கிருஷ்ணகிரி, நவ.10 கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரூ.8 ஆயிரம் கோடியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் பகுதி 2 விரைவில் தொடங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி கூறினார்.
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஒன்றியங்களில், ரூ.2.16 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள், ரூ.13 லட்சம் மதிப்பில் முடிவுற்ற பணிகள் தொடக்க விழா நேற்று (9.11.2024) நடைபெற்றது. ஆட்சியர் கே.எம்.சரயு, சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் முன்னிலை வகித்தனர். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவைத்தும், முடிவுற்ற பணிகளைத் திறந்துவைத்தும், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்வழங்கியும் அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பில் 20 ஆயிரம் சாலைகளை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரூ.8 ஆயிரம் கோடியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாம் பகுதியை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 3,827 வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், ரூ.2 ஆயிரம் கோடியில் பழுதடைந்த 2 லட்சம் தொகுப்பு வீடுகளை பழுது பார்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. 13,455 மாணவ,மாணவிகளுக்கு ரூ.6.48 கோடியில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.