சென்னை, நவ.9- தமிழ்நாட்டில் சுற்றுலா சார்ந்து இருக்கும் வணிகம் மற்றும் வாய்ப்புகளை அறிந்து கொள்ள இங்கிலாந்து சுற்றுலா நிறுவனங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத் துறை நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சுற்றுலா சார்ந்துள்ள வணிகம் மற்றும் வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் இங்கிலாந்து நாட்டின் பா்கிங்காமில் சிறப்பு விளக்கக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டின் 100-க்கும் மேற்பட்ட பயண மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.இதில், தமிழ்நாட்டின் செழிப்பான சுற்றுலா மூலம் வணிகங்களுக்கு சுற்றுலாத் துறை ஏற்படுத்திக் கொடுக்கும் விரிவான வாய்ப்புகள் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்து துறையின் முதன்மைச் செயலாளா் பி. சந்திர மோகன் எடுத்துரைத்தார். துறையின் ஆணையா் சி.சமயமூா்த்தி பேசுகையில், ‘இங்கிலாந்துடனான உறவுகளை வலுப்படுத்த தமிழ்நாடு சுற்றுலா உறுதிபூண்டுள்ளது’ என்றார்.
இங்கிலாந்து சுற்றுலா நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டின் கலாசாரப் பாரம்பரியத்தின் செழுமையை வெளிப்படுத்த, பரதநாட்டியம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், தமிழ்நாட்டின் இயற்கை அழகு, வரலாற்றுத் தளங்கள் மற்றும் புகழ்பெற்ற புலிகள் காப்பகங்கள் குறித்து விளக்கக் காட்சிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. இங்கிலாந்து – இந்தியா ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாட்டின் பரந்த பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகை அறிந்து கொள்ள இங்கிலாந்து நிறுவனங்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
வெம்பக்கோட்டை அகழாய்வில்
ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுப்பு!
சாத்தூர், நவ. 9- வெம்பக்கோட்டை அகழாய்வில் ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை கண்ணாடி மணிகள் கல் மணிகள், சூது பவள கல் மணிகள், முழுமையான சங்கு வளையல், பழங்கால சிகை அலங்காரத்துடன்கூடிய பெண்ணின் தலைப் பகுதி, கி.பி. 16-ஆம் நூற்றாண்டு நாயக்கா் கால செப்புக் காசு, அணிகலன்கள், திமிலுடன்கூடிய காளை உருவப் பொம்மை உள்ளிட்ட 1,800-க்கும் மேற்பட்ட பொருள்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் பழைமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் வேட்டையாடப் பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருள்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்து மக்கள் கட்சி ஓம்கார் பாலாஜி மிரட்டல் பேச்சுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம்
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் போது, நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் ஆர்.கோபால் நாக்கை அறுப்போம் என்றும், தமிழ்நாட்டில் ஆட்சி மாறியவுடன் கையில் விலங்கிட்டு நாயைப் போன்று அவரை இழுத்துச் செல்வோம் என்றும் அநாகரிமாகப் பேசியுள்ளார்.
பத்திரிகையில் வெளியான செய்திகளில் மாறுபாடு இருந்தால், அவற்றை வெளிப்படுத்துவதற்கான வழிமுறைகள் இருக்கும்போது, இது போன்று அநாகரிகமாகவும், மிரட்டும் வகையிலும் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமைக்கும், ஊடக சுதந்திரத்திற்கும் எதிரானது. இத்தகையை போக்கு முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும் என்றும் ஓம்கார் பாலாஜி மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) கேட்டுக்கொள்கிறது.