விழுப்புரம், நவ.11- விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு பகுதியில் பேய் நடமாடுகிறது என காட்சிப் பதிவு மற்றும் ஒளிப்படம் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்து உள்ளது.
உண்மைகளை விட சுவாரஸ்ய மான பொய்கள் வேகமாகப் பரவுவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், அப்பாவி மக்களை பதற வைக்கும் ஒரு காட்சிப் பதிவு சமீப நாட்களாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக தளங்களில் வேக மாகப் பரவி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு பகுடியில் பேய் நடமாடுவதாக ஒரு காணொளி மற்றும் ஒளிப்படங்கள் சமூக வலை தளங்களில் பரவி வருகின்றன.
வதந்தி: விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கூட்டேரிப் பட்டில் இரவு நேரத்தில் பேய் நடமாடுவது போன்ற காணொளி மற்றும் ஒளிப்படம் சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.
ஒரு பெண் அழுவது போன்ற சத்தத்தோடு இணைந்த ஒரு காட்சிப் பதிவு பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
உண்மை என்ன?: இந்த காட்சிப் பதிவு தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்து உள்ளது.
இது முற்றிலும் வதந்தியே. பேய் நடமாடுவதாகப் பரப்பப்படும் ஒளிப்படம் மற்றும் காணொளி கடந்த ஜூலை மாதம் உத்தரப் பிரதேச மாநிலம், அமேதியில் நடந்ததாகக் கூறி பரவியது.
இது குறித்து விசாரணை நடத்திய உத்திரப்பிரதேச காவல்துறை, பேய் நடமாட்டம் இருப்பதாகக் கூறப் படும் சம்பவம் பொய்யானது என்று விளக்கமளித்தனர். தற்போது இது விழுப்புரத்தில் நடப்பதாகக் கூறி வதந்தி பரப்பியுள்ளனர். வதந்தியை நம்பாதீர்!” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.