மகளிர் விடியல்…
மகளிர் விடியல் பயண திட்டத்தின் கீழ் 570.86 கோடி முறை பேருந்துகளில் பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளதை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் நாள்தோறும் சராசரியாக 57 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் வாயிலாக பயணித்து வருவதாகவும், இதனால் மாதந்தோறும் ரூ.541 முதல் ரூ.1,283 வரை சேமித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாம்பு கடி
அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளும் அரசுக்கு தெரிவிக்கும் வகையில் பாம்பு கடியை அறிவிக்கை செய்யக்கூடிய நோயாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சேர்க்கை…
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் 2024-2025ஆம் கல்வியாண்டில் 16 இளநிலைப் பட்டப் படிப்புகள் 15 முதுநிலை பட்டப்படிப்புகள், 44 தொழிற் கல்வி பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் என மொத்தம் 75 படிப்புகள் நடத்தப்படுகின்றன. www.tnou.ac.in என்ற இணையதளம் வாயிலாக சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் நவம்பர் 15ஆம் தேதியாகும்.
நியமனம்
தமிழ்நாடு தேர்தல் அதிகாரியாக உள்ள சத்தியபிரதா சாகு மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக தமிழ்நாடு பொதுத் துறைச் செயலாளராக உள்ள அர்ச்சனா பட்வாயக் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு
தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசினர் சிறப்புப் பயிலகங்கள் ஆகிய வற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வினை வெளிப்படைத் தன்மையுடன் இணைய வழியின் வாயிலாக மேற்கொள் ளலாம் என தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடையாதாம் – அமித் ஷா கூறுகிறார்
பாஜக இருக்கும் வரை, மத அடிப்படையில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதாக ராகுல் காந்தி கூறுகிறார். அப்படி கொடுத்தால் ஓபிசி, எஸ்சி, எஸ்டி. மக்களுக்கான இடஒதுக்கீடு தான் பாதிக்கப்படும். இது அரசமைப்புக்கு எதிரானது. காங்., “anti-OBC” ஆகவுள்ளது என்றார்.
இணையதள விளையாட்டுகளுக்கு
அடிமையாகும் சிறார்கள்
அலைபேசிக்கு சிறுவர்கள் அடிமையாகி வருவதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பெற்றோர்களிடம் நடத்திய ஆய்வில் சமூக வலைதளங்கள், Online games, ஓ.டி.டி. தளங்களுக்கு சிறார்கள் அடிமையாகிவிட்டதாக 66% பேர் தெரிவித்துள்ளனர். பெற்றோர்களும் பிள்ளைகள் அவர்களை தொல்லை செய்யாமல் இருக்க அலைபேசியை அவர்களிடம் கொடுக்கிறார்கள். அதை மாற்றி வெளியில் விளையாட அனுப்பினால் குழந்தைகள் வாழ்க்கை பாடத்தை கற்க முடியும்.
வெளிநாட்டு செலாவணி:
ஒரே வாரத்தில் ரூ.21,939 கோடி சரிவு
இந்தியாவின் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு தொடர்ந்து 5ஆவது வாரமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. RBI வெளியிட்ட அறிக்கையில், நவ. 1 வரையிலான ஒருவார காலத்தில், இந்தியாவின் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு ரூ.21,939 கோடி வீழ்ச்சி அடைந்து ரூ.57.54 லட்சம் கோடியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய வாரம் இந்தியாவின் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு ரூ.28,690 கோடி வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.
மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை.. இளைஞர்களுக்கு நற்செய்தி
பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 21-24 வயதுக்குட்பட்ட 1 கோடி இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் 12 மாதத்திற்கு PM இன்டர்ன்ஷிப் வாய்ப்பு அளிக்கப்படும். இதன் கீழ் மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. கூடுதல் ( www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தை காணும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து
மீண்டும் விமான சேவை!
புதுச்சேரியிலிருந்து டிச.20 முதல் மீண்டும் விமானச் சேவை துவங்குகிறது. காலை 11.10 மணிக்குப் பெங்களூருவிலிருந்து புறப்படும் இண்டிகோ விமானம் 12.25-க்கு புதுவை வந்தடையும். பின்னர், மதியம்
12.45-க்கு புறப்பட்டு 2.30-க்கு அய்தராபாத் சென்றடையும். மதியம் 3.05-க்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 4.30-க்கு புதுவைக்கும், மாலை 5.10-க்கு புதுவையிலிருந்து புறப்பட்டு மாலை
6.35-க்கு பெங்களூருவுக்கும் சென்றடையும்.