கடந்த சில நாள்களில், வரவேற்றுப் பாராட்டத்தக்க இரண்டு தேர்வுகள் நடைபெற்றுள்ளன.
ஒன்று, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், சிறந்த முற்போக்குச் சிந்தனையாளரும், எழுத்தாளருமான முனைவர் திரு. இராசேந்திரன் அவர்கள், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நல்ல ஆளுமைத் திறனும், ஆழமான ஆய்வுத் திறனும்கொண்ட சீரிய பண்பாளர். அவரது பொறுப்புக்காலம், நல்ல பொற்காலம் என்று அனைவரும் பாராட்டும்படி, அவரது பணி சிறக்க நமது உளங்கனிந்த வாழ்த்துகள்!
அதுபோலவே, முத்தமிழறிஞர் கலைஞரால் உருவாக்கப்பட்ட பல விருதுகளில் செம்மொழி விருதும் முக்கியமானது.
தனது நன்கொடையின் வட்டிமூலம் தக்காரை அடையாளம் கண்டு, ஊக்குவித்து, அவர்களை உயர்த்தும் உன்னத நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட செம்மொழி விருது தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களால், பழுத்த இலக்கியவாதியும், சென்னை பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் தமது பதவிக் காலத்தில் முத்திரைப் பதித்து, நுண்மா நுழைபுலத்தோடு தமிழ்ப் பேரறிவுடனும், தன்மானம், இனமானத்தில் சமரசம் செய்துகொள்ளாத, இலக்கியச் செம்மல் பேராசிரியர் ‘மா.செ.’ என்று அழைக்கப்படும் மானமிகு முனைவர் மா.செல்வராசன் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!
அறிவிக்கப்பட்டுள்ள விருது சரியான தேர்வு ஆகும்!
அவருக்கு வாழ்த்தும், தேர்வு செய்த அரசுக்கும், முதலமைச்சருக்கும் நமதுபாராட்டு!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
10.11.2024