கேள்வி 1: “ஸநாதன தர்மத்திற்கு” அழிவே இல்லை என்று சிருங்கேரி மடத் தலைவர் கூறியிருக்கிறாரே?
– வ.கார்த்தி, திருச்சி
பதில் 1: பின் ஏன் ஸநாதன எதிர்ப்பாளர் களைக் கண்டு அலறுகிறார்கள்?
– – – – –
கேள்வி 2: கேரளாவில் ஹிந்து அய்.ஏ.எஸ். அதிகாரிகள் தனி “வாட்ஸ்-அப்” குழு அமைத்தது குறித்து?
– ம.செல்வம், வேலூர்
பதில் 2: மற்றபடி அங்கே தாமரை முளைக்கவோ, காவி பரவவோ வழியில்லை என்பதால் அரசு அதிகாரத்திலிருப்பவர்கள் மூலம் முயற்சிக்கிறார்கள். இது மாதிரி உத்திக்காகவே ஆர்.எஸ்.எஸ்.சில் அரசு அதிகாரிகள் சேரக்கூடாது என்ற தடை யுத்தரவை நீக்கினார்கள் – சூட்சுமம் புரிகிறதா?
– – – – –
கேள்வி 3: ‘திராவிட மாடல்’ ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், அத்திட்டம் தற்போது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று மக்களிடையே குற்றச்சாட்டு உள்ளதே! இதனை அரசு சரி செய்யுமா?
– எஸ்.முருகேசன், கூடுவாஞ்சேரி
பதில் 3: அரசுத் துறைகள் இதில் அவசியம் கவனம் செலுத்தி, குறைகளைக் களைந்திட முயற்சிகளை எடுக்கத் தவறக்கூடாது.
– – – – –
கேள்வி 4: ‘ஹிந்தி’யில் மட்டுமே பதிலளிக்கும் ஒன்றிய அமைச்சருக்கெதிராக தென் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளது குறித்து?
– வா.அன்புமொழி, திருத்தணி
பதில் 4: எவ்வளவு காலம்தான் தென் மாநிலங்கள் சகித்துக் கொண்டிருக்க முடியும்? ஆதிக்கத்திற்கு எதிரான எதிர் விளைவு ஏற்படாமலா போகும்?
– – – – –
கேள்வி 5: இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சி பா.ஜ.க.வின் மோசமான பொருளாதாரக் கொள்கை யினால்தானே?
– க.காளிதாசன், காஞ்சி
பதில் 5: நிச்சயமாக, அதில் சிக்கியுள்ள பெரும்புள்ளிகள் எல்லாம் உயர்ஜாதி, “தகுதி – திறமை” கார்ப்பரேட்டாளர்களே!
பல பொருளாதார வல்லுநர்கள் அதனால் தான் ரிசர்வ் வங்கிப் பொறுப்பிலிருந்து முன்பு பதவி விலகியும் சென்றனர் போலும்!
– – – – –
கேள்வி 6: ‘திராவிட மாடல்’ அரசை விமர்சிப் பதற்காகவே நடிகரை கட்சி தொடங்கத் தூண்டியுள்ளனர் என்பது போல் தெரிகிறதே?
– சா.மெய்யறிவு, நுங்கம்பாக்கம்
பதில் 6: “பொய்க்கால் குதிரைகளை நம்பி” குதிரைப் பந்தயத்தில் ஈடுபடுவது எப்படி புத்திசாலித்தனமோ?
– – – – –
கேள்வி 7: உத்தரப்பிரதேச சாமியார் அரசு 27,764 தொடக்கப் பள்ளிகளை மூடுவதில் மும்முரம் காட்டுகிறதே?
– இல.சாக்கியமுனி, வியாசர்பாடி
பதில் 7: உண்மையான மனுதர்ம ஆட்சியே உ.பி.யின் காவிச் சாமியார் ஆட்சி என்பதற்கு இதைவிட வேறு ஆதாரமா தேவை?
– – – – –
கேள்வி 8: பாசிசத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்துகொள்வதற்கு வெனிசுலா நாட்டிற்குச் செல்ல சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது குறித்து?
– தே.வெண்ணிலா, புதுக்கோட்டை
பதில் 8: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களது, கருத்துகளை – பேச்சுகளை பறிப்பதன் மூலம் உள்நாட்டினருக்கு மட்டுமல்ல; வெளிநாட்டிற்கும் பிஜேபி ஆட்சி தனது அடையாளத்தைக் காட்டுவது பெருமையே அல்ல – அதற்கு!
– – – – –
கேள்வி 9: சிதம்பரத்தில் என்னதான் நடக்கிறது? தீட்சிதர்களுக்கும்- அய்யங்கார் களுக்கும் இடையே மோதலாமே?
– தி.கார்வேந்தன், திண்டிவனம்
பதில் 9: தீட்சிதர்கள் தனி ராஜ்யம் பூஜ்யத்தில் நடத்த, உயர்நீதிமன்ற குட்டுகளையும அலட்சியப்படுத்துகிறார்கள். தமிழ்நாடு அரசு இதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். கட்டாயம் – அவசரம்.
– – – – –
கேள்வி 10: “40 ஆண்டுகளுக்கு முன் ஒரு குடும்பத்தில் அய்ந்து பிள்ளைகளுக்கு மேல் இருந்த காலத்தில் உலக மக்கள் தொகையில் இந்தியா மூன்றாமிடத்தில் இருந்தாலும் ஹிந்துக்கள் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்தோம். ஆனால், இன்று மக்கள் தொகையில் உலகில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும் ஹிந்துக்கள் எண்ணிக்கையில் பின்தங்கி உள்ளோம். அதற்குக் காரணம் மது உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி தாம்பத்தியத்தில் நாட்டம் இல்லாமல் போனதால்தான். எனவே, போதையை விட்டு விட்டு குழந்தைகளை அதிகம் பெற வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணியால் பொது மேடையில் பேசப்படுகிறதே?
– மன்னை சித்து , மன்னார்குடி-1
பதில் 10: இந்தத் தகவலே தவறானது. இட்டுக்கட்டப்பட்ட பொய்ப் பிரச்சரம் இது.