சென்னை, நவ. 11- அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கு, ஜேஇஇ உள்ளிட்ட உயா் கல்வி படிப்புகளுக்கான போட்டித் தோ்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவா்களுக்கும் உயா்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக நிகழாண்டில் பல்வேறு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்த மாதம் முதல் உயா்கல்வி படிப்புகளுக்கான போட்டித் தோ்வுகள் குறித்த தகவல்களை மாணவா்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜேஇஇ முதன்மைத் தோ்வு, தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனத் தோ்வு (என்அய்டி – நேஷனல் இன்ஸ்ட்யூட் ஆஃப் டிசைன் டெஸ்ட்) ஆகியவற்றுக்கான விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
அதில் ஜேஇஇ முதன்மைத் தோ்வுக்கு நவ. 22-ஆம் தேதி வரையும், என்அய்டி தோ்வுக்கு டிச. 2-ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த போட்டித் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் மற்றும் தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அந்த போட்டித் தோ்வுகள் தொடா்பான தகவல்களை பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு தெரியப்படுத்தி தகுதியானவா்கள் விண்ணப்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியா் களும் மேற்கொள்ள வேண்டும்.
இதுதொடா்பான அறிவுறுத்தல் களை பள்ளி தலைமையாசிரியா் களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது