சென்னை.நவ.10 மத மறுப்பு – – சுய மரியாதைத் திருமணத்தை கழகத் துணைத்தலைவர் தலைமையேற்று நடத்திவைத்தார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மும்மூர்த்தி-சுகுணா இணையரின் மகள் மு.வளர்மதி, பெரம்பூர் கவுதமபுரம் பகுதியைச் சேர்ந்த அமிர்பாஷா – நூர்ஜஹான் இணையரின் மகன் அஜிசூர் ரஹ்மான் ஆகியோருக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் நேற்று (9.11.2024) காலை 11 மணியளவில் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது.
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மணமக்களின் கல்வி மற்றும் மும்மூர்த்தியின் கொள்கை உறுதி, எளிமை ஆகியவற்றை சிறப்பித்துப் பேசியதோடு அனை வரையும் வர வேற்றார்.
அதைத் தொடர்ந்து கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உறுதிமொழி கூறி சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்தார். முன்னதாக சுய மரியாதைத் திருமணத்தின் சிறப்புகளை கோடிட்டுக் காட்டினார். மணமகனின் பெற்றோர் சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்ள முன்வந்ததை சிறப்பித்து, வெறும் சுயமரியாதைத் திருமணம் மட்டுமல்ல, மத மறுப்புத் திருமணமாகவும் இருப்பதைப் பாராட்டினார். இணையர்கள் இருவரும் சிறப்பாக வாழ்ந்து சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர்கள், சிறப்பாக வாழ்கி றார்கள் என்பதை சமூகத்திற்கு உணர்த்தவேண்டும் என்றும், பெற்றோரை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். மணநிகழ்வு சார்பில் மும்மூர்த்தி பெரியார் உலகம் நிதியாக 5,000 ரூபாயை துணைத் தலைவர் அவர்களிடம் வழங்கினார்.
நிகழ்வில் துணைப் பொதுச்செயலா ளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதிபாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் மற்றும் இரு இல்லத்தினர், உறவினர்கள், மணமக்களின் நண்பர்கள் கலந்துகொண்டனர்.