திண்டுக்கல்லின் கழக ‘மூவேந்தர்கள்’ என்று அழைக்கப்படும் (வழக்குரைஞர் சுப்பிரமணி யம், வழக்குரைஞர் மறைந்த சுப.செகந்நாதன் மற்றும் நாராயணன்) தோழர்களுள் ஒருவரான மானமிகு இரா.நாராயணன்
(வயது 80) அவர்கள் இன்று (9.11.2024) மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
இளைய பருவத்திலிருந்து கருஞ்சட்டைத் தோழராக, கழக வீரராக வலம் வந்தவர். தன் மகனை லண்டனுக்கு அனுப்பி சட்ட உயர் கல்வியைப் படிக்க வைத்தவர். அவருக்கு 4 மகள்களும் உண்டு.
திண்டுக்கல்லில் நடைபெற்ற முத்திரைப் பதித்த மாநாடுகளின் வெற்றிக்குப் பெரும் பங்குஆற்றியவர்.
அவரது இழப்பு அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, கழகத்திற்கும் பேரிழப்பாகும்.
அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதுடன், அவரின் அளப்பரிய இயக்கத் தொண்டினை நினைவு கூர்ந்து வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை
9.11.2024
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
குறிப்பு: மறைவு தகவல் அறிந்ததும் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் மானமிகு இரா. நாராயணன் அவர்களின் குடும்பத்தாரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.