலி நிவாரணியே.
அன்றாடம் ‘டென்ட்டல் ஃப்ளாஸ்’ (Dental floss) உபயோகிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது பற்களின் இடுக்கில் இருக்கும் உணவுப் பொருள்களை அகற்ற உதவும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை கட்டாயமாக பல் மருத்துவரைச் சந்திக்கவும்.