திருவள்ளூர், நவ. 10- ”தமிழ்நாட் டில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு தேர்வான, 3,000 ஆசிரியர்களுக்கு விரைவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி ஆணை வழங்குவார்,” என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் ஆய்வு செய்த பின், அமைச்சர் மகேஷ் கூறியதாவது:
பள்ளிக்கல்வி துறை சார்பில், 100 கோடி ரூபாயில் மாணவர்களுக்கு, பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் பிறமொழியில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர் என்று கணக்கெடுக்கிறோம்.
கருநாடக மாநில எல்லையில் கன்னடம், கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் மலையாளம், திருவள்ளூர் மாவட்ட எல்லையில் தெலுங்கு மொழிகளில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் உள்ளனரா, அடிப்படை வசதிகள் உள்ளதா என்றும் விபரம் சேகரித்து வருகிறோம்.
உயர்நிலை, மேல்நிலை பள்ளி களில், காலியாக உள்ள 3,192 ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளோம். இம்மாதத்திற்குள், 3,000 ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணை களை வழங்குவார். அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் இல்லை. பெருமையின் அடையாளம். இவ்வாறு கூறினார்.