சென்னை, நவ. 11- நிகழாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சோ்க்கப்பட்டுள்ள மாணவா்கள் குறித்த விவரங்களை இணையவழியில் பதிவேற்றுவதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நீட்டித்துள்ளது.
அதேபோல, மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்கும், ஏற்கெனவே இடங்களை அதிகரிப்பதற்கும் விண்ணப் பிப்பதற்கான அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக என்எம்சி சார்பில் வெளியிடப் பட்ட அறிவிப்பு:
எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கையானது தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படுவது அவசியம். அதன்படி, நிகழாண்டில் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவா்களின் விவரங்கள், மதிப்பெண் விவரம், இடஒதுக்கீடு விவரம், கட்டண விவரம் உள்ளிட்டவற்றை என்எம்சி இணையப் பக்கத்தில் பதிவேற்ற கடந்த 8-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
அது தற்போது 23- ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. அதேபோல, எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன.
அதற்கான அவகாசம் ஏற்கெனவே ஒருமுறை நீட்டிக்கப்பட்டு, அதுவும் கடந்த 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அந்த அவகாசத்தை நவ. 22-ஆம் தேதி வரை நீட்டிக்க தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை
ரூ.21 கோடியில் மேம்படுத்தத் திட்டம்!
சென்னை, நவ. 11- பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21.67 கோடி மதிப்பில் மேம்படுத்த தமிழ்நாடு வனத் துறை முடிவெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சதுப்புநிலங்களை மேம்படுத்த ‘தமிழ்நாடு வெட்லான்ட் மிஷன்’ எனும் திட்டம் மூலம் பல்வேறு நடைவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த வகையில், சென்னை உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், 50 வகை மீன் இனங்கள், பல்வேறு வகை தாவரங்கள் உள்ளன. இதை ரூ.21 கோடியே 67 லட்சத்து 67,600 மதிப்பில் மேம்படுத்த வனத் துறை திட்டமிட்டுள்ளது. நீா்நிலையில் உள்ள கழிவுகளை அகற்றுவது, அதற்கு நீா் வரும் வழிகளை தூய்மைப்படுத்துவது, களைச்செடிகளை அகற்றுவது, கரைகளை பலப்படுத்துவது, நடை பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும்.
இந்த பணிகளுக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தப் புள்ளிகளை டிச.12-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.அவை பரிசீலனை செய்து, இறுதி செய்யப்பட்ட பின்னா் ஒப்பந்ததாரா்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இப்பணிகளை 16 மாதங்களில் முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.