சென்னை, நவ.9- கிராமப்புற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த திட்டமானது ஒன்றிய, மாநில அரசுகளிடையே 60-40 என்னும் நிதி பகிர்வு முறையை கொண்டு ஊரக பகுதிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களில் உள்ள இளைஞர் களுக்கான திறன் பயிற்சியை வழங்குகிறது.
இத்திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்ட செயலாக்க முகமைகள் மூலம் பல்வேறு திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இதன் மூலம் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு குறைந்தபட்சம் 70 விழுக்காடு பணியமர்வும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தில் தொழில் பாடத்துடன் மென்திறன் பயிற்சிக்காக ஆங்கில அறிவு மற்றும் அடிப்படை கணினி அறிவு பாடத்திட்டங்களும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் ரூ.191.56 கோடி செலவில் 31,927 இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் மாவட்ட அளவில் 529 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1.14 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் திறன் பயிற்சிகள், திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் குறித்து, இளைஞர்களின் சந்தேகங்களை தீர்க்க தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் வாழ்வாதார உதவி அழைப்பு மய்யம் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இளைஞர்கள் 155330 என்ற உதவி எண்ணை அழைத்துஇதுதொடர்பாக கூடுதல் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.